வீடு கட்டுவது எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை லட்சியம். அதைக் கட்டுவதற்காக சிறுகச் சிறுகச் சம்பாதித்து வங்கிக் கடன் வாங்கி வீட்டைக் கட்டுவோம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரைச் சேர்ந்த எல்வீஸ் என்பவர் ஒரு வீட்டை ஒரே நாளில் கட்டி முடித்திருக்கிறார். யாருக்காக இந்த வீட்டைக் கட்டினார், எவ்வளவு செலவழித்தார், என்ற பல கேள்விகள் எழுகின்றன இல்லையா?
எல்வீஸ் வழக்கம்போல் தன் அன்றாடப் பணிகளுடன் வீட்டில் இருந்திருக்கிறார். அந்தச் சமயம் அவரது வீட்டின் அழைப்புமணி ரீங்காரமிட்டுள்ளது. கதவைத் திறந்து பார்த்தபோது வெளியே அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி நின்றிருக்கிறார். அவரது பெயர் ஸ்மோக்கி.
அநாதையான அந்த மூதாட்டி, உபயோகிக்கப்படாத பழைய பொருள்களை சேகரித்து அதை மறு சுழற்சி செய்யும் நிறுவனங்களில் விற்று தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துவருபவர். அவர் வீடற்றவர். படுத்துறங்க சிறு குடிசை கூட இல்லாமல் சிரமப்பட்டுவருபவர். அவர் எல்வீஸின் வீட்டுக் கதவைத் தட்டியதன் காரணம், அவரது வீட்டில் உள்ள பயன்படாத பொருள்களை வாங்கிப் போவதற்காக வந்திருந்தார்.
வழக்கம்போல் தனக்குப் பயன்படாத பொருள்களைத் தர எல்வீஸுக்கு விருப்பம் இல்லை. அவருக்கு வேறு ஏதாவது செய்து தர வேண்டும் என விரும்பினார். உடனடியாக உருவானதுதான் இந்தத் திட்டம். மரச் சட்டங்களையும் ஆணிகளையும் வாங்கினார். வேலையைத் தொடங்கிவிட்டார். எட்டு அடிக்கும் சற்று நீளமான நான்கு அடிக்கும் சற்று அகலமான ஒரு குட்டி வீட்டை உருவாக்கிவிட்டார்.
இதற்கு அவருக்கு ஆன மொத்த செலவு 500 டாலர். இந்த வீட்டு ஒரு குட்டி ஜன்னலும் அமைத்துள்ளார். அதற்கு கதவைப் பொறுத்தி அதன் சாவியை ஸ்மோக்கியிடம் எல்வீஸ் அளித்துள்ளார். தன் புதுவீட்டை ஸ்மோக்கி ஆசையுடன் திறந்து பார்த்து சந்தோஷப்படும் காட்சி யூடியூப்பில் பல லட்சம் பார்வைகளைத் தாண்டியிருக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, எல்வீஸ் இதை ஒரு பிரச்சாரமாக மேற்கொண்டுள்ளார். வீடற்றவர்களுக்காக இம்மாதிரியான வீட்டைக் கட்டித் தர முடிவெடுத்துள்ளார்.
No comments:
Post a Comment