வீடு என்றால் வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல. அதை உயிர்ப்புள்ளதாக மாற்ற வீட்டுக்கு ஓர் அழகான தோட்டம் வேண்டும். வீடு கட்டும் ஒவ்வொருவருக்கும் இந்த ஆசை இருக்கும். சிலருக்கு நிறைவேறும். சிலருக்கு ஏக்கமாகத் தேங்கிவிடும்.
நாங்கள் எங்கள் வீட்டுக் காலி இடங்களில் கட்டிடத்தில் இருந்து சில அடிகள் தள்ளி 20 அடி இடைவெளியில் ஐந்து தென்னங்கன்றுகள் நட்டோம். தற்போது 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அந்த மரங்கள், நன்கு காய்த்துப் பலன் தருகின்றன.
அவை எங்கள் வீட்டுத் தேங்காய், தேங்காய் எண்ணெய்த் தேவையகளையும் பூர்த்திசெய்கின்றன. மேலும் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வரும்போது தேங்காய்கள் கொடுத்தனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இது தவிர எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும் போது தேங்காய்களை இலவசமாக வழங்குவோம். தென்னை மரங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் செக்கூர் மானிஸ் என்ற விட்டமின் சத்து உள்ள கொண்ட கீரை, கறிவேப்பிலை, முருங்கை, பப்பாளி போன்றவற்றை நட்டுப் பலன் அடைந்தோம்.
காலி மனையின் ஒரு பகுதியில் எட்டு அடி இடைவெளியில் மா, விதையில்லா ஒட்டு மரக் கன்றுகள் வைத்து நீர்ப் பாய்ச்சினோம். இவை மூன்றாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கி, ஐந்தாம் ஆண்டு முதல் மரத்துக்கு 200, 300 காய்கள் அளித்தன. இவற்றை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அளித்து மகிழ்ந்தோம்.
மற்றொரு பகுதியில் பாத்திகள் அமைத்து வெண்டை, அவரை, பீன்ஸ், கொத்தவரை, கீரை வகைகளையும் பயிரிட்டு வீட்டுத் தேவைக்குப் பறித்துப் பயன்படுத்தினோம். வீட்டின் பகுதியில் சமையலறை, குளியலறைக் கழிவு வெளியேறும் இடத்தில் சுமார் ஆறு அடி இடைவெளியில் பியன் மரக் கன்றுகள் இரண்டை நட்டோம். இவை கழிவு நீரைப் பயன்படுத்தி நன்கு வளர்ந்தன.
இம்மரங்களுக்குப் பூச்சி நோய்த் தாக்குதல் குறைவு. பராமரிப்பதும் மிக எளிது. ஐந்து வருடங்களுக்குப் பின் இவை இரண்டரை அடி விட்டமும் இருபது அடி உயரமுமுள்ள பெரு மரங்களாக வளர்ந்தன. ஏழாம் வருடம் அவற்றை நல்ல விலைக்கு விற்றோம். வீட்டைச் சுற்றியுள்ள காலி இடங்களில் வாழை மரம் நட்டோம்.
அதில் உள்ள இலைகளைப் பறித்து விருந்தினர்களுக்கு உணவு பரிமாறினோம். வாழைத்தாரும் கிடைத்தது. வீட்டின் முன்பகுதியில் செம்பருத்தி, அரளி, நந்தியாவட்டை போன்ற பல பூச்செடிகளைப் பயிரிட்டோம். இவை எங்கள் வீட்டுத் தேவையை மட்டுமல்லாது எங்கள் பகுதிக் கோயிலின் தேவையையும் பூர்த்திசெய்கின்றன. இந்தத் தோட்டம் அது மனதுக்கு நிறைவையும் சந்தோஷத்தையும் அளித்துவருகிறது.
வாசகர்கள் கவனத்திற்கு...
இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். வீட்டைப் பராமரிப்பது, தோட்டம் அமைப்பது ஆகியவை தொடர்பான உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
சொந்த வீடு, தி இந்து கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.
No comments:
Post a Comment