சிக்கனமாக இல்லாதவன் சந்தோஷமாக வாழ முடியாது, எவ்வளவு வருமானம் உள்ளவர்களுக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும். இதிலென்ன பெரிதாகச் செலவாகிவிடப் போகிறது என்று நாம் நினைக்கும் விஷயங்கள்தான் பெரும்பாலும் செலவுகளை இழுத்துவைக்கும். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவுக்கும் பொருந்தும். பணம் செலவு செய்ததை எழுதிவைக்க வேண்டும். செலவு செய்வது தேவைதானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வரவுக்குள் செலவை நிறுத்த வேண்டும். இது குடும்ப அமைதியை காக்கும். வீண் செலவுகள் குடும்ப அமைதியைச் சீர்குலைக்கும்.
சிக்கனம் அவமானம் அல்ல
‘எலி வளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்’ என்பதற்கிணங்க ஒவ்வொருவருக்கும் அவரவர் சக்திக்கேற்ற வீடு கட்டாயம் இருக்க வேண்டும். நாளுக்கு நாள் வீட்டு வாடகை அதிகமாகிக்கொண்டே வருவதால் சொந்த வீடு இருந்தால் வாடகைப் பணம் மிச்சமாகும். தற்போது பல இடங்களில் வாடகை இருப்போர் குறிப்பிட்ட ஒரு தொகையை வீட்டு உரிமையாளரிடம் தந்துவிட்டு லீஸ் எடுத்துக்கொள்கின்றனர். லீஸூக்குக் கொடுக்க வைத்திருக்கும் பணத்தோடு வங்கியில் வீடு கட்டுவதற்கான கடனையும் பெற்றால், நமக்கு ஏற்ற வீடு ஒன்றைச் சொந்தமாகக் கட்டிக் கொள்ளலாம். சிக்கனமாகவும் இருக்கும். சிக்கனத்தை அவமானமாகக் கருத வேண்டாம்.
வீட்டில் சிக்கனம்
பழைய மரச்சாமான் கடையில் வேண்டிய கதவு ஜன்னல் அனைத்தையும் வாங்கிவிடலாம். வார்னிஷ் அல்லது பெயிண்ட் அடித்தால் புதியது போலவே இருக்கும். தற்போது பசுமைக் கட்டிடங்கள் வந்துவிட்டன. நீண்டகால நோக்கில் பசுமைக் கட்டிடங்கள் ஆண்டுக்கு 30 சதவிகிதம் மின்செலவை மிச்சப்படுத்துகின்றன. 50 சதவிகிதம் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கின்றன. கூடவே ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன.
பகலில் எந்த அறைகளிலும் மின்விளக்குகள் எரியாத வகையில் ஒவ்வொரு அறைகயையும் போதிய சூரிய வெளிச்சம் மற்றும் காற்று வரும்படி கட்ட வேண்டும். இல்லையென்றால் பெரிய ஜன்னல்கள் அமைக்கலாம். இதனால் வீட்டுக்குள் காற்றோட்டத்துடன் சூரிய வெளிச்சமும் கிடைக்கும். வீடுகளில் ஜன்னல் மற்றும் கதவுகளில் சூரிய பிரதிபலிப்பு மற்றும் ‘டில்டட்’ கண்ணாடிகளைப் பயன்படுத்துவதால் வெளியிலுள்ள வெப்பம் அறைகளுக்குள் வராது.
இதனால் அதிக நேரம் ஏசி, மின்விசிறி போன்றவற்றை இயக்க வேண்டிய தேவையில்லை. ஏசி இருந்தால் அதன் ஏர்பில்டரை மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மாற்றிட வேண்டும். கூரைகளில் தெர்மாகோல், மரப்பலகை போன்றவற்றால் பால்ஸ்சீலிங் செய்தால் அதிக வெப்பம் இறங்காது. வீட்டைச் சுற்றிலும் அழகிய செடி கொடிகள், மூலிகைகள் வைத்தால் போதும்; சுத்தமான காற்று கிடைப்பதுடன் வீடு அழகாகத் தோன்றும்.
மின்சாதனங்களின் கவனம் வேண்டும்
சாதாரணமாக பல்புகளை மாற்றி விட்டு, குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் சில்.எல்.எப் அல்லது காம்பாக்ட் புளோரசண்ட் விளக்குகளைப் பொறுத்த வேண்டும். சிது ‘சாதாரண பல்புகளைவிட 20 சதவிகிதம் மின்சாரத்தைக் குறைவாக எடுத்துக்கொண்டு, அதே நேரத்தில் 10 மடங்கு கூடுதலாக உழைக்கும். ‘ஆரிசன்ஸ்வெட்’ என்பவர் “சிக்கனம் என்பது பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவிடுகிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல; அதை எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறார்கள்” என்பதேயாகும் என்கிறார்.
சூரியஒளி விளக்குகளையும் சூரியஒளி மின்சாரத்தையும் பயன்படுத்தினால் மின்கட்டணத்தில் 80 சதவிகிதம்வரை குறைவு ஏற்படும் (உம்) தண்ணீர் சுட வைப்பதற்குச் சூரிய சக்தியைப் பயன்படுத்தலாம். நடைபாதை மற்றும் பொதுவாக உபயோகிக்கும் இடங்களில், ஆட்கள் நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் வகையிலான விளக்குகள் உள்ளன. ‘டிம்மர்’ மற்றும் ‘டைமர்’ விளக்குகளைப் பொறுத்துவதன் மூலம் மின்சாரச் செலவை மிக அதிக அளவில் குறைக்கலாம்.
தேவையான நேரம் தவிர மற்ற நேரங்களில் மின் விளக்கு, மின்விசிறி, தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்தி மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தலாம்.
வீட்டைவிட்டு வெளியேறும்போது அனைத்து விளக்குகளையும் மின் உபகரணங்களையும் அணைக்க மறக்கக் கூடாது. எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் பிளக்கை மாட்டியே வைத்திருக்கக் கூடாது. புதியதாக மின் உபகரணங்களை வாங்கும்போது அவை மின்சக்தியைச் சேமிக்கும் திறன் பெற்றவையா என்பதற்கான எனர்ஜி ஸ்டோர் லேபிளைப்
பார்த்து வாங்க வேண்டும். மின்சக்தியை அதிகமாக இழுக்கும் பழைய மின் உபகரணங்களுக்குப் பதிலாக, புதியவற்றை வாங்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியை அதிக நேரம் திறந்து வைக்காமலும், விரிய திறந்து வைக்காமலும், அடிக்கடி திறக்காமலும் இருக்க வேண்டும். இதனால் மின்சாரம் மிச்சமாகும்.
தண்ணீர்க் குழாய்களில்...
தண்ணீர் புழங்கும் சமையலறைக்கு அருகிலேயே குளியல் அறைக் கழிவறை போன்றவற்றை அமைப்பதால் பிளம்பிங் செலவு குறையும். சமையலறைக்கு மாடுலர் கிச்சன் போன்றவை செலவு அதிகரிக்கும் என்பதால், கடப்பா கற்களை நம் தேவைக்கேற்ப வடிவமைக்கலாம். காய்கறி உட்பட சமையலுக்குத் தேவையான பொருட்களைத் தயாராகப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். கொதி வந்ததும் தீயின் அளவைக் குறைக்க வேண்டும். முக்கியமாக அடுப்பை சிம்மில் வைத்துச் சமைத்தால் எரிவாயுவைச் சிக்கனப்படுத்தலாம்.
குளியலறையில் உள்ள ஷவர்களில் காற்றுடன் நீர் வெளியேறும் ஷவர்களைப் பயன்படுத்துவதால் குறைவான தண்ணீரே செலவாகும். இது தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். குளியலறை மற்றும் சமையலறைகளில் பயன்படுத்திய தண்ணீரைத் தோட்டங்களிலுள்ள செடி கொடிகளுக்குப் பயன்படுத்தலாம். குளியலறை, கழிப்பறை போன்ற வற்றுக்குப் பிளாஸ்டிக் கதவுகளை உபயோகிக்கலாம். முகம், கை துடைக்கப் பயன்படுத்தித் தூக்கி எறியும் டிஷ்யூ பேப்பர்களுக்குப் பதிலாகத் துண்டையே பயன் படுத்தலாம்.
வீடுகளில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்களை அமைக்காமல் ஒன்றி ரண்டு இடங்களில் மட்டும் குழாய்களை அமைக்க வேண்டும். அதனால் தண்ணீரைச் சிக்கனப்படுத்தலாம். ஆடைகள் அதிகமாக இருக்கும்போது மட்டும் வாஷிங் மிஷின் பயன்படுத்த வேண்டும்.
மின்சார விரயம் தவிர்ப்போம்
கணினி இணைப்பு வயர்கள், ஸ்பீக்கர்கள், இங்க் கேட்ரிட்ஜ், சி.டிக்கள், டிவிடிக்கள் போன்ற கணினி பயன்பாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை மறு பயன்பாட்டிற்கு உரியனவாக உருவாக்கப்பட்டுள்ளன. செல்போனில் சார்ஜ் ஆனவுடன் சார்ஜர்களை அனைத்துவிட வேண்டும். அவை சார்ஜில் இருந்தால் மின்சாரம் வீணாகும். அறைகளைச் சுத்தம் செய்ய ரசாயன கிளீனர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையான கிளீனர்களைப் பயன்படுத்தலாம். ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வருமானம் என்பது உழைத்துப் பணம் கொண்டுவருவது மாத்திரமல்ல. சிக்கனமும்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.
No comments:
Post a Comment