நாள் முழுக்க வெளியே அல்லாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பியதும் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வுதரும் வகையில் ஒரு விஷயம் இருந்தால் சுகமாக இருக்கும் அல்லவா! அப்படி அக்கடான்னு தன்னை மறந்து ஓய்வெடுக்க உகந்த வீட்டு உபயோகப் பொருள்தான் திவான்.
ஏன் படுக்கையோ, சோபாவோ போதாதா என்றால், படுக்கையில் உறங்கலாம், சோபாவில் சாய்ந்து உட்காரலாம் ஆனால் திவான் என்பது முற்றிலும் வேறுவிதமான அனுபவத்தைத் தரக்கூடியது. திவானின் வரலாறு அதை உறுதிப்படுத்தும்.
மன்னர்களின் சோபா
பதிமூன்றாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு நாட்டினர் குறிப்பாகத் துருக்கி பேரரசர்கள்தான் திவானை அதிகமாகப் பயன்படுத்தியவர்கள். அப்போதுதான் திவான் என்ற சொல்லும் உருவானது. துருக்கி மொழியில் திவான் என்றால் சாவகாசமாக உட்கார்ந்துகொள்ளப் பயன்படும் மெத்தை.
துருக்கி ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு அறையின் சுவரோடு ஒட்டியபடி நீளமான மெத்தை ஒன்றைத் தரையில் விரிப்பார்கள். அந்த மெத்தை சுவரோடு ஒட்டும் பகுதியில் நீள் உருளை வடிவிலும், சதுர வடிவிலும் உள்ள வண்ணமயமான தலையணைகளைப் பரத்தி அதன் மேல் சாய்ந்தபடி உட்காருவார்கள்.
திவானின் நகல்
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் திவானை நகலெடுத்து வடிவமைத்ததுதான் சோபா. அதே நேரம் திவானையும் அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பிரிட்டனில் திவான் என்பது ஸ்பிரிங்க் பொருத்தப்பட்ட மெத்தை. ஸ்பிரிங் வைத்துக் கட்டப்பட்ட நீண்ட மரப் பலகையின் மேல் மெத்தை விரித்து அதைத் தரையில் பரத்திப் பயன்படுத்துவார்கள்.
வீட்டை அரண்மனையாக்க
இப்படியாக அரண்மனை வாசிகள் பயன்படுத்திய பாரம்பரிய சோபாதான் திவான்.
அத்தகைய பாரம்பரியமிக்கத் திவான்களை நவீன காலத்துக்கு ஏற்ப புதுமை புகுத்தி நூதனமாக நாமே வடிவமைத்துப் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டுக்கு உகந்த திவானை செய்யலாம். இதற்குத் தேவை ஒரு நீளமான மெத்தை, அதற்கு ஒத்த மரப்பலகை, திவான் குஷன் என்றழைக்கப்படும் நீள் உருளை வடிவில் இரண்டு தலையணைகள், மூன்று முதல் ஐந்து சதுரமான தலையணைகள்.
மென்மையான துணி
உங்களுக்குப் பிடித்தமான துணியை முதலில் முடிவுசெய்து கொள்ளுங்கள். மென்மையான பருத்தியாலான விரிப்பு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் அவற்றால் எத்தகைய உடல் உபாதையும் ஏற்படாது. அடுத்து அவற்றைப் பராமரிப்பது சுலபம்.
மிக எளிதாக உங்கள் வாஷிங் மிஷினிலேயே துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். முதல் முறை துவைக்கும்போது குளிர்ந்த நீர் பயன்படுத்துவது நல்லது. அதிகப்படியான வெயிலில் உலர்த்தாமல் நிழலில் காயவைத்தால் நிறம் மங்காமல் நெடுநாள் நீடிக்கும்.
அழகிய வடிவங்கள்
வடிவமைப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் படுக்கை அறை என்றால் பூ போட்ட திவான் விரிப்பு மிருதுவான தோற்றம் தரும். அதே வரவேற்பறையில் திவான் விரிப்பதானால் பட்டையான கோடுகள், பெரிய பெரிய கட்டங்கள், டையகனல் கோடுகள், வட்டங்கள் போன்ற வடிவியல் வடிவங்களை முயன்று பார்க்கலாம்.
வடிவமைப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் படுக்கை அறை என்றால் பூ போட்ட திவான் விரிப்பு மிருதுவான தோற்றம் தரும். அதே வரவேற்பறையில் திவான் விரிப்பதானால் பட்டையான கோடுகள், பெரிய பெரிய கட்டங்கள், டையகனல் கோடுகள், வட்டங்கள் போன்ற வடிவியல் வடிவங்களை முயன்று பார்க்கலாம்.
வர்ணஜாலம்
அடுத்து திவான் துணியின் வண்ணம் மற்றும் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்தல். உங்கள் வீட்டு அறைக்கு ஏற்ற நிறக் கலவையில் திவான் துணியைத் தேர்வுசெய்ய வேண்டும். வெளிர் நிறச் சுவர் என்றால் கரும் நீலம், கரும் பச்சை, கருஞ்சிவப்பு உள்ளிட்ட கலவையில் உள்ள துணியைத் தேர்ந்தெடுங்கள்.
சுவர் நிறம் மங்கலாக இருக்குமானால் ஒளிரும் நிறங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதே போலக் குஷனின் நிறம் விரிப்போடு ஒத்த நிறமாக இருப்பது ஒருவிதமான அழகு. அல்லது அதே காண்ட்ராஸ்ட் நிறங்கள் இருக்கும் குஷன்களைப் பயன்படுத்துவது வேறுவிதமாக அழகைச் சேர்க்கும்.
இனி தினம் தினம் உங்கள் வீட்டில் காலடி வைத்தவுடன் ஒரு நவீன அரண்மனைக்குள் நுழைவதுபோன்ற உணர்வு ஏற்படும்.