காட்டுக்கு நடுவில் வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கலாம். பேருந்தில் பயணிக்கும்போது மலைகளின் அடிவாரத்தில் உள்ள வீடுகளைப் பார்க்கும்போது நம் வீடும் இப்படி மலைகளுக்கு நடுவில் அமைந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் உண்டாகும். ஏன் வான் வெளியைச் சுருட்டி வீட்டின் வரவேற்பறைக்குள் விரித்துவிட வேண்டும் என்ற ஆவலும், கடலைக் கோரி வீட்டின் குளியலறைத் தொட்டிக்குள் கொட்டிவிடும் பேராசையும் உண்டாகும் சிலருக்கு.
இது எல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என அலுத்துக்கொண்டு நம் வேலைகளுக்குத் திரும்பிவிடுவோம். ஆனால் இவையெல்லாம் சாத்தியமாகாவிட்டாலும் அறிவியல் வளர்ச்சியால் அதன் நிழலை நிஜம்போல் உருவாக்கி இருக்கிறார்கள் கட்டிடத் துறை வல்லுநர்கள். அதாவது முப்பரிமாண டைல்களை (3D Tile) உருவாக்கி இருக்கிறார்கள். இந்த முப்பரிமாண முறை டைல்களில் நாம் விரும்பும் காட்சியை உருவாக்கி நம் வீட்டுக்குள் பதித்துக்கொள்ளலாம்.
உங்களுடைய ரசனைக்கு ஏற்ப வெவ்வேறு விதமான டைல்களை அறைகளுக்குத் தகுந்தாற் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தியாவிலும் இப்போது முப்பரிமாண டைல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அதில் வகைகள் குறைவாக உள்ளன. கணினி வடிவமைப்புகள், பூக்கள் போன்றவை இப்போது அதிக அளவில் கிடைக்கின்றன. ஆனால் விரைவில் பலவிதமான வகைகள் விரைவில் இந்தியச் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த வகை டைல்கள் வீட்டின் தளத்தை அலங்கரிப்பதோடு அல்லாமல் வீட்டுக்கே புதுவிதமான அழகைக் கொண்டுவந்து தந்துவிடும். உதாரணமாகக் குளியலறைக்கு நீங்கள் மீன்கள், டால்பின்கள் உலாவும் கடல் காட்சியைச் சித்தரித்தால் அது உங்கள் குளியலறையை இந்தியப் பெருங்கடலுக்கு மத்தியில் உள்ளதுபோல ஆக்கிவிடும். சமையலறைக்கு ஒரு வனக் காட்சியைச் சித்திரிக்கலாம்.
பளபளக்கும் இந்த டைல்கள் வழுக்கிவிடுமே எனப் பயம் தேவையில்லை. தேவையான அளவு சொரசொரப்புத்தன்மை கொண்டதுதான்.
பளபளக்கும் இந்த டைல்கள் வழுக்கிவிடுமே எனப் பயம் தேவையில்லை. தேவையான அளவு சொரசொரப்புத்தன்மை கொண்டதுதான்.
அதுபோல் குழந்தைகள் அறையில் வண்ணத்துப்பூச்சிகள், பூக்கள் கொண்ட ஒரு சிறிய தோட்டக் காட்சியைக் கொண்டு அலங்கரிக்கலாம்.
வியப்பை அளிக்கும் இந்த 3D டைல்கள் உங்கள் வீட்டுக்கு உயிர் தருவதோடு உங்களுக்கு ஒரு கனவு உலகத்தில் வாழும் உணர்வைத் தரும்.