
சொந்த வீடு பலரின் நீண்ட கால கனவாக இருந்து நிஜமாகும்போது அவர்கள் வாஸ்து, உள் அலங்காரம், வெளித் தோற்றம் இவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். ஆனால் மனையின் சுற்றுப்புறச் சூழல், மண் தன்மை ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்துவதில்லை.
இதனால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்காகவது தாக்குப் பிடிக்க வேண்டிய கட்டிடம் அதன் தூண்கள் தாங்கும் தன்மையற்றுப் போதல், சுவர்களில் விரிசல், தரை கீழிறங்குதல் ஆகியவை ஏற்படுகின்றன. குறிப்பாகப் பள்ளமான பகுதியில் நீர் நிலைக்கருகில் வீடு கட்டும்போது இத்தகைய பாதிப்புகள் ஏற்படலாம்.
மண் பக்குவப்படுத்துதல்
பள்ளமான நிலப்பரப்பில் பல அடுக்குப் பெருங்கட்டிடங்கள் கட்டும்போது நிலத்தில் மண்பரிசோதனை செய்யப்பட்டு, பள்ளத்தை மண்கொட்டி நிரப்புகின்றனர். இது ‘போடு மண்’ (Loose Soil) என அழைக்கப்படுகிறது. இந்த மண்ணை அதற்கேற்ற தகுந்த கருவிகள், இயந்திரங்களைக் கொண்டு நெருக்கி (Soil Compaction) செய்யப்பட்டு மண் உறுதிப்படுத்தப்பட்டு (Soil Stabilization)கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இவ்வாறு செய்யப்படாத கட்டுமானங்களே விபத்துகளைச் சந்திக்கின்றன.
தற்காலத்தில் கட்டுமானத்தில் இயற்கையால் வரும் பாதிப்புகளைவிட மனிதப் பிழைகளாலும், கட்டுமானப் பிழைகளாலும் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளது. தாழ்வான பகுதியில் சிறு வீடுகட்டுவோர் முதலில் பள்ளத்தை மண்கொட்டி நிரப்புகின்றனர். போடு மண் பொதுவாக இறுக்கமற்ற மண்ணாக இருக்கும். அதற்கு அதிக அழுத்தத்தைத் தாங்கும் வலிமை இருப்பதில்லை.
இதன் மேல் அஸ்திவாரம் அமைந்தால் போடு மண் அழுந்தி இறுகும் சூழ்நிலையில் கட்டிடம் விரிசலோ, கீழிறங்கவோ அல்லது பகுதியாக உடையவோ வாய்ப்பு உருவாகிறது. இதைத் தவிர்க்க இறுக்கமும் அழுத்தமும் மண் பெற்றிருக்கும் இயற்கையான நிலப்பரப்பில் அஸ்திவாரத்தை அமைத்துத் தேவைப்படும் உயரத்துக்கு அடித்தளம் அமைக்கலாம்.
இது சிறு கட்டுமானங்களுக்கு மட்டுமே சாத்தியம். மண் கொட்டி உயரப்படுத்துவதைவிட அடித்தளம் அமைப்பதே சிறந்தது. அடித்தளம் அமைப்பது செலவாக இருக்கும் என நினைக்க வேண்டும். இதனால் கட்டிடம் உறுதி பெறும். பிற்காலத்தில் கட்டிடத்துக்குப் பாதிப்பு ஏற்படும்போது இந்தச் செலவு ஒன்றுமே இல்லை.
குழிகளைச் சரிசெய்தல்
தூண்களுக்குக் குழிகள் தோண்டும்போது ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும். பல அடுக்குப் பெருங்கட்டிடங்கள் கட்டும்போது நிலத்தில் குழிகள் தகுந்த கருவிகளை, சாதங்களைக் கொண்டு அளவிடப்பட்டுச் சரியான மட்டங்கள் குறிக்கப்பட்ட குழிகள் தோண்டப்படுகின்றன. ஆனால் சிறுகட்டுமானங்களில் தேவைப்படும் ஆழங்களுக்கு ஏற்ப நிலத்தின் மேற்பரப்பில் இருந்து அளவிடப்பட்டுக் குழிகள் தோண்டப்படுகின்றன.
மேல் பரப்பில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்பட்சத்தில் குழிகள் அளவில் ஒன்றாக இருந்தாலும் அடிப்பரப்பில் ஒரே மட்டத்தில் இருப்பதில்லை. குழிகள் தேவைப்படும் ஆழத்தைக் காட்டிலும் ஒன்றுக்குக்கொன்று அதிகமாக இருந்தால் ஆற்று மணலைக் கொட்டிச் சமப்படுத்திக்கொள்ளலாம். குழிகள் தேவைப்படும் ஆழத்தைவிட ஒன்றுக்கொன்று குறைவாக இருந்தால் தூணிலிருந்து வரும் கட்டிடத்தின் சுமை பூமிக்குச் சமமாக விநியோகித்தல் (Equal Disribution of Load) பாதிப்படையலாம்.
இதனால் கட்டிடம் பாதிக்கப்படும். இதைத் தடுக்க ஒரு குழியை மாதிரியாக வைத்து டியூப் லெவல் மூலம் அனைத்துக் குழிகளுக்கும் மட்டம் கடத்தப்பட வேண்டும். அனைத்துக் குழிகளும் ஒரே மட்டத்தில் சமமான முறையில் இருத்தல் நன்று. சிலர் குழிகளுக்கு டியூப் லெவல் மட்டம் தேவையில்லை என்று சொல்வதெல்லாம் சரியல்ல.
- கட்டுரையாளர், கட்டிடப் பொறியியல் துறைப் பேராசிரியர்
No comments:
Post a Comment