
சொந்த வீடு என்பது எல்லோருக்குமே அமைந்துவிடாது. சொந்த வீடு என்ற பெருங்கனவை அடைய எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பதை அதில் அனுபவ ரீதியாக உணர்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய சொந்த வீடு கதையைப் படித்தால் அது உங்களுக்குப் புரியும்.
எனக்கு இப்போது 68 வயதாகிறது. தோட்டத்துடன் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது என்னுடைய வாழ் நாள் கனவு. 5 ஆயிரம் சதுரடி மனை வாங்கி, தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டைக் கட்டி என் கனவை நனவாக்கினார் என் கணவர். ஆனால், கட்டிய வீட்டில் நிறைவாக வாழமுடியவில்லை.
என் கணவருக்கு வெளியூருக்குப் பணி மாற்றல் ஆனது. சொந்த வீட்டை விட்டுவிட்டு அங்கு ஒரு சிறிய வீட்டில் வாடகை வீட்டில் குடியேறினோம். சொந்த வீட்டில் இருக்க முடியவில்லையே என்ற கவலை. இருந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் சொந்த வீடு இருக்கிறதே என்பதில் ஆறுதல் கிடைத்தது.
காலத்தின் கொடுமையை என்ன சொல்வது? என் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்தார். இடி என் தலையில் இறங்கியது. அவரின் மாதச் சம்பளம் என்ன? வரவு, செலவு என்ன? என்று எதுவும் எனக்குத் தெரியாது.
அவர் என்னிடம் இதைப் பற்றியெல்லாம் சொன்னதும் இல்லை. நான் கேட்டதும் இல்லை. அது அந்தக் காலம். எங்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் இருந்தனர். இருவரும் அப்போது படித்துகொண்டிருந்தார்கள்.
என் கணவர் பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்தார். அப்போதெல்லாம் இந்தளவுக்கு சம்பளம் கிடையாது. வங்கியில் வீட்டுக் கடன் வேறு இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வங்கி மூலம் கிடைத்த தொகையோ மிகமிக சொற்பமாக இருந்தது.
என் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டும். தடுமாறி நின்ற எனக்கு அந்த வீடுதான் வாழ்வின் ஊன்றுகோலாக இருந்தது. வீட்டை விற்று அதன் கடனை அடைத்தேன். மீதிப் பணத்தில் சிறு தொகையை எடுத்து 3,500 சதுரடிக்கு ஒரு மனையை வாங்கி, வீட்டின் மீது இருந்த ஆசையை அப்போதைக்குத் தணித்துக் கொண்டேன்.
இதன் பின் எனக்குத் தெரிந்த சிறுசிறு தொழில்களைச் செய்தேன். காலம் ஓடியது. என் மகன் இன்ஜினீயரிங் படித்துமுடித்தான். சொந்தமாக தொழில் செய்ய நினைத்தான். நான் ஏற்கனவே வாங்கி போட்டிருந்த அந்த மனை உள்ள இடம் நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. வீடு கட்டலாம் என பூமி பூஜையும் போட்டிருந்தேன்.
ஆனால் மகன் சொந்த தொழிலில் முதலீடு போடுவதற்கு பணம் கேட்டான். வேறுவழியில்லாமல், பூமி பூஜை போட்ட நிலத்தை விற்று அவனுக்குப் பணம் கொடுத்தேன். அவன் தொழிலும் நல்லபடியாக வளர்ந்தது. மகனுக்குத் திருமணம். குழந்தை பிறப்பு எல்லாம் நடந்தது. ஆனால் என் வீட்டுக் கனவு முழுமை பெறாமல் இருந்தது.
நான் நடத்திவந்த சிறுசிறு தொழில்களையும் முடிவுக்குக் கொண்டுவந்து, பணத்தைத் திரட்டி னேன். என் பிள்ளைகளிடம் என்னுடைய வீடு ஆசையைக் கூறினேன். “யாருடைய பணமும் எனக்கு வேண்டாம். என் உழைப்பில் கிடைத்த பணத்தில் வீடு கட்ட வேண்டும்” என்றேன். அதற்கு பிள்ளைகள் ஒத்துழைத்தார்கள்.
இருக்கும் பணத்தில் மனை வாங்கினேன்.என் மகன் இன்ஜினியர் என்பதால் அவனே வீட்டுக்கான பிளான் போட்டுக் கொடுத்தான். மளமளவென்று வேலைகள் நடந்தன. அழகாக, கம்பீரமாக எழும்பியது என்னுடைய கனவு வீடு.
என்னால் நம்ப முடியவில்லை. இது என் வீடா? கடவுளுக்கு நன்றி சொன்னேன். என் மகன் பிறந்தபோது எப்படி என் மனம் சிறகடித்துப் பறந்ததோ, அதேபோன்ற பரவச அனுபவம் என் வீட்டின் கிரகப் பிரவேசத்தின் போதும் ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரையில் வீடு என்பது சொத்து மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை அடுத்த தலைமுறைக்குக் காட்டும் காலக் கண்ணாடி.
- விமலா பாலகிருஷ்ணன், வேளச்சேரி, சென்னை
வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
சொந்த வீடு, தி இந்து,
கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை- 600 002.
No comments:
Post a Comment