கோடைக்காலம் வந்துவிட்டது. இனிச் சுளீர் வெயிலில், கடும் வெப்பத்தில் அல்லாடவேண்டுமே என எரிச்சல் வரும். வீட்டுக்கு வெளியே சென்றால் நேரடியாகச் சூரியன் நம்மைச் சுட்டெரிக்கும். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெப்பம் தகிக்கும். மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தால்கூட ஏதாவது மலைப்பிரதேசத்துக்குத் தப்பி ஓடிவிடலாமே எனத் தோன்றும்.
அங்குப் பசுமையும், குளுமையும் தவழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹாலிடே ரெசார்டில் தங்கினால் உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் கிடைக்கும் எனும் ஆவல் எழும். எதோ மூன்று நாட்களோ அல்லது ஒரு வாரமோ ஒரு ஹாலிடே ரெசார்டில் தங்கினால் மட்டும்போதுமா?
வெயிலைக் கண்டு ஓடுவதற்குப் பதிலாக உங்கள் வீட்டை அருமையான இடமாக மாற்றலாம். கோடைக்காக உங்கள் வீட்டைத் தயார் படுத்த இதோ சில சுவாரசியமான வழிகள்.
காற்று வரட்டும்
முதலில் வெயிலுக்குப் பயந்து வீட்டின் கதவையும், ஜன்னல்களையும் அடைத்து வைக்காதீர்கள். வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ளே புகும்படி உங்கள் வீட்டின் கதவுகளையும், ஜன்னல்களையும், அகலத் திறந்துவிடுங்கள். உங்கள் வரவேற்பறையின் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் தேவையற்ற பொருள்களை அகற்றுங்கள். பச்சைப் பச்சைப்பசேலென இருக்கும் செடிகளை வீட்டைச் சுற்றி நடுங்கள். தோட்டத்துக்கான இடம் இல்லாதபோது பூந்தொட்டிகளை வீட்டுக்குள்ளேயே வைத்து பராமரிக்கத் தொடங்குங்கள்.
உணவும், மேஜையும்
நாம் ருசித்துச் சாப்பிடும் உணவு சிறப்பாக இருப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல உணவு மேஜையும் அழகாகக் காட்சியளிப்பது அவசியம். குறைந்த செலவில் அலங்கரிக்கப்பட்ட உணவு மேஜையை நம்மால் வடிவமைக்க முடியும். உணவைப் பரிமாறப் பயன்படுத்தும் பாத்திரங்களில் சில சூட்சுமங்கள் உள்ளன.
கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்ட பீங்கான் பாத்திரங்கள் உணவுக்கு மெருகூட்டும். மங்கலான நிறத்தில் இருக்கும் உங்கள் மேஜையின் மேல் வண்ணமயமான விரிப்பைப் பரத்துங்கள். அதே போல நீங்கள் தினசரி சாப்பிடும் உணவுடன் மாம்பழம், தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற கோடைக்காலப் பழ வகைகளைச் சேர்த்துக் கொண்டால் சுவையும் கூடும், அவற்றின் பளீர் நிறம் மனதுக்கு உற்சாகமும் ஊட்டும்.
வீட்டைத் தாண்டி வெளியே
கோடைக்காலத்தில் பகலைக் காட்டிலும் இரவில் வீடு புழுக்கமாக இருக்கும். அப்படிப்பட்ட இரவுகளைக் குளுமையாக மாற்ற முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். வீட்டின் முன் புறத்தில் உள்ள வெராண்டா அல்லது பின்புறப் புழக்கடையில் உள்ள காலி இடத்தில் மங்கலான ஒளிவீசும் மின்விளக்குகள் பொருத்தி, தாழ்வான மேஜைகள் போட்டு, பல வடிவங்களில் அழகுடன் காட்சியளிக்கும் தலையணைகளை தரைமேல் பரப்பி, விண் மீன்களையும், நிலவையும் ரசித்தபடி இரவு உணவு அருந்தலாம். சாதாரண மின் விளக்குகளை அலங்கரிக்கப்பட்ட லேம்ப் ஷேட்களில் பொருத்தினால் இன்னும் ரம்மியமாகக் காட்சியளிக்கும்.
பச்சை நிறமே பச்சை நிறமே!
இன்று நகரங்களில் வசிக்கும் பெரும்பாலோர் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியைப் பொருத்திவிட்டார்கள். ஆனால் இது மட்டும் போதாது. படுக்கை அறையைக் குளுமையான பகுதியாக மாற்றப் பச்சை நிறம் தூக்கலாக இருக்கும் செடி, கொடி டிசைன்கள் அச்சடிக்கப்பட்ட படுக்கை விரிப்பு, தலையணை உறை, போர்வை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். கூடுதல் அழகு சேர்க்கப் பசுமை பின்புலத்தில் தீட்டப்பட்ட ஓவியத்தைச் சுவரில் மாட்டலாம்.
வாசம் செய்யும் வாசம்
மனதை இயக்கும் திறன் சில மணங்களுக்கு உண்டு. வாசனை திரவியங்களால் சில மாயாஜாலங்கள் செய்ய முடியும். அவை வீட்டின் உட்புற அலங்கரிப்பில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. வெள்ளரிக்காய் மணம், மிதமான கடல் காற்றின் மணம் கொண்ட ரூம் ஸ்பிரேயை உங்கள் வீட்டு அறைகளில் தெளித்துப் பாருங்கள் வீட்டின் அழகியல் கூடும்.