Monday, May 8, 2023

வேலைவாய்ப்பு மிகுந்த வேளாண் படிப்புகள்!

வேலைவாய்ப்பு மிகுந்த வேளாண் படிப்புகள்!

உணவுக்கு அடிப்படை வேளாண்மையே. எனவே என்றென்றும் விவசாய படிப்புகளுக்கு மவுசு அதிகமே.

உயிர் வாழ்தலுக்கான அடிப்படைகளில் உணவுக்கே முதலிடம். அந்த உணவுக்கு அடிப்படை வேளாண்மையே. எனவே என்றென்றும் விவசாய படிப்புகளுக்கு மவுசு அதிகமே. பல்வேறு சூழல்களால் இன்று விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் விவசாயத்திற்கு மிகமிக அதிக தேவை ஏற்படும் என்பது மறுப்பதற்கில்லை. அப்போது வேளாண் சார்ந்த படிப்புகளை படித்து முடித்திருப்பவர்களுக்கு வாழ்க்கையில் திரும்பம் தரும் வகையில் வாய்ப்புகள் உருவாகும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. விவசாயம் சார்ந்த சில படிப்புகளையும், அவை வழங்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் இங்கு பார்ப்போம்...

வேளாண் பொறியியல் (Agricultural engineering):

விவசாயமும் இன்றும் தொழில்நுட்ப மயமாகிவிட்டது. நாற்று நடுவது, களைபறிப்பது, அறுவடை வரை அனைத்திலும் எந்திரங்களும், தொழில்நுட்ப கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே வேளாண் பொறியியல் முக்கியத்துவம் நிறைந்த பட்டப்படிப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. 4 ஆண்டுப் படிப்பு இது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும், அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் மதிப்பெண்ணையும் அடிப்படையாக வைத்து இப்படிப்பிற்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கை மூலம் இந்த படிப்பையும், நீங்கள் விரும்பும் கல்லூரியையும் தேர்வு செய்யலாம்.

விவசாயத்தில் பொறியியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் பணி வேளாண் பொறியாளர்களுடையது. வேளாண் துறைக்குத் தேவையான கருவிகள், எந்திரங்கள் போன்றவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல் போன்ற பணிகள் வேளாண் பொறியாளர்களுக்கானது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேளாண் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள், புட் புராசசிங் நிறுவனங்கள், பாசனக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட வேளாண் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கும். வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்கள் உண்டு. தமிழகத்தில் கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் இப்படிப்பை அளிக்கிறது.

வேளாண் தகவல் தொழில்நுட்பம் (Agricultural IT):

அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பும், தொழில்நுட்பம் சார்ந்த பட்டப்படிப்பே. 4 ஆண்டுப் படிப்பு இது. தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் வேளாண் துறையிலும் பெருகிவருகிறது. விவசாய உற்பத்தி, உணவு, மக்கள்தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்த துறை மேலும் முக்கியத்துவத்தை பெறும். விவசாயிகளுக்கும் விவசாய ஆய்வாளர்களுக்கும் உதவுவதற்காகவும், அவர்களின் சிக்கலை தீர்க்கவும், அக்ரிகல்சர் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் தகவல்தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது கிராமப் புறங்களில் பல புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.

இந்தியாவில் உள்ள 65 சதவீதம் பேருக்கு விவசாயம் தான் தொழிலாக உள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். கிராமங்களுக்கு தகவல்கள் சென்றடைய தொழில்நுட்பம் உதவுகிறது. விவசாயத்திலும், கிராமப்புற முன்னேற்றத்திலும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கினைப் பற்றியும், விவசாயம் சந்திக்கும் பிரச்சினை, அதை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண்பது பற்றியும் மாணவர்கள் இந்த படிப்பில் அறிந்துகொள்ளலாம்.

இந்த படிப்பில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் சிஸ்டம், ஆப்ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங், டெவலப்மென்டல் எக்னாமிக்ஸ், கம்ப்யூட்டர் நெட்வொர்க் அண்டு வில்லேஜ் ஏரியா நெட்வொர்க், பி.சி., அண்டு அப்ளிகேஷன்ஸ் இன் ரூரல் ஏரியாஸ், ரிமோட் சென்சிங் அண்டு ஜி.ஐ.எஸ்., மல்டிமீடியா டெக்னாலஜி, பார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம் அண்டு டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பாடங்களை கற்றுத்தருகின்றனர். கோவை, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.டெக்., படிப்பாக வழங்கப்படுகிறது.

பல்வேறு படிப்புகள்:

இவை மட்டுமல்லாமல் வேளாண் அறிவியல் வேளாண் விற்பனை (அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங்), வேளாண்மை நிதி (அக்ரி பினான்ஸ்), வேளாண் திட்டங்கள் ( அக்ரிகல்சுரல் பாலிசி), அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சரல் ரிசர்ச் அண்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், சாயில் சயின்ஸ், புட் சயின்ஸ் போன்ற பட்டப்படிப்புகளும் வேளாண் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த பட்டப்படிப்புகளாக உள்ளன.

அக்ரிகல்சர் அண்ட் எக்ஸ்டென்சன் எஜூகேசன், அக்ரிகல்சரல் ரிசர்ச் அண்ட் அனலைசிஸ், அக்ரிகல்சர் எஜுகேசன் டெக்னிக்ஸ் போன்ற முதுநிலை படிப்புகளும் உள்ளன. பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. பல்வேறு படிப்புகள் டிப்ளமோ படிப்புகளாகவும் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான கல்வி மையங்களில் பயில முடியும். பெரும்பாலும் 3 ஆண்டு மற்றும் 4 ஆண்டு காலம் கொண்ட பட்டப்படிப்புகளாகும். இவற்றை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

வேலைவாய்ப்புகள்:

வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பனர், கள ஆய்வாளர், பசுமை வீடு தொழில்நுட்பனர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் கிட்டங்கி அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுனர், வேளாண் நிர்வாக அதிகாரி என பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்ல முடியும்.

அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் வேளாண் படிப்பை தேர்வு செய்து பிரகாசமான எதிர்காலத்தைப் பெறலாம்!