கடும் மழையிலும், கொடும் வெயிலிலும் பாதுகாப்பு தேடி ஒரு மரத்தடியில் அல்லது ஏதேனும் ஒரு மறைவில் பதுங்கிக்கொள்கிறோம். இப்படி எப்போதும் எங்கேயாவது பதுங்கிப் பதுங்கி வாழ முடியுமா? ஆகவே நமக்கென ஒரு வீடு இருந்தால் நல்லது எனத் தோன்றுகிறது. வீடு கட்டும் முனைப்பில் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறோம்.
ஒரு வீடு எப்படி அமைவது நல்லது என ஆளாளுக்கு ஒரு கருத்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் எல்லோருக்கும் உடன்பாடு ஏற்படக்கூடிய அளவில் பொதுவான ஒரு கருத்தும் இருக்கத்தானே செய்யும். அப்படியான விஷயங்களைப் பார்க்கலாம்.
முதலில் நாம் வீடு எதற்காகக் கட்டுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பல வீடுகள் வைத்திருப்போர் பொருளாதார வசதி கைகொடுக்கும் சூழலில் வீடு கட்டினால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வீட்டைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் வங்கிக் கடன், தெரிந்தவர்களிடம் கடன் என அஸ்திவாரம் முதல் கூரை வரை கடனிலேயே வீடு கட்ட முயல்பவர்கள் முடிந்தவரை அநாவசிய செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
நீங்களே கட்டுமானப் பொருள்களை வாங்கி நம்பிக்கையான ஆட்களை வைத்து வீடு கட்டுவது மிகவும் சிறந்தது. ஆனால் அது இயலாத பட்சத்தில் நம்பிக்கையான ஒப்பந்தகாரர்களிடம் வேலையை ஒப்படைக்கலாம். அப்படி ஒப்படைக்கும்போது அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இருந்துவிடாமல் ஒவ்வொரு வேலையையும் நீங்களும் கண்காணித்துவருவது மிகவும் அவசியம். அப்படிக் கண்காணித்து வந்தால் மட்டுமே அநாவசியமான செலவுகளைத் தொடக்க நிலையிலேயே தடுக்க இயலும்.
வீட்டின் பணி தொடங்குவதற்கு முன்னர் வீட்டின் வரைபடம் உருவாக்கப்படும்போதே நீங்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும். சிக்கனமாக வீடு கட்டும் திட்டத்தில் இருக்கும்போது தேவைக்கதிகமான கலை சார்ந்த கட்டிட நுட்பங்கள் அதில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வடிவமைப்பிலேயே கலை சார்ந்த நுட்பங்களுடன் வீடு உருவாக்கப்பட்டால் அதன் செலவும் அதிகரிக்கும்.
நாம் வீடு கட்டுவது வசிப்பதற்கு மட்டுமே, அடுத்தவர் நமது வீட்டைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைக்க வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்போடு செயல்பட்டால் வீடு கட்டும் செலவு அதிகரித்துவிடும் அதனால் கடன் சுமையும் கூடிவிடும். அதே நேரத்தில் வீட்டுக்கு அவசியமான, பாதுகாப்பான விஷயங்கள் என்பனவற்றில் சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அது வீட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் அதற்கான செலவைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. உதாரணமாக அழகான, கலை நயம் மிகுந்த முகப்பு அமைப்பதைவிட உறுதியான சுற்றுச் சுவர் முக்கியம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல் வீடு கட்டும்போது, கட்டுமானப் பொருள்கள் தரமானவையாக இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். நம்மிடம் தரமான கட்டுமானப் பொருள்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு தரத்தில் குறைந்த பொருள்களைக் கொண்டு கட்டிவிட வாய்ப்பு இருக்கிறது. தரம் குறைந்த கட்டுமானப் பொருளைக் கொண்டு வீடு கட்டினால் நமக்கு இரு வகையான நஷ்டங்கள். ஒன்று பொருளாதாரம் தொடர்பானது. மற்றொன்று பாதுகாப்பு தொடர்பானது. ஆகவே அதில் கவனம் அவசியம்.
மேலும் ஒவ்வொரு தருணத்திலும் தேவையான கட்டிடங்கள் மட்டுமே எழுப்பப்பட வேண்டும். வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டிடம் எழும்புகிறதா என்பதைக் கவனிப்பதும் அவசியம். ஒப்பந்தக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றாலும் அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு வேலை; அவ்வளவே. ஆனால் அதன் ஒவ்வொரு செங்கல்லுக்கும் நாம் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைக்க வேண்டும். ஆகவே அநாவசியச் செலவைத் தவிர்ப்பதில் கண்கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்.
வீட்டின் ஒவ்வொரு அறையும் எப்படி அமைய வேண்டும் அதில் என்னென்ன மாதிரியான வசதிகள் வேண்டும் என்பதில் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். வரவேற்பறை, சமையலறை, குளியலறை போன்ற அனைத்து அறைகளிலும் தேவையான வசதிகளை முறையாக அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் எல்லாம் சன்னல்களும், வெண்டிலேட்டர் துவாரங்களும் அமைக்கப்பட வேண்டும்.
முறையான சன்னல்கள் அமையும்போது வீட்டுக்குத் தேவையான வெளிச்சமும் காற்றும் கிடைத்துவிடும். எனவே தேவையின்றி விளக்கேற்ற வேண்டியதில்லை மின்விசிறியைச் சுழலவிட வேண்டியதில்லை. சமையலறையில் அவசியமான இட வசதி வேண்டும்.
மிகவும் நெருக்கமான இடைவெளி இருந்தால் சமையல் வேலையை எளிதாகச் செய்ய இயலாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைப் போன்று ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருந்துவிட்டால் வீடு கட்டிக் குடியேறிய பின்னர் நிம்மதியாக அங்கே வாழலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
முதலில் நாம் வீடு எதற்காகக் கட்டுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பல வீடுகள் வைத்திருப்போர் பொருளாதார வசதி கைகொடுக்கும் சூழலில் வீடு கட்டினால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வீட்டைக் கட்டிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment