Wednesday, October 30, 2019

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம்!!!

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம்!!!

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி 

தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டுமென்ற ஆசை அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டம் (Prime Minister Awas Yojana Scheme - PMAY)

நகர்புற ஏழைகள் மற்றும் குடிசைவாசிகளின் வீட்டு வசதி தேவைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுகாதாரமற்ற சூழலில் வாழக்கூடிய குடிசைவாசிகள், பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் (Economically Weaker Section) மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர் (Lower Income Group) ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியானவர்களாவர்.

விதவைப் பெண்கள், துப்புரவுப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டம் நான்கு வகைகளை கொண்டதாக இருக்கிறது. அதனடிப்படையில் மாநில அரசுகள் பயனாளிகளை தேர்வு செய்து உதவி வழங்கும்.

• சேரிகளை தனியார் பங்கேற்புடன் மறுமேம்பாடு செய்தல்

• மானியம் மூலம் நலிவுற்ற பிரிவினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.6,00,000/- முதல் 12,00,000/- வரை கடன் வழங்குதல் - இத்திட்டத்தில் குறிப்பிட்ட சதவிகித வட்டி தள்ளுபடி செய்யப்படும்

 (குறிப்பு:- நலிவுற்ற அடிப்படையில் வழங்கக்கூடிய கடனுக்கு வட்டியின் அடிப்படையில் இருப்பதால்  முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ளவும்)

• மலிவு விலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும். குடியிருப்பின் கட்டுமான மதிப்பில் 10 சதவிகித தொகையை பயனாளி முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

• நிலம் வைத்திருப்போர் தனி வீடு கட்டுவதற்கான மானியம் அளித்தல். இத்திட்டத்தில் பயனாளிக்கு ரூ.2,10,000/- நான்கு தவணைகளாக வழங்கப்படும். பயனாளிகளின் மூலம் கட்டப்படும் வீடானது 300 சதுர அடிக்கு அதிகமாகவும் 600 சதுர அடிக்கு மிகாகலும் இருத்தல் வேண்டும்.

*தகுதிகள்*
• ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

• திருமணமானவராக இருத்தல் வேண்டும்.

• இந்தியாவில் எங்கும் விண்ணப்பிப்பவர் மற்றும் அவர் குடும்ப அங்கத்தவர்கள் பெயரில் சொந்த வீடு இருத்தல் கூடாது (குடும்பம் என்பது கணவன் மனைவி மற்றும் மணமாகாத பிள்ளைகளை குறிக்கும்).

• தனி வீடு கட்ட உதவி கோரும் பயனாளிகளுக்கு கான்கிரிட் வீடு இருத்தல் கூடாது.

*தேவையான ஆவணங்கள்*

• வருமான சான்றிதழ் (சுயசான்றிதழ் - Self Affidavit)

• ஆதார் அட்டை

• நில உரிமை பத்திரம் அல்லது பட்டா

• வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை

• வங்கி கணக்கு புத்தகம்.

*விண்ணப்பிக்கும் முறை*

இத்திட்டத்திற்கு *www.pmaymis.gov.in* என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இறைவன் நாடினால், எவ்வாறு விண்ணப்பிப்பது வீடியோ பதிவாக ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment