அழகிய கடற்கரைப் பகுதிகளிலோ, நதியோரங்களிலோ, ஏரிகளை ஒட்டியோ வில்லாக்களைக் கட்டி விற்கும் போக்குக்கு இப்போது பெரிய வரவேற்பு. பெரும் பணக்காரர்கள் மட்டும் வில்லாக்கள் கட்டினார்கள் என்பது பழைய கதை. இப்போது ஓரளவு வசதி வாய்ப்பு உள்ள அனைவருமே வில்லாக்களை அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த வில்லாக்கள் எனும் வழக்கம் ரோமர்களிடம் தொடங்கியது. ரோமப் பேரரசின் காலத்தில் உயர் குடியினர் வசிப்பதற்காகக் கட்டப்பட்டவை வில்லாக்கள்.
வசீகரமான ரோமர்களின் வில்லாக்கள் கால ஓட்டத்தில் பலவகையான கட்டிடக் கலை அம்சங்களையும் உள்வாங்கிக்கொண்டு தமது வடிவங்களைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டே வருகின்றன.
ரம்மியமான தோற்றம்
கற்கள், மரம், செங்கற்கள் ஆகியவற்றால் ஆன வடிவமைப்பில் எழுந்து நிற்பவை அவை. ஆரம்ப காலத்தில் இத்தகைய வில்லாக்களின் சுவர்கள் சிமெண்ட் கொண்டே உருவாக்கப்பட்டன. பின்னர் இந்தச் சுவர்களைக் கற்களைக் கொண்டு கட்டிக்கொண்டனர்.
அழகிய ஓடுகளால் இந்த வில்லாவின் கூரைகளைச் சரிவாகவோ சமதளமாகவோ ஏற்படுத்திக்கொண்டனர். வில்லாவின் தரைத் தளத்தை கான்கிரீட் மூலம் வளப்படுத்தினர். பொதுவாக ரோமர்கள் வில்லாக்களை அமைக்கும்போது, ஒரு திறந்த வெளி மைதானமும், குளமும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.
கோடைக் காலங்களில் வெளிச்சமும், காற்றும் எளிதாகக் கிடைக்கும் வகையில் வில்லாக்கள் அமைக்கப்படும். இரவு நேரங்களில் உள்புறங்களில் காணப்படும் இடைவெளிப் பகுதியில் எண்ணெய் விளக்குகளை ஒளிரவிடுவார்கள். அப்போது ரம்மியமான தோற்றத்தில் வில்லாக்கள் மின்னும்.
அந்தஸ்தின் அடையாளம்
வில்லாக்களைப் பல பகுதிகளாக அமைத்துக்கொள்வார்கள். குடும்பத்தினர், விருந்தினர், வேலையாள்கள், அடிமைகள் போன்ற அனைவருக்கும் இடமளிக்கும் வகையில் ஒரு ரோமன் வில்லா பரந்து விரிந்து இருக்கும். இது போக வீட்டில் விலங்குகளைப் பராமரிக்கும் பகுதியும், தானியங்களைச் சேமிக்கும் கிடங்கும் அமைக்கப்படும். இப்படியாக ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தேவையையும் சமாளிக்கும் வகையில் ஒரு முழு வில்லா இருக்கும்.
ரோமன் வில்லா என்பது வெறும் வீடல்ல. அது அந்தஸ்தின் அடையாளம். அந்த வீட்டில் வசிக்கும் தலைவர் சமூகத்தில் பெற்றிருக்கும் கவுரவத்தைச் சிறப்பிக்கும் வகையில் வில்லா அமையும். அவரது அதிகாரத்தையும் சமூக மதிப்பையும் அது எடுத்துக்காட்டும்.
ஆகவே வில்லா அமைக்கும் அனைவருமே அதைத் தங்களால் இயன்ற அளவு ஆடம்பரமாக அனைத்து வசதிகளும் கொண்டதாகவே அமைப்பார்கள். பார்ப்பவர்கள் கவனத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே தங்கள் வில்லா ஈர்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கவனமாக இருக்கும்.
இளைப்பாறுதலுக்கான இடம்
நகர்ப்புறத்தில் அதிக இட வசதி இருக்காது என்பதால் அங்கே அமைக்கப்படும் வில்லா எனும் வீடு சிறிய அளவிலான ஆனால் தேவையான வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்படும்.
எனவே புற நகர்ப் பகுதியிலோ, கிராமங்களிலோ தங்களுக்குத் தேவையான பெரிய அளவிலான வில்லாக்களை உயர் குடியினர் கட்டிக்கொள்வார்கள். கோடை காலங்களில் அங்கே சென்று தங்களது பொழுதைக் கழிப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தனர்.
விவசாய வணிகம் தொடர்பான நடவடிக்கைகளிலும் ரோமர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. எனவே கிராமப் பகுதிகளில் நிலங்களை வாங்கி அதையொட்டி வில்லாக்களை பண்ணை வீடுகளைப் போல் கட்டி வசிப்பார்கள். இவர்கள் கடற்கரையோர வில்லாக்களைக் கட்டுவதிலும் ஆர்வம் காட்டினர்.
நகரத்தின் இறுக்கமான வாழ்விலிருந்து சிறிது இளைப்பாற வேண்டி இந்தக் கடற்கரையோர வில்லாக்களுக்கு வருவார்கள். ஆரோக்கியமான கடற்காற்று வளைய வளைய வரும் வீடுகளில் சில காலம் தங்கியிருந்து ஆசுவாசம் அடைந்து மீண்டும் பரபரப்பான நகரத்து வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.
வில்லாக்கள் பல வகையான வேலைகளுக்கும் உதவும்படியான வசிப்பிடங்கள். வில்லாக் களிலேயே சில அலுவலகப் பணிகள் நடைபெற அவசியமான அறைகள் அமைக்கப்படும்.
வர்த்தகச் சந்திப்புகள், விருந்தினர் சந்திப்புகள் ஆகியவற்றுக்கான சவுகரியங்களும் இடம்பெற்றிருக்கும். எல்லா சவுகரியங்களும் உள்ள வில்லா ஒன்று இருந்தால் வசதியாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறதா?