Showing posts with label Home. Show all posts
Showing posts with label Home. Show all posts

Wednesday, September 19, 2018

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
**********************************************************************

https://m.facebook.com/story.php?story_fbid=1626865627611087&id=1565094460454871

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------
மேலும் விவரம் வேண்டுபவர்களுக்கு இந்த கீழ்கண்ட தமிழ்நாடு அரசின் இணையதம் தொடர்பு கொடுத்திருக்கிறேன் ... அணைத்து தகவல்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கு கிடைக்கும்..
http://www.tn.gov.in/ta/documents/deptname

Saturday, June 20, 2015

வீடு வாங்கும் முன் ஒரு நிமிஷம்

ரொம்ப நாளாக நீங்கள் யோசித்து, ஆலோசித்து கடைசியாக உங்கள் கனவான சொந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா? வீடு கட்டுவது மட்டுமல்ல, வீடு வாங்குவது கல்யாணப் பரபரப்புக்கு இணையானதுனால் எனச் சொல்லலாம்.
அந்தப் பரபரப்பில் வீட்டிற்குத் தேவையான அடிப்படையான சில விஷயங்களை மறந்துபோகக் கூடும். லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து வாங்கும் வீட்டில் சில விஷயங்களைக் கவனிக்கத் தவறி அது பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.
கொஞ்சம் நிதானமாகப் பொறுமையாக வீட்டைக் குறித்த உங்கள் எல்லாச் சந்தேகங்களையும் கேள்விகளை எழுப்பித் தெரிந்து, தெளிவுபெற வேண்டும். இதில் உங்களுக்குத் தயக்கமோ, கூச்சமோ வேண்டாம். பல லட்சம் ரூபாய் செலவு செய்து வீட்டை வாங்கும்போது நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அடுத்த விஷயம் வாங்கப் போகும் வீடு அமைந்திருக்கும் பகுதி. அது மிகவும் முக்கியம். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் இடமாகப் புது வீடு இருக்க வேண்டும். அலுவலகம், குழந்தைகளுக்கான பள்ளி ஓரளவு அருகில் இருக்க வேண்டும். பிறகு வீட்டுக்குத் தேவையான அன்றாட பொருட்களுக்கான கடைகளும் அருகில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுப்புறம் அமைதியாகவும், தூய்மையாகவும் இருப்பது அவசியம். முக்கியமாகப் பாதுகாப்பான பகுதியாகவும் இருக்க வேண்டும்.
பிறகு வீட்டை மேலோட்டமாகப் பார்த்து வாங்கத் தீர்மானிக்க வேண்டாம். வீட்டின் ஒவ்வொரு அறையையும் நன்கு பார்த்து உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதை யோசித்து முடிவுசெய்ய வேண்டும்.
வீடு வாங்குவது தொடர்பான ஆவணங்களைச் சரியாகப் பார்க்க வேண்டும். அதற்கான சட்டரீதியிலான பத்திரப் பதிவைச் செய்ய வேண்டும். அந்த வீடு தொடர்பான எல்லா ஆவணங்களும் உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாதா என்பதையும் பார்க்க வேண்டும்.

அழகும் பாதுகாப்பும்

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் நெடுநாள் கனவாக இருக்கும். அறைகள் எப்படி இருக்க வேண்டும். ஜன்னல்கள், கதவுகள், சுவர் எப்படி இருக்க வேண்டும் எனப் பலவிதமான எதிர்பார்ப்புகள் நமக்கு இருக்கும். மேலும் வீடு என்பது வெறும் செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. நம் வாழ்க்கையின் ஆதாரமாக விளங்கப்போகும் ஓர் இடம். அதனால் சொந்த வீடு கட்டும் கட்டுமானப் பணிகள் விஷயங்களில் மற்றவர்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள் என்பதற்காக ஏனோதானோ என முடிவு எடுக்கக் கூடாது.
வீடு கட்டும்போது அஸ்திவாரத்தில் தொடங்கி வீட்டிற்கு வண்ணம் அடிப்பதுவரை உங்களுடைய தேர்வு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் உபயோகிக்க வேண்டும். அதைக் கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும்.
* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
* கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். அந்த சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஒரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கைவிடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம்.
சிமெண்டின் தரத்தை அறிய மற்றொரு முறை, அதைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
* இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக, அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள்.
அதனால் மண்ணை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவை பரிசோதித்தாலேயே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது.
* இப்போதுள்ள நவீனத் தொழிற்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. கட்டிடத்தின் வரைபடத்திற்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டுவந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள்.
முன்புபோல கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மானித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமல்ல. அதுபோல சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
* கட்டுமானத்திற்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும்.
24 மணி நேரத்திற்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம். இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும்; தரத்திலும் சிறந்தவையாக இருக்கும்.
அதுபோல தேவையப் பொறுத்து அதற்குத் தகுந்த கற்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுச் சுவர்களுக்கு ஹல்லோ செங்கல் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்க ஆகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை. அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம்.
* கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவாக இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களைக் கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்திற்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை.
அதனால் பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து சேதாரத்தைக் கண்காணிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் சேதாரம் என ஒப்பந்தக்காரர்கள் கூறினால் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
* கான்கிரீட்டுக்கு வலுச் சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைக் கம்பிகளைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பிகளில் உள்ள பிசிறுகளை நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கம்பியின் மீது எவ்விதமான கறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அடையாளத்திற்காகக் கம்பிகள் மீது பெயிண்ட் அடித்திருக்கக்கூடும். அதுபோல எண்ணெய்க் கறை, சேறு இது போன்ற கறைகளையும் நீக்க வேண்டும். இம்மாதிரியான கறைகளுடன் கம்பியைக் கட்டிடப் பணிகளுக்கு உபயோகித்தால் கம்பி, சிமெண்டுடன் வலுவான பிணைப்பை உண்டாக்காமல் போய்விடும்.
* மின்சார இணைப்பைப் பொறுத்தவரை தரமுள்ள வயர்களை வாங்குங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிக ஆற்றல் வீணாகும் வயர்களை வாங்காதீர்கள். அதனால் மின்சாரம் வீணாகி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு உண்டாகும். சுவிட்சுகளின் விஷயத்திலும் கவனம் தேவை. மலிவான வகை சுவிட்சுகள் விபத்தை உண்டாக்கக்கூடியவையாக இருக்கும். வீட்டுக்கு விளக்குகளை அமைக்கும்போது முன்கூட்டியே திட்டமிடுங்கள். அறைக்குத் தகுந்தவாறு வண்ண விளக்குகளை அமையுங்கள்.
* வீட்டுக்கான கதவுகள், ஜன்னல்கள் செய்யும்போது வீண் கவுரவத்திற்காக எல்லாவற்றையும் மரத்தால் செய்ய வேண்டாம். சில முக்கியமான நுழைவு வாயிலை மட்டும் மரத்தைக் கொண்டு செய்யலாம். ஜன்னல்களையும் மரத்தால் செய்யலாம். ஆனால் கழிவறைக் கதவு போன்றவற்றிற்கு ரெடிமேர் பிளாஸ்டிக் கதவுகளைப் பயன்படுத்தினாலேயே போதுமானது. மரப் பொருள்களின் பயன்பாடு வீடு கட்டுவதில் அதிகம் செலவுவைக்கக்கூடியது. அதனால் அதில் கவனமாக இருங்கள். அழகும் பாதுகாப்பும்தான் முக்கியமே தவிர ஆடம்பரம் அல்ல.
* வீட்டை ஒப்பந்த முறையில் கட்ட வேண்டுமா அல்லது பணியாளர்களை நியமித்து நீங்களே கட்டப் போகிறீர்களா என்பதை முன்பே முடிவுசெய்துகொள்ள வேண்டும். 5000 சதுர அடி அளவு வீடு கட்ட நினைப்பவர்கள் தனியாகக் கட்டுமானப் பொறியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். ஆனால் 800 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் வீடுகட்ட நினைப்பவர்களுக்குத் தனி கட்டுமானப் பொறியாளர்கள் தேவையில்லை.
அதுபோல கிராமப்புறமாக இருந்தால் ஒப்பந்தம் இல்லாமல் வீடு கட்டும் சாத்தியம் உண்டு. நகர்ப்புறமாக இருந்தால் ஒப்பந்தம்தான் சிறந்தது. அதிலும் ஒரு குழப்பம் வரும்; தொழிலார்களை மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா, அல்லது கட்டுமானப் பொருள்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா என்று.
உங்களுக்கு அலுவலகத்தில் கட்டிடப் பணிகளைக் கவனிக்க விடுமுறை கிடைக்குமா என்பன போன்ற பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். நீங்கள் அருகில் இருந்து கவனிக்க முடியவில்லை என்றால் கட்டுமானப் பொருள்களுக்கும் சேர்த்து ஒப்ப்ந்தம் போட்டுக்கொள்வது சரி. எந்த முறையாக இருந்தாலும் தரத்தில் கவனமாக, உறுதியாக இருங்கள்.
* கட்டுமானத்தைப் பொறுத்தவரை சில புதிய யுக்திகளைப் பயன்படுத்தலாம். அதாவது கட்டிட நிபுணர் லாரிபேக்கர் கண்டுபிடித்த எலிப் பொறித் தொழில்நுட்பம் மூலம் சுவர் கட்டும்போது கட்டிடத்திற்கு ஆக வேண்டிய செங்கல் மிச்சமாகும். அதுபோல வீட்டின் அறைகளைப் பிரிப்பதற்கான சுவர்களை அதிகக் கனம் உள்ளதாக உருவாக்க வேண்டியதில்லை.

அடுக்கடுக்கான பிரச்சினைகள்: தீர்ப்பது எப்படி?

சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மிக அதிகம். நகரின் இட நெருக்கடியை வைத்துப் பார்க்குபோது அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் இருப்பிடத் தேவைக்குச் சரியான தேர்வு. பல முன்னணி நிறுவனங்கள் நகரின் இடநெருக்கடியைக் கணக்கில் கொண்டு, இப்போது புறநகரில் தங்கள் கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்னும் சென்னை, கோவையைத் தாண்டி தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிரபலம் அடையவில்லை. இவற்றுக்கு அடுத்தபடியாக மதுரையில், திருச்சியில் சிறிய அளவில் வந்துள்ளன.
ஆனால் இன்னும் அங்கு தனி வீடுகளையே மக்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு அவ நம்பிக்கைகளே மேலோங்கி உள்ளன. ஒரே இடத்தை அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த எல்லோரும் பகிர்ந்துகொள்வது அவர்களுக்குக் குழப்பமாக இருக்கிறது.
அதை உண்மையாக்குவதுபோல் இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மற்ற குடியிருப்புவாசிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். வெளிப்புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசுவது எல்லோரும் ஒத்துழைத்தால்தான் சாத்தியம். குடியிருப்பில் ஏற்படும் சின்னச் சின்ன பராமரிப்புக்கும் குடியிருப்புவாசிகளே பொறுப்பு.
அதுபோல அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது சில பிரச்சினைகள் தொடங்கிவிடும். ஒப்பந்தம் போட்டு எத்தனை மாதத்திற்குள் வீட்டைக் குடியிருக்கத் தயாராகும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் சில கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீட்டைக் கட்டித் தருவதில்லை.
அதனால் வங்கிக் கடன் ஒரு பக்கம், வீட்டுக் கடன் ஒரு பக்கம் எனக் கொட்டும் தவிலைப் போல் இரு பக்கமும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு எனக் கேட்கிறீர்களா?
ஒப்பந்தத்தில் இம்மாதிரி விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டைக் கட்டி முடிக்கவில்லை என்றால் இப்போதுள்ள வீட்டிற்கான வாடகையை அவர்கள் தர வேண்டும் எனப் பொறுப்பேற்கும்படி ஒப்பந்தத்திலேயே குறிப்பிட வேண்டும்.
கட்டுமான நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பான கிரடெய்யின் உறுப்பினராக இருக்கும்பட்சத்தில் அங்கு இந்த நிறுவனத்தைப் பற்றிப் புகார் தெரிவிக்கலாம். பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் முன் அந்நிறுவனத்தைப் பற்றித் தெளிவாக விசாரித்து வாங்குவதும் உத்தமம்.
கிரெடாய் நுகர்வோர் 
குறைதீர்க்கும் அமைப்பு 
தொடர்புக்கு 1800-11-4000. 
www.credaichennai.in.

இனிய இல்லக் குறிப்புகள்

சொந்த வீடு கட்ட வேண்டும் என எல்லோருக்கும் கனவு இருக்கும். ஆனால் அப்படிக் கட்ட முடிவுசெய்த பிறகு சில விஷயங்களில் நாம் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவசர, அவசரமாக இடத்தைத் தேர்வுசெய்துவிட்டால் பின்னால் சிரமப்படுவது நாமாகத்தான் இருப்போம். அதனால் ஆயுள் முழுக்க இருக்கப்போகும் இடத்தை நிதானத்துடன் தேர்வுசெய்ய வேண்டும்.
இடம் தேர்வு செய்தல்
முதலில் எந்த ஊரில் எங்கு மனை வாங்குவது என்பது குறித்துத் தெளிவாக முடிவு செய்யுங்கள். அந்த மனைக்குச் செல்லும் வழி முக்கியமான பேருந்துகள் அதிகம் செல்லும் சாலையுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம். மனைக்குச் செல்லும் சாலை குறைந்தது இருபத்து மூன்று அடி அகலம் இருக்க வேண்டும். மனை வாங்கும் ஏரியா வளர்ச்சி பெறக் கூடியதாக (development) இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகவும், வீடுகட்ட உபயோகிக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியம். மனைக்கு அரசு ஒப்புதல் கிடைத்திருக்க வேண்டும். மனை வாங்குமிடம், மனைவி மற்றும் குழந்தைகள் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும். அக்கம் பக்க மனைகளில் ஒரு சில வீடுகளாவது உள்ளதா, அப்படியானால் எத்தனை ஆண்டுகளாக அவர்கள் அங்கு வசிக்கிறார்கள் என்ற விவரங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதியின் வளர்ச்சி வேகத்தைத் தெரிந்துகொள்ள முடியும். எதிர் காலத்தில் அந்தப் பகுதியில் அரசு அல்லது தனியார் எவரேனும் ஏதேனும் கட்டுமானப் பணிகள் செய்ய இருக்கின்றனரா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் அதனால் நாம் வாங்க இருக்கும் மனைக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற விவரங்களை நமக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நேரே சென்று அந்தந்தத் துறையினரைச் சந்தித்து விவரங்கள் கேட்பது நல்லது. குறைந்தது வீட்டிற்கு வெளியே தினமும் செல்லும் குழந்தைகளின் கல்விச்சாலை அல்லது கணவன் மனைவி இவர்களின் அலுவலகம் வீட்டிலிருந்து எளிதில் சென்று வரக்கூடியதாக அமைய வேண்டும். அவசரத்தேவைகளுக்குச் சிறிய பெட்டிக் கடையாவது அந்தப் பகுதியில் இருக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்தல் இப்போது நாம் வாங்க இருக்கும் மனை விற்பவரிடம் சென்று, அவரிடம் உள்ள ஆவணங்களைப் பார்க்க வேண்டும். ஆவணங்கள் பார்க்கத் தெரிந்தவர்கள் எவரேனும் உடன் இருத்தல் அவசியம். அந்த இடத்திற்கு வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate - EC) வாங்க வேண்டும். வில்லங்கம் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகு பத்திரப்பதிவு செய்யலாம். தேவைப்பட்டால் வழக்கறிஞர் அறிவுரைக்குப்பின் பத்திரம் பதிவுசெய்யலாம்.
பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தவுடன், ஒவ்வொன்றிலும் நான்கு நகல்கள் எடுத்து வைத்துக்கொள்வது பின்னர் உதவிகரமாக இருக்கும். மனை சம்பந்தப்பட்ட மூல ஆவணங் களைத் தேவை இல்லாமல் வெளியேகொண்டு செல்வதைத் தவிர்க்கவும். நகல்களை மட்டுமே எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொள்ளவும்.
திட்டமிடல்
நமக்கு எத்தனை அறை தேவை, கழிப்பறை எத்தனை, சமையல் செய்ய அறை, ஹால், கார் நிறுத்தும் இடம், மற்ற தேவைகள் என்ன என்பதனையும், கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்துதல் முதலியவற்றையும் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் கடன் தரும் வங்கிகளில் வாங்கப் போகும் கடன் தொகைக்குத் தவணைத்தொகை (Equated Monthly Instalment -EMI) பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் எனத் தெரிந்து வைத்துக்கொள்வது நலம். தரையில் இரண்டு படுக்கை அறைகள் போதுமானது. தேவைப்பட்டால் மாடியில் குளியலறையுடன் கூடிய ஓர் அறை கட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது. அனுமதி பெற்ற கட்டிடப் பொறியாளரிடம் உங்கள் தேவைகளைச் சொல்லி வீட்டின் வரைபடம் வரைந்து முறையான அனுமதிபெற வேண்டும்.
வீட்டுக் கடன்
இனி நீங்கள் எந்த வங்கியில் வீடு கட்ட கடன் வாங்க முடிவு செய்தீர்களோ அங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி கடிதம், உங்கள் வருமானச் சான்று, மற்றும் கடன் விண்ணப்பம் இவற்றுடன் செல்லாம். அங்கு வீட்டு வசதி கடன் பிரிவு அதிகாரியை நேரில் சந்தியுங்கள். இடைத்தரகர் எவரும் தேவை இல்லை. நீங்கள் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். அவர் கேட்கும் கேள்விகள் உங்கள் வருமானம், குடும்பத்தில் உள்ள நபர்கள், உங்களால் மாத தவணை எவ்வளவு செலுத்த இயலும், உங்களின் இதர கடன் சுமை போன்றவற்றைக் குறித்ததாக இருக்கும்.
பொறியாளரைத் தேட வேண்டும்
கடன் தொகை கிடைத்துடுவிடும் என்றவுடன் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? சுமார் பதினைந்து அல்லது இருபது வருடங்கள் அனுபவமிக்க பொறியாளரைத் தேடிப்பிடிக்க வேண்டும். பொருட்களை நீங்களே வாங்கித்தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்துகொள்வது நல்லது. அதற்கு முன் அவர் சமீபத்தில் கட்டிய இரண்டு அல்லது மூன்று கட்டிடங்களைப் பார்வையிடுவது அவசியம். அந்தந்த வீட்டு உரிமையாளர்களிடம் பேசி பொறியாளரின் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. அதனால் பின்னால் வரக்கூடிய பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
கட்டுமானப் பொருள்கள்
வேலை தொடங்கியவுடன் அடுத்த நாள் செய்யப்போகும் வேலைகள் என்ன? அதற்கு தேவையான பொருட்கள் நம்மிடம் உள்ளனவா எனத் தெரிந்து கொள்வதும் அவசியம். மற்றபடி இதற்கு முன்பு சமீபத்தில் வீடுகட்டிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஆலோசனை பெற்று தச்சர், பெயின்டர், கிரானைட் அல்லது மார்பிள் வேலை செய்பவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். இம்மாதிரி திட்டமிட்டு வேலைகள் செய்ய வேண்டும். கடைசியாகக் கட்டிடப் பணிகள் முடிந்ததும் மின் இணைப்புப்பெற விண்ணப்பிக்க வேண்டும். மின் இணைப்பு பெற்றதும், சொந்தவீட்டுக்குக் குடிபுகுந்து, ஆனந்த வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதான்.

சொந்த வீட்டிற்குச் சில யோசனைகள்

வீடு கட்டுவதில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை வேறு. இன்றைக்குள்ள நிலை வேறு. இன்று வீடு கட்டுபவர்களை விட அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குபவர்களே அதிகம். இதற்குக் காரணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் வீட்டு மனைகள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றின் விலையேற்றம். அதுமட்டுமல்ல இப்போத்து கட்டுமானத்திற்கு மிக அவசியமான மணல் போன்றவற்றிற்கு நிலவும் தட்டுப்பாடும் ஒரு காரணம். இன்றைக்குள்ள பரபரப்பான வாழ்க்கையில் இவை ஒவ்வொன்றிற்கும் அலைந்து திரிந்து வீட்டைக் கட்டப் பெரும்பாலானவர்களுக்குப் பொறுமை இல்லை.
சொந்த வீட்டின் அவசியம்
இன்றைக்கு உள்ள இந்த நிலையிலும் தங்களுக்கெனச் சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு சிறிய தோட்டம் அமைத்துச் சந்தோஷமாக வாழ ஆசைப்படுவர்கள் உண்டு. நகருக்குள் மனை வாங்க இயலாத காரணத்தால் நகர்ப் பகுதியை விட்டுவிட்டு புறநகர்ப் பகுதிகளில் சமாளிக்கும் வகையில் வாங்கி கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கினால் குடிபுகுமுன் மொத்தப் பணத்தையும் செலுத்திவிட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் கட்டப்படும் தனி வீடுகளில் அது இல்லை. சிலவற்றை முடிக்க முடியாமல் போனால் கூட நாளடைவில் முடித்துக்கொள்ளலாம் என்கிற வசதி உள்ளது. இப்போதெல்லாம் வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு முன்னுரிமை தருகிறார்கள். இன்றைய தலைமுறை இளைஞர்கள் குறிப்பாக நடுத்தர வருவாயுள்ளவர்கள் சொந்த வீட்டின் அவசியத்தை நன்குணர்ந்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பே வீடு வாங்குவதில் ஆர்வமாகவும் முனைப்பாகவும் இருக்கிறார்கள். திருமண ஜோடியைத் தேடும் விளம்பரங்களில் எல்லா வசதிகளையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் கொண்ட சொந்த வீடு உள்ளது என்பதைப் பெருமையுடன் சொல்வதைப் பார்க்க முடிகிறது. இச்சூழ்நிலையில் தனி வீடு கட்டுபவர்கள் சந்திக்கும் சிரமங்களை முன்கூட்டியே புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தீர்மானித்துச் செயல்படுவது நல்லது.
அளைவைக் கூட்ட வேண்டாம்
கட்டப்படும் வீட்டின் வரைபடம் தயாரிக்கும்போதே பட்ஜெட்டுக்குத் தகுந்தவாறு தயாரிப்பது அவசியம். வீடு கட்ட முற்படும்போது மனதில் எழும் ஆசைகள், கனவுகள் பட்ஜெட் தொகையை மறக்கடித்துவிடும். ‘வீடு கட்டும்போது பார்த்துக்கொள்ளலாம்’ ‘அட்ஜெஸ்ட் செய்துவிடலாம்’ ‘சமாளித்து விடலாம்’ என்றெல்லாம் தோன்றும். ஆனால் இம்மாதிரி அஜாக்கிரதை வீட்டைக் கட்டி முடிக்க முடியாமல் திணற வைக்கக்கூடும்.
வரைபடத்தில் உள்ள அளவுகளில் ஓரடி கூட்டினால் நாம் திட்டமிட்ட பட்ஜெட்டில் பெரிய அளாவு துண்டு விழும். இதை இப்போதே நினைவில் கொள்ளலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீடு கட்டினார். வானம் தோண்டப்பட்டுக் கிடந்த நிலையில் நண்பரின் மனைவில் வந்து பார்த்துள்ளார். வானம் தோண்டப்பட்ட நிலையில் அறைகள் சிறியதாகத்தான் தெரியும். ஆனால் கட்டி முடிக்கும்போதுதான் அதன் முழு வடிவத்தை நாம் காண முடியும். மனைவிக்கு சமையலறையும் படுக்கையறையும் சிறியதாக இருப்பாகத் தோன்றியுள்ளது.
கணவர் குறைபட்டுக்கொண்டார். நண்பரும் மனைவியின் விருப்பதிற்கிணங்க அறையை அகலப்படுத்தியுள்ளார். இரண்டு மூன்று அடிகள்தான் அகலப்படுத்தினார். ஆனால் அவர் திட்டமிட்டிருந்த பட்ஜெட்டில் 5 லட்சத்திற்மும் மேல் அதிகரித்தது.
காற்று வர வழிசெய்வோம்
வீட்டினுள் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டுமானால் வீட்டினுள் காற்று நுழைந்து வெளியேறும் வகையில் கதவுகளையும், ஜன்னல்களையும் அமைக்க வேண்டும். கதவுக்கு நேராக கதவு, ஜன்னலுக்கு நேராக ஜன்னல் அமைத்தால் காற்றோட்டம் நன்றாக இருக்கும். எல்லா அறைகளிலும் ஜன்னல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் ஆரோக்கியத்திற்கு வெளிச்சமும் காற்றும் அவசியம்
பரணைத் தவிர்ப்போம்
படுக்கையறை அறைகயின் எல்லாப் பக்கங்களில் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் வரவேற்பறையிலும் தேவையில்லாமல் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் பரண் அமைக்கும்போது அதில் தூசிகள் அடையும். ஒட்டடைகள் உருவாகும். அதுபோல பல்லி, கரப்பான், ஆகியவற்றின் வசிப்பிடமாக இம்மாதிரியான பரண் ஆகிவிடும்
தளத்தை உயர்த்துவோம்
பொறியாளரின் முறையான ஆலோசனையைப் பெற்று வீட்டுத் தளத்தின் உயரத்தைப் பத்தடிக்கு மேல் சற்று உயர்த்தினால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். கோடைக் காலத்தில் மொட்டை மாடியிலிருந்து வீட்டினுள் இறங்கும் வெயிலும் தக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். தென்னை மட்டைகளை மொட்டை மாடி முழுவதும் இல்லாவிட்டாலும் படுக்கையறை, வரவேற்பறைப் பகுதிகளிலும் பரப்பிவைத்தால் வெயிலின் தாக்கம் பெருமளவு இருக்காது.
தளங்களை மேம்படுத்துவோம்
கூடுமான வரையில் வழுக்கும் தளங்களை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியான வழுக்கும் டைல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் புழங்குவதற்கு ஏற்றதாக இருக்காது. குளியலை, கழிவறை போன்ற அறைகளில் சொரசொரப்பான டைல்களையே அமைக்க வேண்டும்.
மின் இணைப்பையும் திட்டமிடலாம்
சமையலறை, படுக்கையறை, கழிவறை போன்ற அறைகளில் நமது உபயோகத்திற்குத் தகுந்தவாறு விளக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும். மின்சிக்கனம் அவசியம் என்பதால் எல்லா அறைகளுக்கும் அதிக மின் சக்தியை எடுக்கும் விளக்குகள் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் எங்கெங்கு மின் இணைப்பு தேவைப்படும் என்பதை முதலிலேயே தீர்மானித்து கட்டிடத்திற்குள்ளே குழாய்களைப் பதித்துவிடுவது நல்லது. கட்டிடம் கட்டி முடித்த பிறகு குழாய் இணைப்பிற்காகத் துளையிடுவதைத் தவிர்க்கலாம்.
கடைசியாகத் சில வார்த்தைகள்
வீட்டின் கூரையில் விழும் மழை நீரை விரயம் செய்யாத வகையில் எல்லா மழை நீரையும் நேரடியாக நீரைச் சேமிக்கலாம். இல்லையெனில் பூமிக்குள் இறக்கலாம். அதற்கான முறையான மழை நீர் சேகரிப்பு நடைமுறைகளின் படி அமைக்கலாம். மேலும் வாஸ்து, ஐஸ்வர்யம் என்ற பெயரில் அதிக அளவு செடிகோடிகளை வீட்டிற்குள் வளர்க்காதீர்கள் வீட்டிற்குள் பூச்சிகளும் மரவட்டைகளும் கொசுக்களும் தொல்லை தர ஆரம்பித்துவிடும்.

வீடு என்ற பெருங்கனவு

சொந்த வீடு என்பது எல்லோருக்குமே அமைந்துவிடாது. சொந்த வீடு என்ற பெருங்கனவை அடைய எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்பதை அதில் அனுபவ ரீதியாக உணர்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய சொந்த வீடு கதையைப் படித்தால் அது உங்களுக்குப் புரியும்.
எனக்கு இப்போது 68 வயதாகிறது. தோட்டத்துடன் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது என்னுடைய வாழ் நாள் கனவு. 5 ஆயிரம் சதுரடி மனை வாங்கி, தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டைக் கட்டி என் கனவை நனவாக்கினார் என் கணவர். ஆனால், கட்டிய வீட்டில் நிறைவாக வாழமுடியவில்லை.
என் கணவருக்கு வெளியூருக்குப் பணி மாற்றல் ஆனது. சொந்த வீட்டை விட்டுவிட்டு அங்கு ஒரு சிறிய வீட்டில் வாடகை வீட்டில் குடியேறினோம். சொந்த வீட்டில் இருக்க முடியவில்லையே என்ற கவலை. இருந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் சொந்த வீடு இருக்கிறதே என்பதில் ஆறுதல் கிடைத்தது.
காலத்தின் கொடுமையை என்ன சொல்வது? என் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்தார். இடி என் தலையில் இறங்கியது. அவரின் மாதச் சம்பளம் என்ன? வரவு, செலவு என்ன? என்று எதுவும் எனக்குத் தெரியாது.
அவர் என்னிடம் இதைப் பற்றியெல்லாம் சொன்னதும் இல்லை. நான் கேட்டதும் இல்லை. அது அந்தக் காலம். எங்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் இருந்தனர். இருவரும் அப்போது படித்துகொண்டிருந்தார்கள்.
என் கணவர் பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்தார். அப்போதெல்லாம் இந்தளவுக்கு சம்பளம் கிடையாது. வங்கியில் வீட்டுக் கடன் வேறு இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வங்கி மூலம் கிடைத்த தொகையோ மிகமிக சொற்பமாக இருந்தது.
என் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டும். தடுமாறி நின்ற எனக்கு அந்த வீடுதான் வாழ்வின் ஊன்றுகோலாக இருந்தது. வீட்டை விற்று அதன் கடனை அடைத்தேன். மீதிப் பணத்தில் சிறு தொகையை எடுத்து 3,500 சதுரடிக்கு ஒரு மனையை வாங்கி, வீட்டின் மீது இருந்த ஆசையை அப்போதைக்குத் தணித்துக் கொண்டேன்.
இதன் பின் எனக்குத் தெரிந்த சிறுசிறு தொழில்களைச் செய்தேன். காலம் ஓடியது. என் மகன் இன்ஜினீயரிங் படித்துமுடித்தான். சொந்தமாக தொழில் செய்ய நினைத்தான். நான் ஏற்கனவே வாங்கி போட்டிருந்த அந்த மனை உள்ள இடம் நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. வீடு கட்டலாம் என பூமி பூஜையும் போட்டிருந்தேன்.
ஆனால் மகன் சொந்த தொழிலில் முதலீடு போடுவதற்கு பணம் கேட்டான். வேறுவழியில்லாமல், பூமி பூஜை போட்ட நிலத்தை விற்று அவனுக்குப் பணம் கொடுத்தேன். அவன் தொழிலும் நல்லபடியாக வளர்ந்தது. மகனுக்குத் திருமணம். குழந்தை பிறப்பு எல்லாம் நடந்தது. ஆனால் என் வீட்டுக் கனவு முழுமை பெறாமல் இருந்தது.
நான் நடத்திவந்த சிறுசிறு தொழில்களையும் முடிவுக்குக் கொண்டுவந்து, பணத்தைத் திரட்டி னேன். என் பிள்ளைகளிடம் என்னுடைய வீடு ஆசையைக் கூறினேன். “யாருடைய பணமும் எனக்கு வேண்டாம். என் உழைப்பில் கிடைத்த பணத்தில் வீடு கட்ட வேண்டும்” என்றேன். அதற்கு பிள்ளைகள் ஒத்துழைத்தார்கள்.
இருக்கும் பணத்தில் மனை வாங்கினேன்.என் மகன் இன்ஜினியர் என்பதால் அவனே வீட்டுக்கான பிளான் போட்டுக் கொடுத்தான். மளமளவென்று வேலைகள் நடந்தன. அழகாக, கம்பீரமாக எழும்பியது என்னுடைய கனவு வீடு.
என்னால் நம்ப முடியவில்லை. இது என் வீடா? கடவுளுக்கு நன்றி சொன்னேன். என் மகன் பிறந்தபோது எப்படி என் மனம் சிறகடித்துப் பறந்ததோ, அதேபோன்ற பரவச அனுபவம் என் வீட்டின் கிரகப் பிரவேசத்தின் போதும் ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரையில் வீடு என்பது சொத்து மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை அடுத்த தலைமுறைக்குக் காட்டும் காலக் கண்ணாடி.
- விமலா பாலகிருஷ்ணன், வேளச்சேரி, சென்னை
வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
சொந்த வீடு, தி இந்து,
கஸ்தூரி மையம், 124,
வாலாஜா சாலை, சென்னை- 600 002.

வில்லாவில் சுகமாக ஓய்வெடுக்கலாம்

இல்லம் என்பது இன்பம் சேர்க்க வேண்டும். ஆடி ஓடி உழைத்துக் களைத்து நமக்கு உரிமையான இல்லத்துக்குத் திரும்பும்போது ஓய்வெடுக்கத் தோதுவான அறையும் அறைக்கலன்களும் இருந்தால் அதற்கு ஈடு இணையே இல்லை.
அந்த வகையில் சாய்வு நாற்காலிகளுக்கு எந்தச் சாதாரண அறையையும் அசாதாரண அழகாக்கும் வலிமையுண்டு. வரவேற்பறை, படுக்கையறை, படிக்கும் அறை என ஒவ்வொரு அறைக்கும் ஏற்றவாறு இந்தச் சாய்வு நாற்காலிகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இப்போது நீங்கள் கட்டும் வில்லா அல்லது வாங்கும் அப்பார்ட்மெண்ட் போன்ற நவீன வீடுகளுக்கு ஏற்ற நவீன சாய்வு நாற்காலிகள் சந்தையில் புதிதாக அறிமுகமாகியிருக்கின்றன.
உங்கள் வீட்டில் எந்தவொரு இடத்தையும் அழகானதாகவும் வசதியானதாகவும் மாற்றும் திறன் இந்த நவீன சாய்வு நாற்காலிகளுக்கு உண்டு. இந்தச் சாய்வு நாற்காலிகள் வீட்டை மிகச் சிறந்த முறையில் அலங்கரிக்கின்றன. அதோடு, சொகுசாக ஓய்வெடுக்கவும் உதவுகின்றன. இவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்:
வசதியாகப் படிக்க...
புத்தகப் பிரியர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்போது புதுமையான சாய்வு நாற்காலிகள் கிடைக்கின்றன. இந்த நாற்காலிகளை வரவேற்பறையிலும் வைக்கலாம்.
முட்டை நாற்காலிகள்
இந்த முட்டைவடிவ நாற்காலிகளையும் அர்னி ஜேக்கப்சென்தான் முதலில் வடிவமைத்தார். பெரிய வரவேற்பறைக்கு ஏற்றது. உங்கள் வரவேற்பறையைக் கூடுதல் நவீனமாக்குவதற்கு இவை உதவும்.
எப்படியோ விதவிதமான நாற்காலிகள் சந்தையில் புழக்கத்துக்கு வந்துவிட்டன. வசதியான வீட்டை வாங்கிக்கொண்ட நீங்கள் விலா நோக உழைத்து வரும்போது உங்களை ஆதரவுடன் எதிர்கொள்ளும் வில்லாவில் வசதியான நாற்காலிகளையும் வாங்கிப் போட்டால் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் அல்லவா?
குட்டித் தூக்கம் போட..
பரபரப்பான வேலைகளுக்குப் பிறகு வார இறுதியில் வீட்டில் குட்டித் தூக்கம் போடுவதற்கு இந்த நாற்காலி பயன்படும்.
வண்ணமயமாகும் ஓய்வு
உங்களுக்குப் பிடித்த நிறத்தில், பிடித்த வடிவில் இந்த நாற்காலியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வண்ணங்களின் ரசிகர்களுக்கு ஏற்றது.
அன்னப் பறவை நாற்காலிகள்
1958-ல் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அர்னி ஜேக்கப்சென் வடிவமைப்பாளர் என்னும் இந்த அன்னப் பறவை நாற்காலிகளை கோபென்ஹேகனில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்காக வடிவமைத்தார்.
இப்போதும் இந்த நாற்காலி நவீனத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. பெரிய வசதியான நாற்காலிகளை வாங்க விரும்பினால் இந்த அன்னப்பறவை நாற்காலிகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
கால்களும் ஓய்வெடுக்கட்டும்!
இந்தச் சாய்வு நாற்காலிகள் கால்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நிற்க நேரமில்லாமல் வேலைக்காக ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு வீட்டில் ஓய்வெடுக்க இந்த நாற்காலி உதவிசெய்யும்.

அடுக்குமாடி வீட்டை அழகாக்க ஸ்டிக்கர் போதும்!

கம்பீரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டீர்கள். உங்கள் ஃப்ளாட்டில் உயர்தர சோபாக்கள் அடுக்கப்பட்ட வரவேற்பறையின் குறுக்கே ஓர் மின்கம்பம் சாய்ந்து நின்றால் எப்படி இருக்கும்?
அகலமாகக் கிளை பரப்பி நிற்கும் ஓர் ஆலமரம் படுக்கை அறையில் முளைத்திருந்தால் எப்படி இருக்கும்? மாடிப் படிக்கட்டுகளில் குட்டிப் பூனைகள் அங்குமிங்கும் துள்ளித் திரிந்து விளையாடினால் எப்படி இருக்கும்?
இப்படி நம் வழக்கமான சலிப்புத்தட்டும் வாழ்க்கையில் புதுமைகளைப் புகுத்தி நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வழிசெய்கின்றன சுவர் ஸ்டிக்கர்கள்.
பெயிண்ட் தேவையில்லை
உங்கள் வீட்டு வரவேற்பறையை வசீகரமாக மாற்ற வேண்டும் என நினைத்தால் இனி விலை உயர்ந்த பெயிண்டுகளைப் பூச வேண்டியதில்லை. அவ்வளவு ஏன் வால்பேப்பர் (wallpaper) எனப்படும் சுவர் காகிதங்களைக்கூட வாங்க வேண்டியதில்லை.
சுவர் காகிதம் அல்லது பெயிண்டு என்பவை ஒட்டுமொத்தமாக ஒரு அறையின் சுவர் முழுவதையும் வேறு தோற்றத்துக்கு மாற்றுபவை. முழுச் சுவருக்கும் பளீர் நிறத்தில் பெயிண்ட் பூசுவது பழைய பாணி. சுவரின் ஒரு சிறிய பகுதிக்கு மட்டும் வேறுவிதமான தோற்றம் தருவது புதிய பாணி.
நவீன அழகியல் கோட்பாடு இன்று மாறிவிட்டது. அழகூட்டுவது என்றால் அங்குமிங்குமாகச் சில நகாசு வேலைப்பாடுகள் செய்வதுதான். அத்தகைய நவீன வீட்டு அலங்காரத்துக்கு உகந்தவை சுவர் ஸ்டிக்கர்கள்.
குறைந்த செலவில் நிறைய அழகு
இவற்றைப் பயன்படுத்துவது சுலபம், துரிதமாக ஒட்டிவிடலாம், உங்கள் சவுகரியத்துக்கு ஏற்ப எந்தப் பகுதியிலும் ஒட்டிக் கொள்ள முடியும். விலையும் குறைவு. வெறும் ரூ.300 முதல் விதவிதமான சுவர் ஸ்டிக்கர்கள் விற்கப்படுகின்றன. ஆனால் மாயாஜாலம் போல உங்கள் ஃப்ளாட்டின் தோற்றத்தை அவை முற்றிலுமாக மாற்றிவிடும்.
சுவாரசியமான, நவீன வடிவங்களில் சுவர் ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன. சுவர்களில் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலி போன்ற சாமான்களின் மீதும் ஒட்டி அழகு பார்க்கலாம்.
கேலி, கிண்டல் ததும்பும் சுவர் ஸ்டிக்கர்கள், 3டி டிஜிட்டல் அச்சுகள், ஈர்க்கும் சுவர் கலை புகைப்படங்கள் என நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர்களை எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம். சிறிது காலம் கழித்து அவற்றை அகற்றிவிட்டு வேறு படங்களும் ஒட்டலாம்.
எங்கும், எப்படியும்!
உயிரோட்டமற்ற பகுதி என்றால் வீட்டிலிருக்கும் சுவிட்ச் போர்டுதான். அத்தகைய சுவிட்ச் போர்டைப் பார்த்துப் பார்த்து சிரித்து ரசிக்கும்படி மாற்றும் ஸ்டிக்கர்கள் உள்ளன. சுவிட்ச் போர்ட்டுக்குள் மின்சாரம் எப்படிப் பாய்கிறது, அதிலிருந்து வெளியேறும் மின்சாரம் மற்ற கருவிகளை எப்படி இயக்குகிறது என்பது போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்களைக் கேலிச் சித்திரம் போல் காட்டும் ஸ்டிக்கர்கள் இவை.
வெறும் கறுப்பு வெள்ளை நிறங்களைக் கொண்டு மாயாஜாலம் செய்யும் சுவர் ஸ்டிக்கர்கள், நாட்டியப் பேரொளிகளை உங்கள் அறை சுவர்களில் நடனமாடச் செய்யும் ஸ்டிக்கர்கள், கேலி கிண்டல் கூடிய ஸ்டிக்கர்கள், குழந்தைகளை ஈர்க்கும் ஸ்டிக்கர்கள், மனிதர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், விளையாட்டு, இசை இப்படி கலைநயம் மிக்க ஸ்டிக்கர்கள், செல்லப் பிராணிகள், பூச்சிகள், வண்ண வண்ணப் பூக்கள், மரங்கள், பறவைகள், வடிவியல் வடிவங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் இப்படி விதவிதமாக உள்ளன.
‘என்ன பொழுதுபோகாம சுவரை வெறித்துப் பார்த்துகிட்டிருக்க!’ என யாரும் உங்களை இனிமேல் கேட்க மாட்டார்கள். சுவரைப் பார்ப்பதன் மூலமே உங்கள் பொழுதை சுவாரசியமாகக் கழிக்கலாம்.

வருங்காலத்துக்கான கூரை

முந்தைய காலத்தில் மரங்களை வெட்டி அதைக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு கூரை வீடுகள் கட்டப்பட்டன. பிறகு ஓடுகள் போன்ற பலவிதமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கூரைகள் அமைக்கப்பட்டன.
கட்டுமானத் துறையின் வளர்ச்சி கூரை வீடுகளுக்கு விடை தந்தன. ஆனாலும் பாரம்பரிய வீடுகள் இன்றும் ஓடுகளுடன் அழகாகக் காட்சியளிக்கின்றன.
ஒருபக்கம் வீட்டுக் கட்டுமானத்துக்குக் கூரைகள் அமைப்பது குறைந்தாலும் இன்னொரு பக்கம் தொழிற்கூடங்கள் அமைக்க கூரைகள் பயன்படுத்துவது தொடர்ந்தது. ஆஸ்பெஸ்டாஸ் கட்டுமானப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் இது அதிகரித்தது.
சில வீடுகளும்கூட ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது மிக எளிது ஒப்பீட்டளவில் விலையும் மிகக் குறைவு. அதனால் வீட்டின் மாடிப் பகுதி பெரும்பாலும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் கொண்டு அமைக்கப்பட்டன. ஆனால், ஆஸ்பெஸ்டாஸ் கட்டுமானப் பொருளில் தீமைகள் உண்டு. அது வெப்பத்தை உமிழக் கூடியது.
இன்று கூரைகள் அமைப்பதில் பல புதிய தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றுள் ஒன்றுதான் சிலிகான் பாலிகார்பனேட் கூரைகள்.
மாற்றுப் பொருட்களை நாம் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருப்பவை அதன் அனுகூலமான அம்சங்கள் தான். மேலும் கையாள்வதற்கு எளிதானதாக இருக்க வேண்டும். வெப்பத்தைத் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். பராமரிப்புச் செலவு குறைவாக இருக்க வேண்டும்.
விலையும் கட்டுக்குள் இருக்க வேண்டும். இம்மாதிரியான சிறப்பம்சங்களை இந்த சிலிகான் பாலி கார்பனேட் கொண்டுள்ளது. இந்தப் பொருள் கூரை அமைப் பதற்கு மட்டுமின்றி தளம் அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பாலி கார்பனேட்டின் சிறப்பம்சங்கள் இதன் எடை தாங்கும் திறன் மிக அதிகம். எளிதாகக் கையாளக் கூடிய அளவில் இதன் எடையும் மிகக் குறைவு. இதனால் கட்டுமானத்தைப் பிரிப்பதும் இடம் மாற்றுவதும் எளிது. மேலும் கட்டிடத்தின் மொத்த எடையும் இதனால் குறையும். கட்டுமானத்தின் உறுதி ஸ்டீல் கூரை கட்டுமானத்தைவிடவும் அதிகமாக இருக்கும்.
பிறகு ஸ்டீல் கூரைகளைப் பயன்படுத்தும்போது அவை துருப்பிடிக்கும், தேய்மானமும் ஆகும். ஆனால் இந்த மாற்றுப் பொருளில் அந்தக் கவலை இல்லை. இவை துருப்பிடிக்கும் தன்மை அற்றவை. கூரைக் கட்டுமானங்கள் மட்டுமின்றிக் கதவுகள், அலமாரிகள் போன்றவற்றின் கைப்பிடிகளையும் இதைக் கொண்டு தயாரிக்க முடியும். எடை குறைவாகவும் கையாள எளிதாகவும் இருக்கும்.
வெப்பம் அதிகமாகத் தாங்கும் வாய்ப்புள்ள கட்டிடப் பகுதிகளில் இந்த பாலி கார்பனேட் பொருட்களைப் பயன்படுத்தலாம். இது அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியது என்பதால் விபத்துகளைத் தவிர்க்கலாம். பாலி கார்பனேட் 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கக் கூடியது. சிலிகான் பாலி கார்பனேட், கண்ணாடி, நைலான் ஆகியவற்றைக் கலந்து பாலி கார்பனேட் தயாரிக்கிறார்கள்.
பாலியெஸ்டர், பாலி அமைட் ஆகிய வேதிப் பொருள்களும் இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கலவையை விருப்பதிற்கேற்ப உருவாக்க குறைந்த நேரமே ஆகும். அதனால் உற்பத்திச் செலவு குறைவாகத்தான் இருக்கும்.
மேலும் இந்தப் பொருள்கள் இன்றைக்குச் சென்னையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் கிடைப்பதும் மிக எளிது. கண்ணாடி, பிளாஸ்டிக், ஜிப்சம், ஃபைபர் போன்ற பொருட்களுக்கான பாலிகார்பனேட் சிறந்த மாற்றுப் பொருளாகும். இந்தப் பொருள் இப்போது சந்தையில் அதிகம் விரும்பப்படும் பொருள் எனச் சொல்லப்படுகிறது.

வீட்டை அரண்மனையாக்கும் திவான்

நாள் முழுக்க வெளியே அல்லாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பியதும் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வுதரும் வகையில் ஒரு விஷயம் இருந்தால் சுகமாக இருக்கும் அல்லவா! அப்படி அக்கடான்னு தன்னை மறந்து ஓய்வெடுக்க உகந்த வீட்டு உபயோகப் பொருள்தான் திவான்.
ஏன் படுக்கையோ, சோபாவோ போதாதா என்றால், படுக்கையில் உறங்கலாம், சோபாவில் சாய்ந்து உட்காரலாம் ஆனால் திவான் என்பது முற்றிலும் வேறுவிதமான அனுபவத்தைத் தரக்கூடியது. திவானின் வரலாறு அதை உறுதிப்படுத்தும்.
மன்னர்களின் சோபா
பதிமூன்றாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு நாட்டினர் குறிப்பாகத் துருக்கி பேரரசர்கள்தான் திவானை அதிகமாகப் பயன்படுத்தியவர்கள். அப்போதுதான் திவான் என்ற சொல்லும் உருவானது. துருக்கி மொழியில் திவான் என்றால் சாவகாசமாக உட்கார்ந்துகொள்ளப் பயன்படும் மெத்தை.
துருக்கி ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு அறையின் சுவரோடு ஒட்டியபடி நீளமான மெத்தை ஒன்றைத் தரையில் விரிப்பார்கள். அந்த மெத்தை சுவரோடு ஒட்டும் பகுதியில் நீள் உருளை வடிவிலும், சதுர வடிவிலும் உள்ள வண்ணமயமான தலையணைகளைப் பரத்தி அதன் மேல் சாய்ந்தபடி உட்காருவார்கள்.
திவானின் நகல்
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் திவானை நகலெடுத்து வடிவமைத்ததுதான் சோபா. அதே நேரம் திவானையும் அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பிரிட்டனில் திவான் என்பது ஸ்பிரிங்க் பொருத்தப்பட்ட மெத்தை. ஸ்பிரிங் வைத்துக் கட்டப்பட்ட நீண்ட மரப் பலகையின் மேல் மெத்தை விரித்து அதைத் தரையில் பரத்திப் பயன்படுத்துவார்கள்.
வீட்டை அரண்மனையாக்க
இப்படியாக அரண்மனை வாசிகள் பயன்படுத்திய பாரம்பரிய சோபாதான் திவான்.
அத்தகைய பாரம்பரியமிக்கத் திவான்களை நவீன காலத்துக்கு ஏற்ப புதுமை புகுத்தி நூதனமாக நாமே வடிவமைத்துப் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டுக்கு உகந்த திவானை செய்யலாம். இதற்குத் தேவை ஒரு நீளமான மெத்தை, அதற்கு ஒத்த மரப்பலகை, திவான் குஷன் என்றழைக்கப்படும் நீள் உருளை வடிவில் இரண்டு தலையணைகள், மூன்று முதல் ஐந்து சதுரமான தலையணைகள்.
மென்மையான துணி
உங்களுக்குப் பிடித்தமான துணியை முதலில் முடிவுசெய்து கொள்ளுங்கள். மென்மையான பருத்தியாலான விரிப்பு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் அவற்றால் எத்தகைய உடல் உபாதையும் ஏற்படாது. அடுத்து அவற்றைப் பராமரிப்பது சுலபம்.
மிக எளிதாக உங்கள் வாஷிங் மிஷினிலேயே துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். முதல் முறை துவைக்கும்போது குளிர்ந்த நீர் பயன்படுத்துவது நல்லது. அதிகப்படியான வெயிலில் உலர்த்தாமல் நிழலில் காயவைத்தால் நிறம் மங்காமல் நெடுநாள் நீடிக்கும்.
அழகிய வடிவங்கள்
வடிவமைப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் படுக்கை அறை என்றால் பூ போட்ட திவான் விரிப்பு மிருதுவான தோற்றம் தரும். அதே வரவேற்பறையில் திவான் விரிப்பதானால் பட்டையான கோடுகள், பெரிய பெரிய கட்டங்கள், டையகனல் கோடுகள், வட்டங்கள் போன்ற வடிவியல் வடிவங்களை முயன்று பார்க்கலாம்.
வடிவமைப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் படுக்கை அறை என்றால் பூ போட்ட திவான் விரிப்பு மிருதுவான தோற்றம் தரும். அதே வரவேற்பறையில் திவான் விரிப்பதானால் பட்டையான கோடுகள், பெரிய பெரிய கட்டங்கள், டையகனல் கோடுகள், வட்டங்கள் போன்ற வடிவியல் வடிவங்களை முயன்று பார்க்கலாம்.
வர்ணஜாலம்
அடுத்து திவான் துணியின் வண்ணம் மற்றும் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்தல். உங்கள் வீட்டு அறைக்கு ஏற்ற நிறக் கலவையில் திவான் துணியைத் தேர்வுசெய்ய வேண்டும். வெளிர் நிறச் சுவர் என்றால் கரும் நீலம், கரும் பச்சை, கருஞ்சிவப்பு உள்ளிட்ட கலவையில் உள்ள துணியைத் தேர்ந்தெடுங்கள்.
சுவர் நிறம் மங்கலாக இருக்குமானால் ஒளிரும் நிறங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதே போலக் குஷனின் நிறம் விரிப்போடு ஒத்த நிறமாக இருப்பது ஒருவிதமான அழகு. அல்லது அதே காண்ட்ராஸ்ட் நிறங்கள் இருக்கும் குஷன்களைப் பயன்படுத்துவது வேறுவிதமாக அழகைச் சேர்க்கும்.
இனி தினம் தினம் உங்கள் வீட்டில் காலடி வைத்தவுடன் ஒரு நவீன அரண்மனைக்குள் நுழைவதுபோன்ற உணர்வு ஏற்படும்.

அடுக்குமாடியில் வீடு வாங்குகிறீர்களா?

நகரமயமாக்கல் மனிதர்களை மிக எளிதாக நகரத்தை நோக்கி நகர்த்திவிடுகிறது. கிராமப் பகுதியில் கிடைக்கும் தூய காற்று, நல்ல தண்ணீர், பசுமையான சூழல் போன்ற வசதிகளைத் துறந்து நகரத்துக்கு வருகிறார்கள் அவர்கள். நகரத்திலும் கிராமத்தைப் போன்ற சூழல் அமையப் பெற வேண்டும் என்னும் ஏக்கத்துடன் நகரத்தில் அவர்கள் குடியேறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு ஈடேறுவது குதிரைக் கொம்பே. அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில் குடியேறுபவர்களது பெரும் பிரச்சினை சரியான வீடு அமைவதே. பிரயாசைப்பட்டுப் பணம் தேற்றி ஓர் அடுக்குமாடி வீடு வாங்கிக் குடியேறுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.
ஆனால் கிராமத்தில் கிடைக்காத வேறு வசதிகள் அவர்களைச் சமாதானப் படுத்தும் வகையில் அமைகின்றன. அந்த வசதிகள் முறையாக அமைந்துள்ளனவா என்பதை மட்டும் வீடு வாங்குவோர் ஒரு முறைக்கு இரு முறை சோதித்துக்கொள்ள வேண்டும்.
அருகில் பள்ளி
ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கு முன்னர் அது தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதில் நாம் ஓரளவு கவனத்துடன் இருப்போம். அதைப் போலவே அதன் அமைவிடம் குறித்தும் சிறிது அக்கறை செலுத்த வேண்டும். குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறாத பகுதியாக இருக்க வேண்டும். பொதுவான அமைதி நிலவ வேண்டும்.
இவற்றை அக்கறையோடு விசாரித்து வீடு வாங்காவிட்டால் பின்னர் அனுதினமும் அல்லல் ஏற்பட்டுவிடும். குழந்தைகளுக்குத் தேவையான நல்ல பள்ளி அருகில் உள்ளதா என்பதைக் கேட்டறிய வேண்டும். அருகில் பள்ளி உள்ளபோது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதும் அழைத்து வருவதும் பெரிய சிக்கலின்றி முடிந்துவிடும்.
வாகனத்தில் செல்லும் அளவுக்கு தூரமான இடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சிறு குழந்தைகள் கொண்டோர் தேர்வு செய்வது ஆரோக்கியமானதல்ல. தினமும் குழந்தைகள் பள்ளி சென்று வரும் வரை அநாவசியக் கவலைகளுடன் இருக்கும்படி ஆகிவிடும்.
தரமான வணிக வளாகங்கள்
அடுத்ததாக அன்றாட பயன்பாட்டுக்கு அவசியமான, தரமான உணவுப் பொருள்களும், உணவுகளும் கிடைக்கும்படியான வணிக வளாகங்கள் அருகில் உள்ளபடியான அடுக்குமாடிக் குடியிருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி அமையாத அடுக்குமாடி குடியிருப்பைத் தேர்வு செய்து விட்டால் தினந்தோறும் சிறு சிறு சிக்கல் ஏற்படும்.
அவசரத்துக்குத் தேவையான பொருளை வாங்க அரை கிலோ மீட்டர் செல்ல வேண்டியதிருந்தால் வீட்டின் அமைதி குலைந்துவிடும். எனவே இதுவிஷயத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைத்து விட்டால் சிரமம்தான் இல்லத்தைச் சூழும்.
ஓசையில்லாத பகுதி
அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளை ஒட்டிய இடங்களில் தொழிற்சாலையோ ஒலி ஏற்படுத்தும் இடங்களோ இல்லாமல் இருப்பது முக்கியம். இதில் அசிரத்தையாக இருந்துவிட்டால் வீட்டில் குடியேறிய பின்னர் தினமும் இந்தச் சத்தம் மூளையைக் குடைய ஆரம்பித்துவிடும்.
அதே போல் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அதை நிறுத்தி வைக்கப் போதுமான, வசதியான நிறுத்துமிடம் அவசியம். ஓரளவு விலை அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்பில் இதைப் போன்ற வசதிகளைப் பார்த்துப் பார்த்து செய்துவிடுகிறார்கள். ஆனால் புறநகர்ப் பகுதிகளில் ஊருக்குள்ளே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இதைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
இவற்றையெல்லாம் சோதித்தறிந்து வீடு வாங்கி குடியேறினாலும் சில விஷயங்களில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பவர்கள் அருகிலுள்ள வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்ற கவனத்துடன் இருப்பதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
எல்லா இடங்களையும் இப்படிச் சொல்லிவிட முடிவதில்லை. ஒருவருக்கொருவர் அனுசரனையுடன் நடந்துகொள்ளும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் மாநகரத்தில் உள்ளன. அப்படி எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களும் ஒற்றுமை பேணும் பட்சத்தில் அடுக்குமாடி என்பது உண்மையிலேயே சமரசம் உலவும் இடமாகவே மாறும்.
நகரத்து வாழ்க்கையில் ஒவ்வொருவர் வாழ்வும் மற்றொருவரின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தனித் தனியே பிரிந்து இருப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டால் நமது பல சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம். நமது அடுக்குமாடி வாழ்க்கையை ஓரளவு அமைதியாக அமைத்துக்கொள்ள நாம் சிறிது சமரசங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.