Monday, June 18, 2018

அரசு பணியில் சேர என்ன படிக்கலாம் ?

அரசு பணியில் சேர என்ன படிக்கலாம் ?

பெரும்பாலும் பெற்றோர்களும், மாணவர்களும் படிப்பு சம்மந்தமாக ஆலோசனை கேட்பது, இஞ்சினியரிங்கில் என்ன படிப்பது ?, மெடிக்கல்ல என்ன படிப்பது ?, B.Com முடித்தால் வேலை கிடைக்குமா ? என்பதுதான். இந்தியாவையே இயக்கும் அரசு வேலைகளில் சேர என்ன படிப்பது என பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை.  என்ன படித்தால் வேலை கிடைக்கும் என ஆய்வு செய்யும் மாணவர்களே, இந்திய அரசாங்கத்தில் 2.15 கோடி வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை உங்கள் ஆய்வில் சேர்க்க மறந்து விட்டீர்கள், நன்றாக படித்தாலும், சுமாராக படித்தாலும், சுத்தமாக படிப்பே வரவில்லை என்றாலும் தகுதிக்கு ஏற்ப மத்திய , மாநில அரசுகளில் பல்வேறு வேலைகள் உள்ளன. வெளிநாடுகளில் போய் கஷ்ட்டப்பட்டு வாழ்கை நடத்துவதற்க்கு அரசு வேலை எவ்வளோ மேல்.

அரசு வேலை கொடுத்தால் நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்கின்றோம் என மாணவர்கள் நினைப்பது புரிகின்றது, எந்த ஒரு வேலையும் தானாக வந்து சேராது, அதற்கான வழிமுறையை தெரிந்து முறையான பயிற்சி எடுத்து அரசு வேலைக்கு விண்ணப்பித்தால் நிச்சயம் அரசு வேலை கிடைக்கும். அதற்காக வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் மட்டுமே வெற்றியை தந்துவிடாது, விடா முயற்ச்சியும், கடின உழைப்பு மாணவர்களாகிய உங்களை சேர்ந்தது.
நேர்மையான முறையில் அரசு வேலையில் சேர போட்டி தேர்வுகளில் தேர்சி பெறுவதே சிறந்தது. மத்திய அரசு உயர் பதவியில் (IAS, IPS உட்பட )  சேர UPSC பல தேர்வுகளை நடத்துகின்றது. இதில் தேர்சி பெறுவதன் மூலம் இந்திய அரசயே இயக்கும் பதவிகளில் அமர முடியும், தமிழகத்தில் TNPSC பல்வேறு தேர்வுகளை  நடத்துகின்றது, இதில் தேர்சி பெறுவதன் மூலம் தமிழகத்தில் அரசு பதவியில் அமர முடியும். அரசு வேலையில் சேர்வதென்பது போட்டி தேர்வில் வெற்றி பெறுவதுதான். எனவே மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்க்கு வசதியான படிப்புகளை தேர்ந்தெடுக்கவும்.

அரசு  வேலை பெற தகுதிகள் :

8 - ஆம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை படித்தவர்களுக்கு மத்திய மாநில அரசு பணியில் வேலைகள் உள்ளன. இருந்தாலும் கண்டிப்பாக பட்ட படிப்பு படிப்பது நல்லது. எனவே மாணவர்கள் பட்ட படிப்பு முடித்து அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் வையுங்கள்.
எளிதில் நினைவில் நிறுத்திகொள்ளும் திறன், குறிப்புகளை கொண்டு விடையை தேர்ந்தெடுக்கும் திறன், கவனதை சிதரவிடாமல் ஆழ்ந்து படிக்கும் திறன் ஆகியவை போட்டி தேர்வில் வெற்றி பெற உதவும். சில பணியிடங்களுக்கு நேர்முக தேர்வும் இருப்பதால், ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்வதும் சிறந்தது.

அரசு வேலையில் சேர என்ன படிக்கலாம் ?

+2 முடித்த பிறகு எளிதான பட்ட படிப்பில் சேரவும், உதாரணத்திற்க்கு B.A (Economics) , B.A (history)  , B.Sc (psychology) , BBA, B.Sc (physics) , B.A (English)  போன்ற படிப்புகளில் சேரலாம். இந்த கலை / அறிவியல் படிப்புகள் பாதி நாள் தான் பயிற்றுவிக்கப்படும், அதாவது மதியமே கல்லூரி முடிந்துவிடும், மதியத்திற்க்கு மேல் மாணவர்கள் அரசு போட்டி தேர்விற்க்கு தங்களை தயார் படுத்தி கொள்ள நேரம் கிடைக்கும்.

மாணவர்கள் பட்ட படிப்பு படிக்கும் காலத்தில் இரண்டு விதமான கல்வி பயில வேண்டும், நாம் படிக்கும் பட்ட படிப்பிற்க்கான பாடங்களை படிக்க வேண்டும், அதே நேரத்தில் அரசு போட்டி தேர்விற்க்கும் படிக்க வேண்டும்.  எனவே எளிதான பட்ட படிப்பு படிப்பதன் மூலம் நமக்கு நேரம் அதிகமாக கிடைக்கும், அந்த நேரத்தில் போட்டி தேர்விற்க்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளளாம். பொறியியல் போன்ற படிப்புகள் படித்தால் பெருபாலான  நேரம் பொறியியல்  பாடங்கள் படிக்கவே செலவாகிவிடும் எனவே போட்டி தேர்விற்க்கு படிக்க நேரம் கிடைக்காது. அரசு வேலைதான் இலட்சியம் என கருதும் மாணவர்கள் எளிதான கலை / அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுக்கவும். கல்லூரி படிப்பில் இரண்டாம் ஆண்டு துவக்கத்திலிருந்தே மாணவர்கள் போட்டி தேர்விற்க்கு தயாராக வேண்டும்.

இறுதி ஆண்டு படிக்கும் போதே மத்திய அரசின் UPSC (www.upsc.gov.in) இணையதளத்தில் வெளியாகும் அரசு பணிக்கான போட்டி தேர்விற்க்கு விண்ணப்பிக்கவும், அதே போல் தமிழக அரசின் TNPSC (www.tnpsc.gov.in) இணையதளத்தில் வெளியாகும் அரசு பணிக்கான போட்டி தேர்விற்க்கும் விண்ணப்பிக்கவும், இந்த இரண்டு இணையதளங்களையுன் தொடர்ந்து கவனித்து வரவும். UPSC தவிர இரயில்வேயில் சேர RRB (www.rrbchennai.gov.in) சில நுழைவு தேர்வுகளை நடத்துகின்றது. இராணுவத்தில் சேர தனியாக விண்ணப்பிக்க வேண்டும். http://joinindianarmy.nic.in இணையதளத்தில் இதற்க்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவரும்
ஒரு குறிபிட்ட போட்டி தேர்விற்க்கு தயாராகாமல் எல்லா தேர்வுகளுக்கும் தயார் படித்தி கொள்ளுங்கள். ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேரலாம்.

போட்டி தேர்வில் வெல்வது எப்படி ?

அரசு வேலைக்கான போட்டி தேர்வுகள் வருடா வருடம் நடத்தபடும் தேர்வுகளாகும். எனவே கடந்த ஆண்டுகளில் கேட்க்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பை பார்த்தாலே எப்படிபட்ட கேள்விகள் கேட்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அதற்க்கு ஏற்றார் போல மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளாம், பெரும்பாலும் எல்லா போட்டி தேர்வுகளுக்கும் படிக்க புத்தங்கள் கிடைக்கின்றன அவைகளை வாங்கி படித்து , அதில் உள்ள மாதிரி வினாக்களுக்கு விடை அளிக்க முயற்சி செய்யலாம்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்க்காக பயிற்சி மைய்யங்கள் உள்ளன , அதில் சேர்ந்தும் படிக்கலாம். சில பயிற்சி மைய்யங்கள் இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றன. அதையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்க்கான பொதுவான வழிமுறைகளை பார்ப்போம் :

நம்பிக்கை :

போட்டி தேர்வுகள் என்றாலே மிகவும் கடினம், தேர்சி பெற இயலாது, போட்டி கடுமையாக இருக்கும் என நாம் நினைப்பது தான் நம்மை போட்டி தேர்வுகளை எழுதாமால் தடுக்கின்றது. நம்மால் தேர்சி பெற இயலாது என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வழியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் (இன்ஷா அல்லாஹ்). இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைவைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் அடைய முடியும்,

“…..நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது”. (அல் குர் ஆன் : 30: 47 ).

ஆர்வம்

எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது, பொதுவாக ” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

படித்தது மறக்காமல் இருக்க : மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வு எழுதும் போது எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். பொதுவாக இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. படிக்கும் போது கவனமாக படியுங்கள், யாரிடமும் பேசாதீர்கள், இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள். இப்படி செய்தால் படித்தது நிச்சயம் நினைவில் இருக்கும்.

பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்க்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

கடின உழைப்பு :

1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயச்சிக்க வேண்டும், போட்டி தேர்விற்க்கான புத்தகம் சரியில்லை, கோசிங் சென்டர் சரி இல்லை, குடும்ப சூழ்நிலை சரி இல்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த சூழ்நிலையில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.  எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

2. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.

3. திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் படித்ததை நினைவில் நிருத்த (Revise பன்ன) செலவு செய்ய வேண்டும்.

4. சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்ட மிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன் இன்று நாம் திட்ட மிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய (Check List) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.

5. பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும்,

. ……. என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)

என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! (அல்-குர் ஆன் 20 : 25)

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்……(அல்-குர் ஆன் 28 : 24.)

Monday, June 11, 2018

குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன படிக்கலாம் ?

குறைவாக மதிப்பெண்
எடுத்தவர்கள் என்ன படிக்கலாம் ?

மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை படிப்பதற்க்கு பெரிதும் உதவியாக இருப்பது அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான். எதிர்பார்த்த அளவிற்க்கு மதிப்பெண் கிடைக்கவில்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் குறை. +2-ல் 700 மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகிவிட்டோமே என சந்தோசப்படும் மாணவர்களும் இருக்கின்றார்கள், 1100 மதிப்பெண் எடுத்து, 1150 மதிப்பெண் கிடைக்க வில்லையே என வருத்தப்படும் மாணவர்களும் இருக்கின்றார்கள்.

எனவே "குறைவான மதிப்பெண்" என்பது நம்முடைய எதிர்பார்ப்பை பொருத்தது, மாணவர்களே நீங்கள் எதை குறைவாக மதிப்பெண் என நினைக்கின்றீர்களோ அதை மிக அதிக மதிப்பெண்னாக நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள், குறைவு என்பது நீங்கள் நினைத்தைவிட குறைவு தானே தவிர, உண்மையில் அது குறைவான மதிப்பெண்னே அல்ல.

எனவே எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என வருத்தபட வேண்டாம். இறைவன் எதை நமக்கு வழங்கினானோ அதுவே சிறந்தது. போனது போகட்டும் இனிமேலாவது நன்றாக படிக்க வேண்டும் என முடிவெடுங்கள், கடந்தகால தவறுகளை நீக்கி, படிப்பில் ஆர்வம் காட்டி, கடினமாக உழைத்து படியுங்கள்.  நிச்சயம் நீங்கள் எடுத்த மதிப்பெண்னிற்க்கு ஏதாவது ஒரு கல்லூரியில் ஏதாவது ஒரு படிப்பில் இடம் கிடைக்கும், எந்த இளநிலை (UG) டிகிரி படிப்பிற்க்கும் முதுகலை (PG) படிப்பு இருக்கும் நீங்கள் இளநிலை (UG) படிப்பில் நன்றாக படித்தால் நீங்கள் விரும்பும்  முதுகலை (PG) படிப்பை புகழ் பெற்ற கல்லூரிகளில் படிக்க முடியும், எனவே இது இறுதி அல்ல, வாய்ப்பு இன்னும் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

குறைவாக மதிப்பெண்  எடுத்தவர்கள் என்ன படிக்கலாம் ? 

குறைவான மதிப்பெண் எடுப்பதனால் வரும் முதல் பாதிப்பு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது, பரவாஇல்லை, கிடைக்கும் கல்லூரியில் பிடித்த படிப்பை தேர்ந்தெடுங்கள், உதாரணத்திற்க்கு B.Com படிக்க விரும்பி இருப்பீர்கள், நல்ல கல்லூரியில் B.Com இடம் கிடைக்க 1000 மதிப்பெண்னுக்கு மேல் இருக்க வேண்டும், நீங்கள் 850 மதிப்பெண் எடுத்து இருந்தால் ஏதாவது அரசு கல்லூரியில் கலை முயற்சி செய்து பாருங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. பொறியியல் படிப்பை அண்ணா பல்கலை கழகத்தில் படிக்க விரும்பி இருப்பீர்கள், மதிப்பெண் குறைவாக எடுத்தால் வீட்டிற்க்கு அருகில் உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படியுங்கள்.

தரமில்லாத கல்லூரியில் படித்தால் நன்றாக படிக்கமுடியாதே என்ன செய்வது ?

தரமில்லாத கல்லூரியில் படித்தால் பாடங்கள் நன்றாக பயிற்றுவிக்கப்படாது. ஆனால் பாடங்களை கற்பதற்க்கு கல்லூரிகள் மட்டும் இடம் இல்லை, நீங்கள் எந்த பாடம் படித்தாலும் அதை சார்ந்த சிறந்த வகுப்புகள் இணைய தளங்களில் இலவசமாக (வீடியோ வடிவில்) கிடைக்கின்றன. அதை பார்த்து சிறந்த முறையில் படிக்கலாம். உதாரணத்திற்க்கு உலகின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமான அமெரிக்காவில் உள்ள MIT-யின் வகுப்பு பாடங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றன. நீங்கள் ஏதாவது சாதாரண கல்லூரியில் பொறியியல் படித்துகொண்டு MIT-யின் வகுப்பு பாடங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்து உலகின் தலை சிறந்த கல்வியை இலவசமாக கற்கலாம்.

எனவே மதிப்பெண் குறைவாக எடுத்தால்  நீங்கள் விரும்பிய படிப்பு எந்த கல்லூரியில் கிடைக்கும் என தேடி பார்த்து அது கல்வி தரம் குறைவான கல்லூரியாக இருந்தாலும் சேர்ந்து படியுங்கள், உங்களின் கல்வி தரத்தை நீங்கள் சொந்த முயற்சி (self study) மூலம் உயர்த்திகொள்ளுங்கள்.

விரும்பிய பாட பிரிவு கிடைக்கவில்லையா ? என்ன செய்வது ?

மிக மிக குறைவாக மதிப்பெண் எடுத்தால் சாதாரண கல்லூரியில் கூட விரும்பிய பிரிவு கிடைக்காது. உதாரணத்திற்க்கு +2 - ல் 650 மதிப்பெண் எடுத்தால் எந்த கல்லூரியிலும் B.Com கிடைக்காது. இந்த சூழ்நிலையில் கிடைக்கும் படிப்பை எடுத்து படியுங்கள். எந்த படிப்பை எடுத்து படித்தாலும் நன்றாக படித்தால் எதிர்காலம் சிறப்பாகவே அமையும் (இறைவன் நாடினால்).

குறைந்த மதிப்பெண்னிற்க்கு பிரிவுவாரியாக என்ன படிக்கலாம்  ?

கணித/அறிவியல் பிரிவு மாணவர்கள் :

B.Sc (mathematics), B.Sc (chemistry ) , B.Sc (physics) படிக்கலாம், ஆங்கிலம் நன்றாக வரும் என்றால் B.A English, B.B.A படிக்கலாம். இந்த படிப்புகள் எல்லாம் நீங்கள் எவ்வளவு குறைவாக மதிப்பெண் எடுத்தாலும் கிடைக்கும், B.Sc நன்றாக படியுங்கள் M.Sc (mathematics), M.Sc (chemistry) , M.Sc (physics) படிப்பை IIT மற்றும் அண்ணா பல்கலை கழகத்தில் படிக்க நுழைவு தேர்வுகள் உள்ளன அதை எழுதி தேர்சி பெற்று M.Sc படிக்க முயற்சி செய்யுங்கள், அது கிடைக்காவிட்டாலும், M.Sc படிப்பிற்க்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.  B.Sc படிக்கும் காலத்தில் அரசு தேர்விற்க்கு தயாராகுங்கள், தேர்வில் தேர்சி பெற்றால் டிகிரி முடித்து அரசு வேலைக்கு செல்லலாம். மருத்துவ துறையில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன அதில் சேர முயற்சி செய்யலாம், குறைவான மதிப்பெண் எடுத்தாலும் இது கிடைக்கும் , ஆனால் தனியார்  நிறுவனத்தில் படிப்பதினால் பொருளாதாரம் அதிகமாக செலவாகும்

கணக்கியல் / பொருளாதாரம்/ வரலாறு மாணவர்கள் :
B.A (economics) , B.A (history) படிக்கலாம், தேசிய பல்கலை கழகங்களில் M.A (economics)  படிக்க நுழைவு தேர்வுகள் உள்ளன, அதை எழுதி தேர்சி பெற்றால் புகழ் பெற்ற தேசிய பல்கலை கழகங்களில் சிறந்த மேற்படிப்பு (PG) படிக்கலாம், ஊடக துறை (journalism) படிப்புகள் படிக்கலாம், அரசு வேலைக்கான நுழைவு தேர்விற்க்கும் படிக்கலாம். ஆங்கிலம் நன்றாக வரும் என்றால் B.A English, B.B.A/M.B.A படிக்கலாம்.

10- ம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன படிக்கலாம் ?

முடிந்தவரை கணித / அறிவியல் பிரிவு (first group or pure science) எடுக்க முயற்சி செய்யுங்கள், நீங்கள் விரும்பும் பள்ளி கூடத்தில் கிடைக்காவிட்டாலும், எந்த பள்ளியில் கிடைக்குமோ அந்த பள்ளியில் சேர்ந்து படியுங்கள். கணித / அறிவியல் பிரிவு (first group or pure science) கிடைக்காவிட்டால் வணிகவியல்/கணக்கியல் (Commerce and accounts) பிரிவை தேர்ந்தெடுங்கள், அதுவும் கிடைக்காவிட்டால் பொருளாதாரம் / வரலாறு (Economics and history) பிரிவை தேர்ந்தெடுங்கள். +1, +2  நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யுங்கள்

Friday, June 1, 2018

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?

எந்த படிப்பை படிப்பது, எந்த கல்லூரியில் சேர்வது என மாணவர்களும், பெற்றோர்களும்  ஆலோசனை கேட்கும் காலம் இது. கல்வி நிறுவனங்களோ "உயர்தர கல்வி, உடனடி வேலைவாய்ப்பு" என மக்களை கவரும் வாக்குறுதிகளோடு  விளம்பரங்கள் செய்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றிய தெளிவு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருப்பது அவசியம்.

என்ன படித்தால், எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கான எளிதான விடை, எந்த படிப்பையும் எங்கு படித்தாலும் கவனமாக, சிறப்பாக படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். படிப்பில் கவனமில்லாமல் கோட்டைவிட்டால் வேலைவாய்ப்பு என்பது சிரமமே. கல்வி அறிவை வளர்ப்பதற்க்கும், சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்க்கும் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் படிக்கும் படிப்பு மட்டுமோ, அல்லது படிக்கும் கல்லூரி மட்டுமோ நமக்கு வேலை வாங்கி தருவதில்லை, மாணவரின் திறமை , அறிவு, ஆற்றல், ஆங்கில மொழி தொடர்பு திறன் ஆகியவைதான் வேலை வாய்ப்பை பெறுவதற்க்கான பிரதான காரணிகளாக இருகின்றன.

அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளை தேர்ந்தெடுத்தால் அதில் போட்டி (Competition) அதிகமாக இருக்கும், போட்டி (Competition) குறைவாக இருக்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாக இருகும். எனவே எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும் சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இதற்க்கான தீர்வு எதை படிப்பதாக இருந்தாலும் சிறப்பாக படிப்பதே.

என்ன படிக்கலாம் ?

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இது எல்லோரும் சொல்லும் அறிவுறை இதற்க்கான காரணம் என்ன வென்றால்
விருப்பமில்லாத படிப்பை படிக்க மாணவர்களை நிர்பந்தித்தால் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் கல்வியில் பின்தங்ககூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

விரும்பிய படிப்பை படிகும்போது ஆர்வம் இருக்கும்,  கவனம் இருக்கும், மாணவர்கள் பெற்றோர்கள் மீது பழி போட முடியாது, அவசியம் ஏற்படும் போது மாணவர்களே கடினமாக உழைத்து படிப்பார்கள்.
மிக முக்கியமாக மாணவர்களுக்கு ஆர்வமிருக்கின்றது என்பதற்க்காக பயனற்ற படிப்பை படிக்க அனுமதிக்ககூடாது.
'இறைவா உன்னிடம் நான் பயனற்ற கல்வியை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.''(முஸ்லிம் 5266) என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

நாம் தேர்ந்தெடுக்கும் படிப்பு மார்க்கத்திற்க்கு முரணில்லாததாக இருக்க வேண்டும். சினிமா துறை, வங்கி (வட்டி) துறை போன்ற  படிப்புகளை தவிர்த்துவிடுங்கள்.
சில மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும், விளையாட்டு சம்மந்தமாக நிறைய படிப்புகள் இருக்கின்றன, இவை அனைத்தும்  மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு உதவாது. எனவே விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதில் பயனளிக்கும் படிப்புகளாக  தேர்வு செய்து படிக்கலாம்.

கல்வியில் சிறந்து விளங்குவது எப்படி ?

நன்றாக படித்தால் வாழ்வில் முன்னேற முடியும் என்பதை அறிந்த நாம் அதை எவ்வாறு சாதிப்பது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் எதற்க்காக படிக்கின்றோம், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும்.

பிரார்த்தனை : சிறந்த கல்வியையும் , நல்ல வேலை வாய்ப்பையும் அடைய அல்லாஹ்விடம் பிரார்திக்க வேண்டும்,

"......என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!": (குர்ஆன் 20 : 114)
"என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்……" (குர்ஆன் 28 : 24)

நமது உறுதியான  பிராத்தனையின் மூலம் இறைவன் நமது இலக்கை அடைவதற்க்கான வழியை எளிதாக்க கூடும்.

நம்பிக்கை : நன்றாக படித்து வாழ்வில் முன்னேற எவ்வளவுதான் தடைகள் வந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருகின்றான், நிச்சயம் அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் , கடினமான பாடத்தை எளிதாக்கி அல்லாஹ் கற்று தருவான் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். நாம் படிக்கும் பாடங்களை பார்த்தோ, நுழைவு தேர்வுகளை பார்த்தோ பயந்து ஒதுங்கி விட கூடாது, முடியாது, இயலாது என நம்பிக்கை இழந்து விட கூடாது, பேரறிவாளனாகிய அல்லாஹ் நமக்கு அறிவை வழங்குவான் என்ற நம்மையுடன் தொடர்ந்து முயற்சி செய்து படிக்க வேண்டும்.

".....நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது" (குர்ஆன் : 30: 47)

யாராலும் தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாது, எனவே படிப்பில் தோல்விகள் வரலாம், அதற்காக கவலைபட்டு முடங்கிவிட கூடாது. தொடர்ந்து முயற்ச்சி செய்ய வேண்டும், இறைவன் நமது நன்மைக்குதான் தற்காலிக தோல்வியை கொடுத்திருப்பான், இறைவன் நாடினால் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் கல்வி பாதையை நோக்கி நடைபோட வேண்டும்.

தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். (குர்ஆன் 3:139)

கடின உழைப்பு : வீண் விளையாடுட்களிலும், வீண் பேச்சுகளிலும் நேரத்தை விரயமாக்காமல் படிப்பிற்க்கு அதிக நேரம் செலவிடுங்கள். புரியாத பாடங்களை பலமுறை படியுங்கள், எழுதி பாருங்கள், ஆசிரியர்களிடம் கேளுங்கள்,  நண்பர்களிடம் கேளுங்கள் (கல்வி கற்க வெட் கப்படாதீர்கள்). இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், தியாகங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடையாது. எனவே உங்கள் நேரத்தை கல்வி கற்ற தியாகம் செய்யுங்கள்,

ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட பொருப்புகள் பற்றி மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என நபி (ஸல்) கூறினார்கள் (புஹாரி 893). மாணவர்களாகிய உங்களுக்கு இறைவன் வழங்கிய பொருப்பு கல்வி கற்பது, அல்லாஹ்விற்க்கு அஞ்சி உங்களுக்கு வழங்கப்பட்ட பொருப்பை சரிவர நிறைவேற்ற நன்றாக படியுங்கள்.

எங்கு படிக்கலாம் ?

உங்கள் மதிப்பெண்ணிற்க்கு எங்கு படிக்க இடம் கிடைக்குமோ அங்கு சேர்ந்து படியுங்கள், பல்லாயிரக்கணக்கான , பல லட்ச கணக்கான ரூபாய்களை கொடுத்து தேடி சென்று எந்த கல்வி நிறுவனத்திலும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அறிவை விலை கொடுத்து வாங்க முடியாது, 
நாம் நல்ல மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் குறைந்த செலவில்  படிக்க இடம் கிடைக்கும், மதிப்பெண் குறைவாக எடுத்தால் தரமில்லாத கல்லூரியில் இடம் கிடைக்கும். எவ்வளவு மோசமான கல்வி நிறுவனத்தில் படித்தாலும் மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தால், கடினமாக உழைக்க தயாராக இருந்தால் நல்ல கல்வியை பெற முடியும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும்.

பெற்றோர்களுக்கு :   லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கேட்கும் கல்லூரிகளை தேர்வு செய்யாதீர்கள். கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ சக்திக்கு மீறி சிரமபட வேண்டாம். வருடத்திற்க்கு 15 ஆயிரம் செலவு செய்து படிக்கும் எவ்வளவோ சிறந்த படிப்புகள் தமிழகத்தில் உள்ளன. இப்படிபட்ட படிப்புகளை படித்து மாதம் பல்லாயிரகணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் எண்ணற்ற இளைஞர்கள் இருக்கின்றார்கள்.

இறைவன் பொருளாதாரத்தை வாரி வழங்கி இருந்தால் லட்சங்கள் செலவு செய்து படிக்க வைக்கலாம். பொருளாதாரம் குறைவாக இருந்தால் வசதிக்கு ஏற்றவாறு படிக்க வையுங்கள்.

படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை :

1. மாணவர்களுக்கு ஆர்வமுள்ள படிப்புகளை தேர்ந்தெடுங்கள், அல்லது மாணவர்களுக்கு சிறந்த படிப்பை பற்றி ஆர்வமூட்டுங்கள்.

2. இஸ்லாம் தடை செய்த படிப்புகளையும், பயனற்ற படிப்புகளையும் தவிர்த்துவிடுங்கள்.

3. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைந்த கல்வி கட்டணம் உள்ள படிப்பை தேர்ந்தெடுங்கள்.

4. எந்த நோக்கத்திற்க்காக படிக்கின்றோம் என்பதை இறுதி செய்து கொள்ளுங்கள். கல்வி அறிவை வளர்த்து கொள்ள, அல்லது நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பை பெற, அல்லது மத்திய, மாநில அரசு பணியில் சேர, அல்லது வெளி நாடுகளில் ஆராய்ச்சி படிப்புகள் படிக்க, அல்லது மார்க்கம் மற்றும் சமூக பணியாற்ற என நமது இலக்கை தீர்மானித்து அதற்க்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுங்கள்.

5. எந்த கல்வி நிறுவனதில்  சேர முடிவு செய்துள்ளீர்களோ அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் சீனியர் மாணவர்களிடம் கல்வி நிறுவனத்தை பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

இறுதியாக மாணவர்களுக்கு : நாம் சில படிப்பை படிக்க  விருப்பபடலாம், அல்லது குறிபிட்ட கல்லூரியில் படிக்க வேண்டும் என விரும்பலாம், நமது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது நாம் எடுத்த மதிப்பெண் காரணமாகவோ அது இயலாமல் போகலாம். அதற்க்காக கவலைபட்டு நமக்கு கிடைத்த படிப்பை சரியான முறையில் படிக்காமல் விட்டுவிட கூடாது, நமக்கு எந்த படிப்பு, எந்த கல்லூரியில் கிடைததோ அதையே இறைவன் நமக்கு நாடியுள்ளான் என்பதை உணர்ந்து, கிடைத்த படிப்பை சிறந்து படித்தால் நிச்சியம் வாழ்கையில் சிறந்த நிலை அடையலாம் (இறைவன் நாடினால்).

“..... ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (குர்ஆன் 2:216)