Saturday, January 24, 2026

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிக்கலாம்?


10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிக்கலாம்?

10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பம் இருக்கவே செய்யும். அவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது தொழில்துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படித்து பயன்பெற முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டில் ஏராளமான மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டில் எழுத உள்ளனர். 

மே மாதத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இந்நிலையில் 10-வது முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிப்பது என்ற கேள்வி அவர்கள் முன்னே எழுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவர்களுக்கான முக்கியமான காலகட்டம் இது. அடுத்து அவர்கள் தேர்வு செய்யப்போகும் பாடத்திட்டம்தான் அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்கிறது.

10-வது படித்து முடித்த மாணவர்களுக்கு தற்போது 3 முக்கிய வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதில் எதைத் தேர்வு செய்வது என்பதைப் பற்றி மாணவச் செல்வங்கள் முடிவு செய்து தங்களது எதிர்காலக் கல்வித் திட்டத்தை தீர்மானிக்கவேண்டும்.
10-வது படித்த மாணவர்கள் அடுத்து மேல்நிலை வகுப்பு பயில்வது அதாவது 11, 12-வது படித்தல், பட்டயப் படிப்புகளை படித்தல் அதாவது டிப்ளமோ படித்தல், 3-வது ஐடிஐ போன்ற தொழில்படிப்புகளைப் படித்தல் ஆகியவையே அந்த வாய்ப்புகளாகும்.

1.மேல்நிலை வகுப்பில் பயில்வது (பிளஸ்-2 படிப்புகள்):

பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மருத்துவம், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலாவது குரூப் எனப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்யலாம். மருத்துவம் மட்டுமே பயில விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இந்த குரூப்களைத் தேர்வு செய்யும்போது பி.இ, பி.டெக், பி.ஆர்க், பொறியியல் டிப்ளமோ (B.E., /B.Tech,B.Arch, Diploma), மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், நர்சிங், சித்தா, ஆயுர்வேதா,யுனானி, ஹோமியோபதி, யோகா (MBBS, BDS, B.Phar, Nursing etc), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகளையும் பயில முடியும்.

இதற்கு அடுத்தபடியாக வணிகவியல், கணக்குப் பதிவியல் படிக்க விரும்புபவர்கள் பொருளாதாரவியல் பிரிவுகளில் சேரலாம். சி.ஏ., பி.காம்., எம்.காம், அரசு வேலை, வங்கிப் பணியில் சேர விரும்புவர்கள் இந்த குரூப்பைத் தேர்வு செய்யலாம். கணக்குப் பதிவியல் பாடங்களைப் பயில விரும்பும் மாணவர்கள் வங்கி வேலை, அரசு வேலைகளுக்கு முயற்சி செய்யலாம்.

வரலாறு, பொருளாதாரவியல் பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்பவர்கள் உயர்கல்வியின்போது இதே பிரிவில் பி.ஏ, எம்.ஏ. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளைப் பயில முடியும். அதுமட்டுமல்லாமல் பட்டமேற்படிப்பு முடிக்கும்போது அவர்கள் அரசு தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ஆசிரியர் பணி உள்ளிட்ட துறைகளில் சேர முடியும்.

வொக்கேஷனல் குரூப்: இதுதவிர தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவை வொக்கேஷனல் குரூப் என்று அழைக்கிறோம். இந்தப் பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவச் செல்வங்கள் பொறியியல் (B.E., /B.Tech, B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகளைப் படிக்க முடியும். மேலும் தொழில் நுட்ப துறை சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும்.

2. பட்டய படிப்பு (டிப்ளமோ): 

10-வது படித்து முடித்த மாணவர்களுக்கு அடுத்த வாய்ப்பாக பட்டயப் படிப்பு எனப்படும் டிப்ளமோ படிப்புப் பிரிவில் உள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க விரும்பாத மாணவர்கள் டிப்ளமோ படிப்பைத் தேர்வு செய்யலாம். 

இது பெரும்பாலும் 3 ஆண்டு படிப்பாக இருக்கலாம்.  மெக்கானிக், சிவில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில் நுட்பத் துறைகள் , மருத்துவத் துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளமோ படிப்புகள் பரவிக் கிடக்கின்றன. தொழில் நுட்ப டிப்ளமோ படிப்புகளில் ஆட்டமொபைல், இஇஇ, இசிஇ, மெக்கானிக்கல், சிவில் ஆகிய டிப்ளமோ படிப்புகள் பிரபலமானவையாக உள்ளன. இவற்றை பெரும்பாலானா மாணவர் தேர்வு செய்து படிக்கின்றனர். மேலும் டிப்ளமோ படித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து பி.இ., பி.டெக் படிக்கும் வாய்ப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது.

இந்தத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால் ஆண்டுதோறும் டிப்ளமோ படிப்புகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்கின்றனர்.

அதைப் போலவே ஹோட்டல் நிர்வாகப் படிப்பு சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.

அதேபோல் மரைன் டெக்னாலஜி சார்ந்த டிப்ளமோ படிப்புகளும் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்தப் படிப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்கும்போது அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
டிப்ளமோ படிப்புகளை மாணவர்களுக்கான வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு டிப்ளமோ படிப்புகள் மூலம் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் என்னென்ன பிரிவில் படிப்புகள் இருக்கின்றனவோ அத்தனை படிப்புகளும் டிப்ளோமா பிரிவுகளில் உண்டு. இதற்கான டிப்ளமோ படிப்புகளை தமிழ கத்தில் உள்ள பாலிடெக்னிக்குகள் வழங்குகின்றன. சிறப்பான டிப்ளமோ படிப்பை 3 ஆண்டுகள் படித்து முடித்தவுடன் உள்நாட்டில் மட்டுமல்லாது யுஏஇ, கத்தார் போன்ற வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறலாம்.

தமிழ்நாட்டில் ஏராளமான டிப்ளமோ படிப்புகளை வழங்குவதற்காக அரசு பாலிடெக்னிக்குகள் , தனியார் பாலிடெக்னிக்குகள் பல இடங்களில் உள்ளன. இங்கு குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ படித்து முடிக்கலாம். படிப்பை முடித்தவுடன் பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பை மாணவச் செல்வங்கள் பெற முடியும்.

மேலும் டிப்ளமோ படிப்பு படிக்கும் மாணவச் செல்வங்கள் மூன்றாண்டு வேலை அனுபவத்துடன் பகுதி நேர பி.இ. / பி.டெக் படிப்பை தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்புகள் அமைந்துள்ளன.

3.  சான்றிதழ் படிப்பு (ITI): 

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பு, டிப்ளமோ படிப்புகளைப் படிக்க விரும்பாத மாணவர்கள், இறுதியாகத் தேர்வு செய்து சான்றிதழ் படிப்புகளான ஐடிஐ படிப்புகள்தான். இது தொழில்துறை சார்ந்த சான்றிதழ் படிப்புகளாக அமைந்துள்ளன.

இந்த வகை சான்றிதழ் படிப்புகள் பெரும்பாலும் 10 மாதங்கள் அல்லது ஓராண்டு பயிற்சி கொண்டதாக அமைந்துள்ளன. டர்னர், ஃபிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், ஏசி மெக்கானிக் போன்ற துறைகளில் ஐடிஐ படிப்புகள், தமிழக அரசு நடத்தும் ஐடிஐ-களில் வழங்கப்படுகின்றன. மிகவும் குறைந்த கட்டணத்தில் உதவித்தொகையுடன் அரசு இந்த ஐடிஐ பயிற்சியை மாணவச் செல்வங்களுக்கு வழங்குகிறது.
மேலும் ஐடிஐ பிரிவுகளில் ஏராளமான சான்றிதழ் படிப்புகள் மாணவர்களுக்குக் காத்திருக்கின்றன. நல்ல படிப்புகளைத் தேர்வு செய்து நாம் படிக்கும்போது அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும்.
இங்கு திறன் மேம்பாட்டுக்கான ஏராளமான சான்றிதழ் படிப்புகளும் கற்று தரப்படுகின்றன. இதில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சொந்தமாகத் தொழில் தொடங்கவும், வங்கிக் கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசே ஐடிஐ மூலம் செய்து கொடுக்கிறது.

புதிய துறைகள்: 

மேலும் நாள்தோறும் புதிய அளவிலான துறைகள் தோன்றி அதற்கான படிப்புகளும் வளர்ந்து வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் இ-காமர்ஸ் துறை அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. தொழில்நுட்பத்துறையுடன் (Technical jobs), இணைய வணிகம் எனப்படும் இ-காமர்ஸ் (e- Commerce) துறையும் அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே, இந்தத் துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் படித்து முடித்து தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும்.

10-வது படித்து முடித்த மாணவர்கள் தாங்கள் அடுத்து தேர்வு செய்யப்போகும் படிப்பு குறித்து ஒரு இலக்கை மனதில் கொண்டு அதற்கேற்ப முன்னேறிச் செல்லவேண்டும். மாணவர்கள், தங்களுடைய திறனுக்கும் மனநிலைக்கும் ஏற்ற சிறந்த படிப்பைத் தேர்வு செய்வது நல்லது.
பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புதான் நமக்குச் சிறந்தது என்று தேர்வு செய்து விட்டு பின்னர் பாதியில் அதிலிருந்து மீண்டும் டிப்ளமோ படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பு என மனம் மாறக்கூடாது.
நமக்கு பிளஸ் 2 படிப்புதான் சிறந்ததுதான் என்றால் அதில் நமது திறமையைச் செலுத்தி முன்னேறிச் செல்லவேண்டும். தொழில்நுட்பப் படிப்புகள்தான் நமக்கு லாயக்கு என்று எண்ணும் மாணவர்கள் அந்த தொழில்நுட்பப் படிப்புகளை டிப்ளமோவாகப் படித்து அதில் சிறப்பு பயிற்சிகளைப் பெறலாம். குறிப்பிட்ட துறையில் நிபுணராக நாம் மாறும்போது நமது எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment