சமையலறையில் வசந்த காலத்தை வரவேற்கும் அலங்காரத்தை எளிமையாகச் செய்யமுடியும். சமையலறையின் சுவர்கள், திரைச்சீலைகள், மேசைகள் என எல்லாவற்றிலும் வசந்த காலத்தின் வசந்தத்தை மிளிரவைக்க முடியும். சமையலறையில் வசந்த காலத்தை வரவைப்பதற்கான சில வழிகள்...
பூக்கள் பிடிக்குமா?
பூக்களைக் கருப்பொருளாக வைத்து அலங்கரிப்பது பிடிக்குமென்றால், அதை வரவேற்பறை மட்டுமல்லாமல் சமையலறையிலும் தொடரலாம். சமையலறைச் சுவர்களில் வண்ணமயமான பூக்களை வால்பேப்பராக ஓட்டிவைக்கலாம்.
அப்படியில்லாவிட்டால், சுவர்களில் பூக்களைப் புடைப்புச் சிற்பங்களாகவும் படைக்கலாம். இவை எல்லாவற்றையும்விட எளிமையானது சமையலறைக்குள் பூச்சாடிகளை அமைப்பது. இந்தப் பூச்சாடிகள் சமையலறைக்குப் புதுப் பொலிவைக் கொடுக்கும்.
அடுப்படியிலும் பூக்கள்
அடுப்படி மேசைக்குப் பின்னால் இருக்கும் சுவர்களில் முழுமையாகப் பூக்கள் நிறைந்த பேக்ஸ்ப்லாஷை (Backsplash) வைத்து வடிவமைக்கலாம். இதனால் அடுப்படிச் சுவர்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கலாம். இந்தப் பேக்ஸ்ப்லாஷை சுத்தப்படுத்துவதும் எளிமையானது.
இந்த அலங்காரத்தைச் செய்த பிறகு, சமையலறைக்குள் ஒரு பூக்கள் கூட்டம் நுழைந்துவிட்டதுபோல் இருக்கும். இந்தப் பேக்ஸ்ப்லாஷை கண்ணாடியிலும் உருவாக்கலாம். இது கூடுதல் வசீகரத்தைச் சமையலறைக்குக் கொடுக்கும். நீல, மஞ்சள் பூக்களைக் கொண்டு இந்தப் பேக்ஸ்ப்லாஷை அமைக்கலாம்.
மலரவைக்கும் திரைச்சீலைகள்
உங்கள் சமையலறை திரைச்சீலைகள் போடுவதற்கு வசதி இருக்கும்படி அமைந்திருந்தால் மலர்களான திரைச்சீலைகளைப் போடலாம். இது சமையலறைக்குள் உண்மையான வசந்தம் வந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், லேசான வெளிச்சத்தைச் சமையலறைக்குள் கொண்டுவரும் பருத்தி திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியம்.
பூக்களால் ஒரு புடைப்புச் சிற்பம்
வீட்டுக்குள் புடைப்புச் சிற்பங்களை அமைப்பது இப்போது புதிய டிரண்ட். இந்தப் புடைப்புச் சிற்பங்களைச் சமையலறையிலும் அமைக்கலாம். இரண்டு கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் பெரிய பூக்களாலான புடைப்புச் சிற்பத்தை அமைக்கலாம். இது சமையலறைக்குள் நுழைந்ததும் புத்துணர்ச்சியை அளிக்கும்.
வித்தியாசமே அழகு
எதிர்பார்க்காத வகையில் அலங்கரிப்பதும், வடிவமைப்பதும் ஒரு கலைதான். அப்படியும் சமையலறைக்குள் வசந்தத்தைக் கொண்டுவர முடியும். சமையலறை சுவர்களை அடர்நிறங்களால் மட்டுமே அலங்கரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு மாறாக, சாம்பல் நிறத்தின் பின்னணியில் வெள்ளை பூக்கள் இருக்குமாறும் வடிவமைக்கலாம். இது ஒரு வித்தியாசமான அழகைச் சமையலறைக்குக் கொடுக்கும்.
பொருட்களாலும் அலங்கரிக்கலாம்
வரவேற்பறையைப் பல்வேறு பொருட்களை வைத்து அலங்கரிப்பதுபோலச் சமையலறையையும் அலங்கரிக்கலாம். படங்கள், அலங்காரமான கண்ணாடிகள், அலங்கார விளக்குகள் என எல்லாவற்றையும் சமையலறைக்கும் கொண்டுவரலாம். இது சமையலறைக்குப் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கும்.
துணியாலும் அலங்கரிக்கலாம்
சமையலறையில் இருக்கும் மேசைத் துணியையும் நீங்கள் வசந்த காலத்தைப் பிரதிபலிப்பதுபோல் அமைக்கலாம். சமையலறைக்குள் பூக்களைக் கொண்டுவருவதற்கு இது ஒரு சிறந்த வழி. இந்த மேசை விரிப்பை நீங்களே வடிவமைக்கலாம். மேசை விரிப்பில் நீலம், சிவப்பு, மஞ்சள் நிறப் பூக்கள் இருப்பது நல்லது.
வானவில் பொருட்கள்
சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களை வானவில் நிறங்களில் வாங்கி அலமாரிகளில் அடுக்கலாம். அப்படியில்லையென்றால், உங்கள் சமையலறையை வடிவமைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் வண்ணங்களில் இந்தப் பொருட்களை வாங்கலாம். உதாரணத்துக்கு, வானவில் வண்ணத்தில் குவளைகளை வாங்கிச் சமையலறை அலமாரியில் அடுக்குவது வசந்தகாலக் கருப்பொருளுக்கு ஏற்றதாக இருக்கும்.
தட்டுகளும் உதவும்
பழமையைப் பிரதிபலிக்கும் பூக்களாலான தட்டுகளை வைத்தும் சமையலறையை அலங்கரிக்கலாம். இந்தத் தட்டுகளையெல்லாம் சேகரித்துச் சமையலைச் சுவரில் ஒட்டிவைக்கலாம். இது சமையலறைக்குப் புதுமையான வசந்த காலத் தோற்றத்தைக் கொடுக்கும்.