கலைப் பாடங்களும் கை கொடுக்கும்!
அறிவியல் துறை மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்வி கிடைக்காவிட்டால் கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வர். கலைப் பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் கல்லூரியில் நுழையும் போது பி.காம்., பி.பி.ஏ. போன்ற பாடங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனர். ஆனால், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.
தமிழ் இலக்கியம் (Tamil literature)
தமிழ் இலக்கியம் கற்போருக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பலர் தமிழ் படித்தால் எதிர்காலமே இல்லை; வாழ்க்கை வீணாகப் போய்விடும் என்றெல்லாம் தவறாகக் கருதுகின்றனர். இத்தகைய தாழ்வு மனப்பான்மையை முதலில் தூக்கி எறிய வேண்டும். இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தால் கணிதம், இயற்பியல், வரலாறு உள்ளிட்ட மாணவர்களுக்கு உரிய அனைத்து வேலைவாய்ப்புகளும் இவர்களுக்கும் கிடைக்கும் என்பதே உண்மை.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வு முதல் இளங்கலைப் பட்டத்தைத் தகுதியாகக் கொள்ளப்படும் அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகளையும் தமிழ் படித்தோர் எழுதிவேலைவாய்ப்புப் பெற முடியும். பெறவும் செய்கிறார்கள். மேலும், இளங்கலை கல்வித் தகுதி தேவைப்படுகிற வங்கித் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், அனைத்தும் தமிழ் படித்தோர் எழுதி பணி வாய்ப்புப் பெறலாம். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 2 உள்ளிட்ட தேர்வுகளையும் எழுதலாம். மேலும், இளங்கலையுடன் பி.எட் அல்லது புலவர் பட்டயம் (டிபிடி) படித்திருந்தால் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகப் பணிக்குச் செல்லலாம். அது மட்டுமல்லாமல் முதுகலையில் தமிழ் இலக்கியத்துடன் இதழியல் உள்ளிட்ட பல்வேறு விதமான படிப்புகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளன. முதுகலை இதழியல் படித்தோருக்கு பத்திரிகை, ஊடகத் துறையில் செய்தியாளர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று தமிழைப் பிழையின்றிப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் பெருமளவில் ஆள்கள் தேவைப்படுகின்றனர். அவர்களுக்கு ஊடகத் துறை சார்ந்த தொலைக்காட்சி, வானொலி, பண்பலை (எப்.எம்) ஆகியவைகளில் செய்தி வாசிப்பவர், நிகழ்ச்சி அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் காத்திருக்கின்றன. நம் நாட்டில் மட்டுமல்லாமல் சீனா, மோரீஷஸ், ஜப்பான், லண்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணி வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., பட்டங்கள் பெற்றவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் பேராசிரியர்களாகச் செல்ல முடியும். மேலும், தமிழ் இலக்கியத்துடன் கல்வெட்டு ஆய்வு,, கூடுதலாக சுவடி வாசித்தல், சுற்றுலாவியல் போன்றவற்றில் பட்டயங்கள் (டிப்ளமா) பெற்றால் தமிழக அளவில் தொல்லியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது என்றார்.
ஆங்கில இலக்கியம் (English literature)
இப்போது நிலவும் கல்விச் சூழலில் ஆங்கில இலக்கியப் பாடத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆங்கில மொழி பொது மொழியாக உள்ளதாலும், நம் நாட்டில் பலரும் அறிந்துள்ள மொழி என்பதாலும், உயர் கல்வி நிலையங்களில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் சுய நிதிக் கல்லூரிகளில் BA, MA, MPhil (இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டம்) எனப் பல நிலைகளில் ஆங்கில இலக்கியப் பாடம் கற்பிக்கப்படுகிறது. ஆங்கில மொழியில் புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்திலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும் இலக்கியம் உள்ளிட்ட தகவல்களை மொழிப் பெயர்ப்பது, பல்வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிதியுதவியுடன் மொழி பெயர்ப்பியலில் சான்றிதழ், டிப்ளமோ, உயர் டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் பி.எட் படித்து விரைவில் ஆசிரியர் பணியில் சேர முடியும். எம்.ஏ. படித்தவர்கள் எம்.பில் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும். முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் நிலையிலேயே பல்கலைக்கழக நிதியுதவிக் குழு நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் பதவி ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித் தொகை பெறுவதற்கான (NET Exam For Lecturership JRF) தேர்வு, தமிழக அளவில் நடத்தப்படும் (SLET) தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்றால் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி வாய்ப்பைப் பெறுவது எளிது. ஆங்கில இலக்கியப் படிப்பில் இதழியல் (Journalism) படித்தால் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. மேலும், படிப்பு, வேலை வாய்ப்புக்காக வெளி நாடு செல்ல விரும்புவோருக்கு பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் TOEFL தேர்வில் பங்கேற்று வெற்றி பெற ஆங்கில அறிவுதான் அடிப்படையாக அமைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பி.பீ.ஓ., கால் சென்டர்களில் ஆங்கிலம், ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இத்தகைய காரணங்களால் ஆங்கிலப் பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறதென்பது அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று. வரலாறு படிக்க உதவித் தொகை வரலாற்றுப் படிப்பு மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து வரலாற்றுத் துறை பேராசிரியர் சா. விஸ்வநாதன் கூறியது: வரலாறு படிப்பை நிறைய பேர் மதிப்புக் குறைவானதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறான கருத்து. இந்தப் பாடங்களைப் பட்டப் படிப்புடன் நிறுத்திவிடாமல் ஆராய்ச்சிப் படிப்பு வரை எல்லைகளை விரித்தால் நல்ல நிலையை எட்ட முடியும்.
ஓரளவு நடுத்தர மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இளங்கலை வரலாற்றுப் பாடத்தை எடுத்துக் கொண்டு நல்ல கல்லூரிகளைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதன் பிறகு முதுகலை பட்டப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் அல்லது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தால் நல்லது. இதையடுத்து, எம்.பில். படிக்க புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால் மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். ஆங்கில மொழியில் நல்ல அனுபவத்தையும் பெற முடியும். மேலும், புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் நடைபெறும் இளநிலை ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பல்கலைக்கழக நிதியுதவிக் குழு மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 15 ஆயிரம் உதவித் தொகை கிடைக்கும். அத்துடன் ஆண்டுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்க உதவித்தொகை கிடைக்கும். எனவே, நன்றாகக் படிக்கக்கூடிய மாணவர்கள் இப் படிப்பில் சேர்ந்தால் 5, 6 ஆண்டுகளில் நல்ல நிலைக்கு வர முடியும். இப்படிப்பை முடித்தால் தொல்லியல் துறை, சர்வதேச அளவில் யுனெஸ்கோ நிறுவனத்தின் வரலாற்று ஆய்வு மையம், உலகம் முழுதும் உள்ள அருங்காட்சியகங்களில் வேலை வாய்ப்பை பெற முடியும். இன்றைய போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் 40 சதவீதக் கேள்விகள் வரலாற்று தொடர்புடையவைதான். குரூப் 1 தேர்வு எழுதும் பிற பாடங்கள் படித்த மாணவர்களின் விருப்பப் பாடமாக திகழ்வது வரலாற்றுப் பாடம்தான். அது போல ஐஏஎஸ் தேர்வுகளிலும், சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் வெற்றி பெறும் மாணவர்களில் 30 சதவிகிதம் பேர் வரலாற்றுப் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள்தான். முறையாகத் தெரிந்து படித்தால் வரலாறு வாழ்க்கையைத் தரும் என்பதே உண்மை.
பொருளியல் (Economics)
பொருளியல் படிப்பு மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து பொருளியல் துறைத் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கூறியது: பொருளாதாரம் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான கருத்து உள்ளது. பொருளாதாரம் சார்ந்த படிப்புகளின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதே இதற்குக் காரணம். வேறு பாடம் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் படிக்கின்ற பாடம் என்ற நிலையை மாற்றி, பொருளியல் என்பது அனைவரும் அறிய வேண்டிய கட்டாயப் பாடம் என்பதே உண்மை. பொருளாதாரத்தில் 130 பாடப் பிரிவுகள் உள்ளன. இதைப் படித்தவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவுத் தணிக்கைத் துறை, புள்ளியல் துறை, இந்திய பொருளாதாரப் பணிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு, இந்தியத் திட்டக் கமிஷன், வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, விற்பனை சந்தை, தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்துப் பணிகளுக்கும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி வாய்ப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பள்ளிகளில், பொருளாதாரப் பாடம் கற்பிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள சென்னை வளர்ச்சி படிப்பு மையம் மூலம் திட்ட அறிக்கை ஆய்வுகள், முனைவர் பட்டம் பெற முடியும். பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்., அல்லது எம்.எஸ்சி., பட்டப் படிப்பு அறிவியலோடு சேர்த்துப் பயிற்றுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
(இது ஒரு மீள் பதிவு)
No comments:
Post a Comment