Thursday, July 12, 2018

ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்வது எப்படி ?

ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்வது எப்படி ?

படித்து முடித்துவிட்டு வேலை வாங்குவதில் முக்கிய பங்கு வகிப்பது மாணவரின் ஆங்கில பேச்சாற்றல், ஆங்கில பேச்சாற்றல் என்ற ஒற்றை தகுதிக்கே வேலை வாய்ப்புகள் உள்ளன. எவ்வளவோ திறமை இருந்தும்,  பட்ட படிப்பில் அதிக மதிப்பெண் இருந்தும் ஆங்கில பேச்சாற்றல் இல்லை என்ற ஒரே காரணத்திற்க்காக வேலை கிடைக்காத எத்தனையோ மாணவர்கள் இருக்கின்றார்கள். வேலை வாய்ப்பை பெறுவதில் முதன்மை பங்காற்ற கூடிய ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.

ஏன் ஆங்கில பேச்சாற்றல் அவசியம் ?

எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும் ஒரே மொழி பேச கூடியவர்கள் இருக்க மாட்டார்கள், தமிழ், இந்தி, தெலுங்கு, மளையாளம் என பல மொழி பேச கூடியவர்கள் இருப்பார்கள், இன்னும் பன்னாட்டு நிறுவனம் (MNC) என்றால் பிரென்ச், ஜாபனீஸ், சீன மொழி என அயல்நாட்டு மொழி பேச கூடியவர்களும் இருப்பார்கள். இப்படி பல மொழி பேச கூடியவர்கள்  இருக்கும் நிறுவனத்தில் பணியாளர்களிடன் உரையாட பொது மொழி தேவைபடுகின்றது, உலகம் முழுவதும் பேசப்படும் பொது மொழியாக ஆங்கிலம் இருப்பதினால் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளுதலை (Communication) வைத்தால் அனைவருக்கும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும், எனவே தான் பெரும்பாலும் எல்லா பெரிய நிறுவனங்களும் பணியில் சேர்வதற்க்கு ஆங்கில மொழிதிறமையை கட்டாயமான ஒன்றாக கருதுகின்றது.

பல நிறுவனங்கள் ஆங்கில மொழி திறமை இல்லை என்றால் வேலை இல்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கின்றன. ஆங்கில மொழியின் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்து மாணவர்கள் ஆங்கிலம் கற்ற முன்வர வேண்டும்.

ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்ள என்ன செய்வது :

செலவில்லாமல் அல்லது மிக குறைந்த செலவில் ஆங்கிலம் கற்க கீழ்காணும் மூன்று வகையான முயற்சிகளை செயல்படுத்துங்கள்.

1. கற்பது (Learning)

2. வாசிப்பது , கேட்பது (Reading and Listening)

3. பேசுவது, சிந்திப்பது (Talking and Thinking)

மேற்சொன்ன மூன்று வழிமுறையையும் ஒரே காலத்தில் செய்யுங்கள் (do it simultaneously) , அதாவது தினமும் கற்ற சிறிது நேரமும், வாசிக்க சிறிது நேரமும், பேச சிறிது நேரமும் ஒதுக்குங்கள், அல்லது வாரத்தில் ஒரு நாள் கற்ற, ஒரு நாள் வாசிக்க , ஒரு நாள் பேச என வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று வழிமுறைகளையும் விரிவாக பார்ப்போம்.

ஆங்கிலம் கற்பது (Learning) :

ஆங்கிலம் கற்க பணம் செலவு செய்து கோசிங் சென்டர் செல்ல வேண்டாம், அல்லது விலை அதிகமான புத்தங்கள் வாங்க வேண்டாம், எளிமையாக ஆங்கிலம் கற்ற 8- ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு ஆங்கில புத்தகங்களை படியுங்கள், இதுவே போதும், இன்னும் கூடுதலாக ஆங்கிலம் கற்ற +2 ஆங்கில புத்தகம் படியுங்கள். 8- ஆம் வகுப்பு புத்தகம் படிக்க கூச்சம் வேண்டாம், அரசு புத்தகங்களில் மிக எளிமையாக ஆங்கிலம் விளக்கப்பட்டிருக்கும். புத்தகங்களை pdf வடிவில் அரசு இணையதளத்தில் இருந்து இலவசமாக download செய்து கொள்ளலாம் அல்லது கடைகளிலில் கிடைக்கும்.

வாசிப்பது , கேப்டது (Reading and Listening) :

அதிகமாக ஆங்கில சொற்றொடர்களை வாசித்தால் தான் நம்முடைய சொல்லாற்றல் (vocabulary) அதிகமாககும், இது தான் பேச நமக்கு உதவும், பொதுவாக அனைவரும் ஆங்கில நாவல்கள் படிக்க சொல்வார்கள், அதை விட நான் பரிந்துரைப்பது, தினமும் ஆங்கில மொழிபெயர்ப்பு குர்ஆன் படியுங்கள், குர்ஆனிலும் வாழ்கைக்கு பயனளிக்கும் பல வரலாற்று நிகழ்வுகள், உரையாடல்கள் உள்ளன. ஆங்கில குர்ஆன் படிக்கும் போதே தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆனையும் சேர்த்து படியுங்கள், இதனால் எந்த ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என எளிதில் அறியலாம், ஏதாவது ஆங்கில வார்த்தை விளங்கவில்லை என்றால் Dictionary App பயன்படுத்தி அறிந்துகொள்ளுங்கள். 

ஆங்கில குர்ஆன் வாசிப்பதால் ஆங்கில அறிவும் வளரும், இறைவனின் அறிவுறையை அறிந்துகொள்வதால் இந்த உலகத்திலும் , மறுமையிலும் உங்களுக்கு பயன் அளிக்கும். மொத்த குர்ஆனும் முடிந்து விட்டது என்றால், ஸஹீஹ் புகாரி,  ஸஹீஹ் முஸ்லீம் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு சேர படியுங்கள், ஆங்கில குர்ஆன், புகாரி,  முஸ்லீம் ஆகியவை ஆன்ட்ராய்டு ஆப்-களாக இலவசமாக கிடைகின்றது.

ஆங்கில  Accent (பேச்சு வழக்கு) திறனை வளர்த்து கொள்ள ஆங்கில பயானை (ஆங்கில இஸ்லாமிய சொற்பொழிவுகளை) கேளுங்கள். சிறந்த முறையில் ஆங்கிலம் பேசும் எந்தனையோ இஸ்லாமிய பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களின் ஆங்கில பயானை கேளுங்கள். இப்படி ஆங்கில பயான் கேட்கும் போது கவனமாக இருக்கவும் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக சொல்லபடும் கருத்துகளை புறகணித்து விடுங்கள், குர்ஆன் ஹதீஸுக்கு ஒன்றிபோகும் கருத்துகளை ஏற்றுகொள்ளுங்கள், குர்ஆனை ஹதீஸை தவிர்த்து இன்ன பிற செய்திகளை இஸ்லாத்தின் ஆதாரமாக எடுத்து கொள்ளாதீர்கள். தொடர்ந்து ஆங்கில பயானை கேட்டுவந்தாலே உங்களுக்கும் ஆங்கிலத்தில் பேச வேண்டும், சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.

கூடுதலாக ஆங்கில செய்திதாள்கள் வாங்கிபடியுங்கள், ஆங்கில செய்தி சேனல்கள் பாருங்கள்.

பேசுவது சிந்திப்பது (Talking and Thinking) :

பொதுவாக பேச பேச தான் மொழி அறிவு வளரும். எனவே மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய சமுதாய மாணவர்களிடம் அதற்க்கான சூழல் இல்லை என்பது உண்மைதான், மீறி நாம் ஆங்கிலம் பேசினாலும் நம்மை கின்டல், கேலி செய்யும் நண்பர்கள் தான் அதிகம்.

ஆங்கிலம் பேசும் சூழலலை உருவாக்க சில ஆலோசனைகள் :

1. முதலில் உங்களை போல ஆங்கிலம் கற்கும் ஆர்வமுள்ளவர்களிடம் பழகுங்கள், உங்களை கேலி செய்யும் நண்பர்களை தவிர்த்துவிடுங்கள் (குறைந்த பட்சம் வேலை வாங்கும் வரையாவது தவிர்த்துவிடுங்கள்).

2. தினமும், பஜர் அல்லது ஏதாவது ஒரு தொழுகைக்கு பிறகு உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து  பள்ளிவாசலில் ஆங்கில குர்ஆன் வாசியுங்கள், ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் வாசியுங்கள், சில நாள்கள் கழித்து ஆங்கிலத்தில் குர்ஆன் வாசித்துவிட்டு குர்ஆன் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லுங்கள், குறிபிட்ட குர்ஆன் வசனம் சம்மந்தமாக விளக்கம் தேவைபட்டால் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க செய்து ஆங்கிலத்தில் பதில் சொல்லுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் குர்ஆனை அறிந்து கொண்ட நன்மையும் கிடைக்கும், அல்லாஹ்வின் அருளால் ஆங்கில மொழி திறனும் அதிகமாகும். குர்ஆன் வசனத்தை படிப்பதால் பெரும்பாலும் யாரும் கின்டல் செய்ய மாட்டார்கள்.

3. வாரத்தில் ஒரு முறையாவது உங்களுக்குள் ஆங்கிலத்தில் பயான் செய்யுங்கள், ஆங்கிலத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துங்கள்.

4. சிந்தனை மொழி : ஆங்கிலத்தில் பேச யாரும் கிடைக்கவில்லை என்றாலும் நம்முடைய சிந்தனையை ஆங்கிலமாக ஆக்குங்கள், பொதுவாக  நாம் ஓய்வெடுத்தாலும் நமது மூளை ஓய்வெடுக்காது, எதையாவது யோசித்து கொண்டே இருக்கும், இந்த யோசனை, சிந்தனையில் உரையாடுவது எல்லாம் தமிழில் தான் இருக்கும், இதை ஆங்கிலமாக மாற்றுங்கள், ஆங்கிலத்தில் யோசியுங்கள், சிந்தனையில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள், சிந்தனையில் ஆங்கிலத்தில் திட்டம் போடுங்கள் என சிந்திக்கும் ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்

சிந்தனை செய்யும் போதோ, பேசும் போதோ குறிபிட்ட ஆங்கில வார்த்தை தெரியவில்லை என்றால் கூகுல் Translator  உதவியை நாடுங்கள் , தமிழ் வார்த்தைக்கும் நிகரான ஆங்கில வார்த்தையை google உடனே வழங்கிவிடும்.

5. மாதிரி இன்டெர்வியூ (Mock Interview) : உங்களை போல் வேலை தேடும் நண்பர்களுடன் சேர்ந்து மாதிரி இன்டெர்வியூ (Mock Interview) நடத்துங்கள், இணையதளத்தில் interview questions என தேடி வரும் கேள்விகளை தொகுத்து ஆங்கிலத்தில் உங்கள் நண்பர் உங்களிடம் கேட்க நீங்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்லுங்கள், ஆங்கிலத்தில் பதில் தெரியவில்லை என்றால் கூகுலின் உதவியை நாடுங்கள், அதன் மூலம் பதில் அளித்து பயிற்சி எடுத்துகொள்ளுங்கள்.

கல்வி கற்க வெட்கம் வேண்டாம் :

கல்வி கற்க வெட்கப்பட கூடாது என்ற இஸ்லாமிய வழிகாட்டுதலை நினைவில் வையுங்கள், யார் கேலி செய்தாலும் ஆங்கிலம் கற்கும் முயற்சியை கைவிடாதீர்கள். ஆரம்பத்தில் கேலி செய்யும் வகையில் தான் நமது ஆங்கில பேச்சு இருக்கும், போக போக பயிற்சி எடுக்க எடுக்க நாம் நன்றாக பேச முடியும், எனவே ஆங்கிலம் பேசும் போது கின்டல், கேலி செய்பவர்களை அலட்சியம் செய்யுங்கள்,  நம்மை கேலி செய்யும் யாரும் நமக்கு வேலை வாங்கி தரபோவதில்லை, நாம் வளர்த்துகொள்ளும் ஆங்கில அறிவுதான் வேலை பெற நமக்கு உதவும்.

விடா முயற்சி :

ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆங்கிலம் படிக்க முயற்சி செய்தோம் என்றிருந்தால் நாள் போக போக ஆர்வம் குன்றிவிடும் எனவே எந்த சூழ்நிலையிலும் முயற்சியை விட்டு விட வேண்டாம், விடா முயற்சிதான் வெற்றியை தரும், ஆங்கிலம் சரளமாக பேசும் வரையில் மேற் சொன்ன வழிமுறைகளை தொடர்ந்து செயல்படுத்துங்கள், அல்லாஹ் நமக்கு உதவி செய்வான், நம்முடைய முயற்சிக்கும், உழைபிற்க்கும் அல்லாஹ் நமக்கு ஆங்கில மொழி திறமையை வழங்குவான் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment