Wednesday, January 10, 2018

வீட்டுக்குள் ‘மினி’ ரைஸ் மில்!

நமக்கான சத்துள்ள அரிசியை நாமே அரைக்கலாம்... வீட்டுக்குள் ‘மினி’ ரைஸ் மில்!

நாளுக்கு நாள் விவசாயத்தில் புதிய புதிய கருவிகள் சந்தைகளில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட மினி செக்கு இயந்திரம் ஒன்றும் வெளியானது. மினி எண்ணெய்ச் செக்கு இயந்திரம் மூலமாக நமது வீட்டிலேயே நம் எண்ணெய்களை தயாரித்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் அரிசி தயாரிக்கும் மினி ரைஸ் மில் என்ற இயந்திரம் சந்தையில் அறிமுகமாகியுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இந்தக் கருவியை விற்பனை செய்து வரும் நல்ல சந்தை புரொடியூசர் கம்பெனி அதிகாரி ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். மினி ரைஸ் மில் என்ற கருவியைப் பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஆச்சர்யம் தருவதாகவே இருந்தன.

“இக்கருவிக்கு நாங்கள் வைத்த பெயர் 'மினி ரைஸ் மில்'. ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் ஓர் இயற்கை விவசாயி தான் விளைவித்த நெல்லைப் பெரிய ரைஸ்மில்லில் கொண்டு போய் அரைக்க முடியாது. பெரியப் பெரிய ரைஸ் மில்களில் 150 முதல் 200 மூட்டைகளை ஒரே நேரத்தில் அரைத்தால்தான் ரைஸ் மில்லுக்கு லாபம் கிடைக்கும். இதனால் வெறும் 40,50 மூட்டைகளை மட்டும் போட்டு அரைக்க மாட்டார்கள். இதுதவிர சிறிய ரைஸ் மில்களையே அந்த விவசாயிகள் நாட வேண்டியிருந்தது. சில பகுதிகளில் அந்த வசதியும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. அதனால் இயற்கையில் நெல் விதைத்தவர்களுக்கும், பாரம்பர்ய நெல்லை விதைத்தவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதுதவிர, விவசாயிகள் அறுவடை செய்து இருப்பு வைக்க முடியாமல் ரைஸ் மில்லுக்கு அனுப்பி விடுகின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல் 12 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அந்த நெல்லை இருப்பு வைத்து விற்பனை செய்யும் ரைஸ் மில் உரிமையாளர்கள் நேரடியாக அரிசியை 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது பைகளில் சந்தைக்கு 70 முதல் 80 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாகவும், விவசாயிகளுக்கு நேரடியாக லாபம் கொடுக்கும் விதமாகவும் இக்கருவி சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இக்கருவி நிச்சயமாகச் சிறு, குறு விவசாயிகளுக்கு லாபத்தைக் கொடுக்கும். அவர்கள் விளைவிக்கும் பாரம்பர்ய ரக நெல்லாக இருந்தால் எளிதில் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3 பி.எச்.பி மோட்டார் கொண்டு இயங்குவதால் இயந்திரம் இயக்க ஒரு பேஸ் மின்சார வசதி இருந்தாலே போதும். சாதாரணமாக வீடுகளில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதன் எடை 120 கிலோ மட்டுமே. இதனை வைக்க கிரைண்டர் வைக்கும் அளவு இடம் இருந்தாலே போதும். இதில் ஒரு மணிநேரத்தில் 100 கிலோ நெல்லை அரிசியாக்க முடியும். இதன் மூலம் 65 கிலோ அரிசி கிடைக்கும். அதில் அந்தந்த நெல்லின் பதத்தைப் பொறுத்து அரிசியாவதில் தாமதமாகலாம். வேக வைத்த நெல், பச்சை நெல் என இரண்டையும் போட்டு அரைக்கலாம். இதன் விலை 40,000 ரூபாய். இது தனியாக வாங்க வேண்டும் என்பதைத் தவிர்த்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மொத்தமாக நான்கு இயந்திரங்களை வாங்கிக் கொண்டால் அவர்களுக்கு ரைஸ்மில்களை தேடிச்செல்லும் வேலை மிச்சமாகும்.

சாதாரணமாகச் செயல்படும் அரிசி அரைக்கும் இயந்திரத்தைப் போலவேதான் இந்த இயந்திரமும் செயல்படும். மேலே அகன்ற வாய்ப் பகுதியில் நெல்லைக் கொட்ட வேண்டும். அதிலிருந்து மாவு அரைக்கப்பட்டுத் தனி வழியில் வெளியேறும். பக்கவாட்டில் உள்ள இரண்டு துளைகள் மூலமாக குருனை தனியாகவும், தவிடு தனியாகவும் வெளியேறும். இதில் அரிசியைப் பாலீஸ் செய்ய முடியாது. இதுவும் ஒருவகையில் நன்மை கொடுக்கக் கூடியதுதான். பாலீஸ் செய்யப்படாத அரிசியில்தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன. நிச்சயமாக இது விவசாயிகளுக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும். இதுபோல இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் வெளிவர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை" என்றார்.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கும் இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வழி செய்யலாம். இதுதவிர நமக்கான சத்துள்ள அரிசியை நாமே அரைக்கலாம் என்பதும் இதன் ஸ்பெஷல்.

நன்றி
துரை.நாகராஜன்
பசுமை விகடன்
ஏர்முனை இளைஞர் அணி

கலப்படத்தை கண்டுபிடிக்க எளிய வழிகள்!

♥கலப்படத்தை கண்டுபிடிக்க எளிய வழிகள்!

♥“நான் சூப்பர் மார்க்கெட்டில்தான் பொருட்களை வாங்குகிறேன். கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று சிலர் கூலாகச் சொல்வார்கள். அதிக விலைகொடுத்து வாங்கினால் கலப்படம் இருக்காது என்பதும் பலரின் நம்பிக்கை. உண்மையில் பாலில் தொடங்கி பனீர் வரை  எங்கும் எதிலும் எப்போதும் கலப்படம்தான். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பிராண்டுகளில் சர்வசாதாரணமாகக் கலப்படங்களைச் செய்கிறார்கள் கலப்பட மன்னர்கள். தரம் குறைந்த பொருட்களை வாங்கிவந்து, செயற்கை நிறம் கலந்தும் பாலீஷ் செய்தும் தரமான பொருட்களைப் போல விற்கிறார்கள்.

♥குறைவான விலை என்பதாலும், நம்மை எல்லாம் ஒன்றும் செய்யாது எனும் அசட்டு நம்பிக்கை காரணமாகவும் கலப்படப் பொருட்கள் விற்பனை எந்தத் தடையும் இன்றி நடந்துகொண்டே இருக்கிறது.

♥கலப்படம் என்பது, ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, உயிருக்கே உலை வைத்துவிடும் மரண வியாபாரம்.

#கலப்படத்தைக்_கண்டறிய…
♥டீ– கடைகளில் பயன்படுத்திய டீ தூள் கசடை (TEA DUST) குறைவான விலைக்கு வாங்கி, அதை வெயிலில் உலர்த்தி, சிவப்பு நிறம் சேர்த்து விற்கின்றனர். குறைவான விலையில் கிடைக்கும் டீ தூள்களில், இந்த சிவப்பு நிறம் கலக்கப்படுகிறது. சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீ தூளைக் கொட்டி, நான்கு துளிகள் நீர் விட்டால், சிவப்பு நிறம் தனியே பிரிவது தெரியும். குறிப்பாக, ஊர்களை மையப்படுத்தி விற்கும் ஸ்பெஷல் டீ தூள்கள் பெரும்பாலும் கலப்படங்களே.

♥#கடுகு – தரமான கடுகை, கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். கசகசா வகையைச் சார்ந்த அர்ஜிமோன் விதைகள் கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.

♥#மஞ்சள் தூள் – மஞ்சள் தூளில், ஸ்டார்ச் பவுடர் மற்றும் மெட்டானில் எல்லோ எனும் ரசாயனம்  கலக்கப்படுகின்றன. அரை ஸ்பூன் மஞ்சள்தூளை, 20 மி.லி இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் மெட்டானில் எல்லோ கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.

♥#பச்சைமிளகாய், #பச்சைப்பட்டாணி – பச்சைமிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிவதற்காக, மாலசைட் கிரீன் (MALACHITE GREEN) எனும் ரசாயனத்தில் முக்கி விற்கப்படுகின்றன. இதேபோல, உலர் பட்டாணி ஊறவைக்கப்பட்டு, மாலசைட் கிரீன் கலந்து ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் விற்கப்படுகிறது. இவற்றை வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால், அதில் மாலசைட் கிரீன் கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

♥#பட்டை – பட்டையில், கேசியா (CASIA), சுருள் பட்டை (CINNAMON) எனும் இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகள் நிறம் சேர்த்துக் கலக்கப்படுகின்றன. ஓரிரண்டு  பட்டையைக் கசக்கிப் பார்த்தால், கைகளில் எந்த நிறமும் ஒட்டக் கூடாது.

♥#மிளகு – பப்பாளி விதைகளைக் காயவைத்தால், மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில் மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது. மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால் கெரசின் வாடை  அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில் 50 மி.லி தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட வேண்டும். மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.

♥#சீரகம் – சீரகத்தில், குதிரைச் சாணம் சேர்க்கப்படுகிறது. தவிர, அடுப்புக் கரியும் சேர்க்கின்றனர். சீரகத்தைத் தண்ணீரில் போட்டால், சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சீரகம் போன்ற தோற்றம் கொண்ட ‘சதகுப்ப’ எனும் பொருளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். இதைப் பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே கண்டறிய முடியும்.

♥#டீலக்ஸ்_தனியா – தனியா அடர்பழுப்பாக இருக்கும். ஆனால், டீலக்ஸ் தனியா என்பதை வெள்ளையாக மாற்ற, சல்பர் டை ஆக்சைட் சேர்க்கப்படுகிறது. வெள்ளையாக்கப்பட்ட தனியாவைத் தவிர்த்துவிடலாம். அதுபோல, ஒரு ஸ்பூன் தனியா தூளில் தண்ணீர் விடும்போது, மேலாக தூசு போல படிந்தால் அதில் மரத் தூள் கலந்திருக்கலாம்.

♥#ஜவ்வரிசி – மஞ்சள் நிறமாக இருக்கும் ஜவ்வரிசி டினோபால் போன்ற, பளீர் வெள்ளை நிறத்தைத் தரும் ரசாயனங்களால் தீட்டப்படுகிறது. சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன்படுத்துங்கள்.

♥#பால் – அதிகாலை கறக்கும் பால் சில்லிங் சென்டருக்கு போகும் வரையில் கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. பாலையும் தண்ணீரையும் 10 மி.லி அளவில் சமமாகக் கலக்கும்போது, நுரை வந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம். மேலும், அருகில் விற்கும் பால்காரரிடம் பால் வாங்குவதே கலப்படங்களிலிருந்து தப்பிக்க எளிய வழி.

♥#மிளகாய்த்தூள் – இதில், சூடான் டை கலக்கப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூளைக் கலக்குங்கள். அதில் பளீர் சிவப்பு வண்ணம் வெளிவந்தால், அதில் சிவப்பு வண்ணம் கலந்திருக்கலாம்.

♥#தேங்காய்எண்ணெய் – தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வையுங்கள். தடிமனான திக்கான படிமம் எண்ணெயின் மேல் படிந்தால், அது சுத்தமான தேங்காய் எண்ணெய். நீர்த்த நிலையில் அப்படியே இருந்தால், அதில் மலிவான எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கின்றன.

♥#தேன் – பஞ்சைத் தேனில் நனைத்து, நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனைத் தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும். கரைந்தால், அது வெல்லப்பாகு.

♥#காப்பி பொடி – ஒரு கிளாஸ் தண்ணீரில் காப்பி பொடியைப் போட்டதும், காப்பி பொடி மேலே மிதக்கும். சிக்கரி கலந்திருந்தால், நீரில் மூழ்கும்.

♥#எண்ணெய் – எண்ணெயை ரீஃபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம். எண்ணெயில், 20 சதவிகிதம் அளவுக்கு வேறு ஒரு எண்ணெயைக் கலக்கலாம் என்கிற அரசின் இந்த அனுமதி, பல கலப்படங்களுக்குக் காரணமாக இருக்கிறது.

♥#தோசைமாவு – மாவு புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுகிறது. இதில் சுகாதாரமற்ற தண்ணீர் சேர்ப்பதால் இ-கோலை பாக்டீரியா இருக்கும். பல நோய்களை உருவாக்கும் கிருமி இது. எனவே, வீட்டில் மாவு அரைத்துச் சாப்பிடுவதே நல்லது.

♥#பனீர் – ஒரு கப் தண்ணீரில் ஒரு பனீர் துண்டைப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். ஆறியதும், சில துளிகள் அயோடின் சொல்யூஷன் கலக்கவும். பனீர் நீல நிறமாக மாறினால், அது கலப்படம். பனீர் தயாரிக்கப்பட்ட பாலில் கஞ்சி, மாவுப் பொருட்கள் (STARCH) கலந்திருக்கலாம்.

♥#நெய் – வனஸ்பதி அல்லது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு கலந்திருக்கும். இதைப் பரிசோதனை மையங்களில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெண்ணெயை வாங்கிக் காய்ச்சுவது நல்லது.
♥உலகத்தமிழ் மங்கையர் மலர்

Tuesday, January 9, 2018

பிஸ்தா

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.
அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

வைட்டமின் “பி6″ ஆனது, மனிதனுக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு மட்டுமில்லாமல் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அழகான சருமம்

பிஸ்தாவில் வைட்டமின் “ஈ” மிகுந்துள்ளதால், இது தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அழகான தோலினை தருகிறது.

மேலும் வைட்டமின் ஈ ஆனது புறஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பாகாமல் இருக்கவும் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.

ஆரோக்கியமான பார்வை

பிஸ்தா பருப்பில் சியாசாந்தின்(Zeaxanthin) மற்றும் லூட்டின்(Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது.

இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது.

மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய ஆரோக்கியம்

பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது.

பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். பிஸ்தா உட்கொண்டால் லுடீன் அளவை அதிகரிப்பதோடு இதயநோயின் அளவையும் குறைக்கும்.

நீரிழிவு நோய்

பிஸ்தா சாப்பிட்டால் டைப்2 நீரிழிவை பாதுகாக்கும். ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது.

மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது.

மேலும் பிஸ்தாவில் பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்.

ஆட்டுக்கறி வாங்குவோருக்குச் சில குறிப்புகள்

ஆட்டுக்கறி வாங்குவோருக்குச் சில குறிப்புகள்
"நீங்கள் கறி வாங்கச் செல்லும்போது, தொடை, சந்துக் கறிகளைக் கேட்டு வாங்குவீர்கள்."

"ஏனெனில், அப்பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும். எனினும் இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும்."

"பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும்."

"மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும்."

"இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும்."

"மேலும், நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்த அளவே அளவுகோல்."

"நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆடு வெட்டப்படும் போது இரத்தம் முழுவதுமாக வடிந்து விடுவதால், இறைச்சியில் தேங்கி இருக்காது."

"ஆனால் நோயுற்ற ஆடுகளில் சிறிது இரத்தம் தேங்கியிருக்கும். இறந்து போன பின் அறுத்துத் தொங்கவிட்டிருந்தால் இரத்தம் முழுவதும் இறைச்சியில் படிந்திருக்கும்."

"ஒரே வயதான ஆண், பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும்."

"#வெள்ளாட்டு #இறைச்சியில் #உள்ள

"ஈரப்பதம் —- 74.2%
புரதம் —- 21.4%
கொழுப்பு —- 3.6%
தாது உப்பு —- 1.1%"

"மாமிசத்திற்கும் சில மருத்துவக் குணங்களும் உண்டு."

"சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.
பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும்."

"#ஆட்டின் #தலை:

"இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும்."

"#கழுத்துக்கறி:"

"மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், மெல்லுவதற்கு ஏற்றது. முக்கியமாக இதில் கொழுப்பு இருக்காது."

"#ஆட்டின் #கண்:"

"கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்."

"#ஆட்டின் #மார்பு:"

"கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும்."

"#ஆட்டின் #இதயம்:"

"தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும்."

"#ஆட்டின் #நாக்கு:

"சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும்."

"#ஆட்டின் #மூளை:"

"கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்."

"#ஆட்டின் #நுரையீரல்:"

"உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்."

"#ஆட்டுக் #கொழுப்பு:"

"இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும்."

"#ஆட்டுக்கொழுப்பு:"

"அம்மை மற்றும் அக்கி நோய்களுக்கு சரியான நிவாரணியாகும்."

"#ஆட்டுக்கால்கள்:"

"எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்."

"#ஆட்டுக் #குடல்:"

"வயிற்றில் உள்ள குடல் புண்களை ஆற்றும் சக்தி ஆட்டுக் குடலுக்கு உண்டு

Monday, January 8, 2018

நோயிலிருந்து குழந்தையை தற்காத்துக்கொள்வது எப்படி?

நோயிலிருந்து குழந்தையை தற்காத்துக்கொள்வது எப்படி? - இயற்கை மருத்துவம்

1. காய்ச்சல் என்பது வியாதி அல்ல, உடலில் ஏற்பட்ட ஓர் உபாதைக்கு எதிராக உடல் மேற்கொள்ளும் போர். நம் உடலுக்குள் நுழைந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவை கொன்றொழிக்கும் பொருட்டு ஏற்படுவதுதான் உடற்சூடு. உபாதைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது காய்ச்சல் விடைபெறும்.
    
2. பாரசிட்டமால் கொடுத்தாலே காய்ச்சல் சரியாகிறது என்றால், அது உடல்வலி மற்றும் சோர்வினால் ஏற்பட்ட காய்ச்சலாக இருக்கலாம். மருந்து கொடுக்கும் இடைவெளி, குறைந்தபட்சம் 4 மணி நேரமேனும் இருக்க வேண்டும். காய்ச்சலால் உடல் தகித்தால், 'ஸ்பான்ச் பாத்' முறையில், ஈரத்துணியை வைத்து உடலை தலை முதல் பாதம் வரை, சூடு தணியும் வரை ஒத்தி எடுப்பது நலம். 48 மணி நேரத்திற்குப் பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை காண்பது நலம்.

3. சளியினால் காய்ச்சல் என்றால், எடுத்தவுடன் ஆன்ட்டிப் பயாடிக் மருந்துகளை நாடுவது நல்லதல்ல; மருத்துவர் தரும் வழக்கமான சளி மருந்தே போதும். அவ்வப்போது வெந்நீர் மற்றும் குளிர்ச்சி அல்லாத பொருட்களைத் தருவது போதும்.
    
4. சுக்கு, மிளகு, சேர்ந்த கஷாயமும், துளசி, ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி, கொஞ்சம் ஆறியப் பிறகு சிறிது தேன் கலந்து, காலை, மாலை என இருவேளைகள் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம்.

5. குடிக்கும் நீரைத் தூய்மைப்படுத்தி காய்ச்சிக் கொடுப்பதாலும், சுகாதாரம் இல்லாத உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலமும் டைபாய்ட் மற்றும் சில வைரஸ் காய்ச்சலை தவிர்க்கலாம்

6. போதிய நீரை அவ்வப்போது குடிக்க வைத்து, அடிக்கடிச் சிறுநீர் கழித்தால் நோய்க்கிருமிகள் உடலை விட்டு வெளியேறும். 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற திருக்குறளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நோயின் மூலகூறுக்குச் சிகிச்சை செய்வதே நலம்
    
7. பழம், பழச்சாறு போன்றவைகளை உணவுக்கு முன்பு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னராவது கொடுக்க வேண்டும். அல்லது உணவிற்கு பின்பு இரண்டு மணிநேரமேனும் கழித்துக் கொடுப்பது, அதன் பூரண சக்தியை உடலுக்குத் தரும்.

8. கொசு மருந்துகளையும் கொசுவர்த்திகளையும் தவிர்த்து வேப்பிலைப்புகை, பூண்டு, கற்பூரம், கொசு வலை அடித்தல், வீட்டினை, சுற்றுப்புறத்தைத் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற இயற்கை வழிமுறைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றலாம்  
    
9. காய்ச்சலில் குழந்தைகள் இருந்தால், மருந்துக் கொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள், அந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் உரையாடிக் கொண்டும் அல்லது உங்கள் அருகாமையைக் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் .
   
10. குழந்தையின் உடல்நலத்திற்கும் மனநலனிற்கும், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், நல்ல வெளிச்சம், நல்ல காற்று, ஆடிப்பாடி விளையாடுவது என்று குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுங்கள்