Sunday, August 16, 2015

சொத்து பராமரிப்பு


ஒரு சொத்து வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அத்தனை விவரங்களையும் அலசி ஆராய்வோம். அந்த சொத்து எந்த பகுதியில் அமைந்திருக்கிறது? அருகில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்வோம்.

பராமரிப்பு

அப்படி சொத்து வாங்கும்போது எத்தகைய அக்கறையை செலுத்துகிறோமோ? அதில் பாதி அளவிற்காவது அந்த சொத்தை பாதுகாப்பதற்கு கவனம் செலுத்துகிறோமா? என் பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சொத்தை பாதுகாப்பது என்பது அடிக்கடி நேரில் சென்று பார்வையிடுவதுடன் முடிந்துவிடும் விஷயமில்லை. அந்த சொத்து ஆவணங்களை முறையாக பராமரித்து வருவதையும் பாதுகாப்பு விஷயமாக எடுத்துக்கொண்டாலும் அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக பத்திரப்பதிவு செய்தவுடன் அந்த சொத்து நமக்கு கைமாறிவிடும் என்றாலும் அந்த சொத்துக்கான பட்டாவை நம்முடைய பெயரில் மாற்றிவிட்டோமா என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். சில சமயங்களில் நிலத்தை நமக்கு விற்பனை செய்பவர் பெயரில் பட்டா இருக்காது. அவருடைய பெற்றோர் பெயரில் இருக்கும்.

பட்டா மாறுதல்

அப்படி இருக்கையில் அவர் தன்னுடைய பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நாம் அவரிடம் இருந்து சொத்து வாங்கியவுடன் நம்முடைய பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு எளிதாக இருக்கும்.

பட்டா மாறுதல் செய்வதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது உங்கள் தந்தை அல்லது தாயாரின் பெயரில் நிலம் வாங்கப்பட்டிருந்து அவர்கள் இறந்துவிட்டால் தொடர்ந்து அவர்கள் பெயரிலேயே பட்டா இருந்தால் பின்னாளில் பிரச்சினை ஏற்படும். உடனே வாரிசுரிமை சான்றிதழ் பெற்று உங்கள் பெயருக்கு மாற்றிகொள்ள வேண்டும்.

ஆவண சரிபார்ப்பு

உங்கள் பெயரில் பட்டா வாங்கி வைத்திருந்து அதை பாதுகாத்து அந்த சொத்துக்கு தொடர்ந்து வரி செலுத்தி விட்டு வந்தால் மட்டும் போதாது. பட்டாவில் இருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? வருவாய்த்துறை ஆவணங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். இணையதளம் மூலம் சரிபார்க்கும் வசதி இருப்பதால் அடிக்கடி சொத்து உங்கள் பெயரில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் போலி பட்டா மோசடி நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும். சொத்து வாங்கும்போது எப்படி வில்லங்க சான்றிதழ் வாங்கி சொத்து பரிமாற்ற விவரங்களை சரி பார்த்தோமோ அதேபோல் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் உங்கள் பெயரில் இருக்கும் சொத்துக்கும் வில்லங்க சான்றிதழ் வாங்கி சரிபார்க்க வேண்டும்.

வில்லங்க சான்று விவரம்

அப்படி பார்க்கும்போது நீங்கள் பத்திரப்பதிவு செய்த நாளுக்கு பிறகு ஏதாவது சொத்து பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் சொத்து பத்திர நகல் களை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது. தற்போது இணையதளம் வாயிலாகவே வில்லங்க சான்று விவரங்களை சரிபார்க்கும் வசதி இருப்பதால் அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும்.

சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலோ அல்லது சொத்து தொடர்பான எந்த விவகாரமாக இருந்தாலும் முதலிலேயே மூல ஆவணங்களை எடுத்து செல்லக்கூடாது. அதன் நகல் ஆவணங்களைத்தான் எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் ஆவணங்கள் தொலைந்து போக நேரிட்டால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆவண குறிப்பு

வீட்டில் எப்போதும் நகல் ஆவண பிரதிநிதிகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சொத்தின் சர்வே எண், பட்டா எண், பத்திர பதிவு விவரங்கள் குறித்த எண்கள் போன்ற விவரங்களை டைரியில் எழுதி வைக்க வேண்டும். ஒருவேளை மூல ஆவணங்கள் காணாமல் போய்விட்டாலோ அல்லது சேதம் அடைந்துவிட்டாலோ இந்த விவரங்கள் மீண்டும் சொத்து ஆவணங்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

அதுபோல நீங்கள் வாங்கியிருக்கும் சொத்து பற்றிய விவரங்களை உங்கள் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் மைனராக இருந்தால் பருவ வயதை எட்டும்போது சொத்து விவரங்களை அவர் களிடம் கூறுவது அவசியம். ஒருவேளை உங்களுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ அல்லது உங்கள் காலத்திற்கு பிறகு அந்த சொத்தை மற்றவர்கள் யாரும் நிலமோசடியோ, அபகரிப்போ செய்யாமல் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment