Saturday, June 20, 2015

வீட்டை அரண்மனையாக்கும் திவான்

நாள் முழுக்க வெளியே அல்லாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பியதும் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வுதரும் வகையில் ஒரு விஷயம் இருந்தால் சுகமாக இருக்கும் அல்லவா! அப்படி அக்கடான்னு தன்னை மறந்து ஓய்வெடுக்க உகந்த வீட்டு உபயோகப் பொருள்தான் திவான்.
ஏன் படுக்கையோ, சோபாவோ போதாதா என்றால், படுக்கையில் உறங்கலாம், சோபாவில் சாய்ந்து உட்காரலாம் ஆனால் திவான் என்பது முற்றிலும் வேறுவிதமான அனுபவத்தைத் தரக்கூடியது. திவானின் வரலாறு அதை உறுதிப்படுத்தும்.
மன்னர்களின் சோபா
பதிமூன்றாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு நாட்டினர் குறிப்பாகத் துருக்கி பேரரசர்கள்தான் திவானை அதிகமாகப் பயன்படுத்தியவர்கள். அப்போதுதான் திவான் என்ற சொல்லும் உருவானது. துருக்கி மொழியில் திவான் என்றால் சாவகாசமாக உட்கார்ந்துகொள்ளப் பயன்படும் மெத்தை.
துருக்கி ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு அறையின் சுவரோடு ஒட்டியபடி நீளமான மெத்தை ஒன்றைத் தரையில் விரிப்பார்கள். அந்த மெத்தை சுவரோடு ஒட்டும் பகுதியில் நீள் உருளை வடிவிலும், சதுர வடிவிலும் உள்ள வண்ணமயமான தலையணைகளைப் பரத்தி அதன் மேல் சாய்ந்தபடி உட்காருவார்கள்.
திவானின் நகல்
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் திவானை நகலெடுத்து வடிவமைத்ததுதான் சோபா. அதே நேரம் திவானையும் அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பிரிட்டனில் திவான் என்பது ஸ்பிரிங்க் பொருத்தப்பட்ட மெத்தை. ஸ்பிரிங் வைத்துக் கட்டப்பட்ட நீண்ட மரப் பலகையின் மேல் மெத்தை விரித்து அதைத் தரையில் பரத்திப் பயன்படுத்துவார்கள்.
வீட்டை அரண்மனையாக்க
இப்படியாக அரண்மனை வாசிகள் பயன்படுத்திய பாரம்பரிய சோபாதான் திவான்.
அத்தகைய பாரம்பரியமிக்கத் திவான்களை நவீன காலத்துக்கு ஏற்ப புதுமை புகுத்தி நூதனமாக நாமே வடிவமைத்துப் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டுக்கு உகந்த திவானை செய்யலாம். இதற்குத் தேவை ஒரு நீளமான மெத்தை, அதற்கு ஒத்த மரப்பலகை, திவான் குஷன் என்றழைக்கப்படும் நீள் உருளை வடிவில் இரண்டு தலையணைகள், மூன்று முதல் ஐந்து சதுரமான தலையணைகள்.
மென்மையான துணி
உங்களுக்குப் பிடித்தமான துணியை முதலில் முடிவுசெய்து கொள்ளுங்கள். மென்மையான பருத்தியாலான விரிப்பு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் அவற்றால் எத்தகைய உடல் உபாதையும் ஏற்படாது. அடுத்து அவற்றைப் பராமரிப்பது சுலபம்.
மிக எளிதாக உங்கள் வாஷிங் மிஷினிலேயே துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். முதல் முறை துவைக்கும்போது குளிர்ந்த நீர் பயன்படுத்துவது நல்லது. அதிகப்படியான வெயிலில் உலர்த்தாமல் நிழலில் காயவைத்தால் நிறம் மங்காமல் நெடுநாள் நீடிக்கும்.
அழகிய வடிவங்கள்
வடிவமைப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் படுக்கை அறை என்றால் பூ போட்ட திவான் விரிப்பு மிருதுவான தோற்றம் தரும். அதே வரவேற்பறையில் திவான் விரிப்பதானால் பட்டையான கோடுகள், பெரிய பெரிய கட்டங்கள், டையகனல் கோடுகள், வட்டங்கள் போன்ற வடிவியல் வடிவங்களை முயன்று பார்க்கலாம்.
வடிவமைப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் படுக்கை அறை என்றால் பூ போட்ட திவான் விரிப்பு மிருதுவான தோற்றம் தரும். அதே வரவேற்பறையில் திவான் விரிப்பதானால் பட்டையான கோடுகள், பெரிய பெரிய கட்டங்கள், டையகனல் கோடுகள், வட்டங்கள் போன்ற வடிவியல் வடிவங்களை முயன்று பார்க்கலாம்.
வர்ணஜாலம்
அடுத்து திவான் துணியின் வண்ணம் மற்றும் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்தல். உங்கள் வீட்டு அறைக்கு ஏற்ற நிறக் கலவையில் திவான் துணியைத் தேர்வுசெய்ய வேண்டும். வெளிர் நிறச் சுவர் என்றால் கரும் நீலம், கரும் பச்சை, கருஞ்சிவப்பு உள்ளிட்ட கலவையில் உள்ள துணியைத் தேர்ந்தெடுங்கள்.
சுவர் நிறம் மங்கலாக இருக்குமானால் ஒளிரும் நிறங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதே போலக் குஷனின் நிறம் விரிப்போடு ஒத்த நிறமாக இருப்பது ஒருவிதமான அழகு. அல்லது அதே காண்ட்ராஸ்ட் நிறங்கள் இருக்கும் குஷன்களைப் பயன்படுத்துவது வேறுவிதமாக அழகைச் சேர்க்கும்.
இனி தினம் தினம் உங்கள் வீட்டில் காலடி வைத்தவுடன் ஒரு நவீன அரண்மனைக்குள் நுழைவதுபோன்ற உணர்வு ஏற்படும்.

காலத்துக்கேற்ற கட்டுமானப் பொருட்கள்

காலத்தின் தேவைக்கு ஏற்ப கட்டுமானத் துறையிலும் பல நவீனமான பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தெர்மாப்ளீஸ், டெக்கோஃபார்ம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
தெர்மாப்ளீஸ்
இது எளிதில் தீப்பற்றாத ஒரு தடுப்புப் பொருள். பெரிய அறைகளை இரண்டாகப் பிரிப்பதற்கும் அறைகளுக்கு உள்ளேயே சில பகுதிகளைத் தடுப்பதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இது வெப்பம், ஒளி, ஒலி ஊடுருவலைத் தடுக்கும் திறன் கொண்டது.
கூரை, சுவர், தரை என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம். வீடுகளில் இதன் பயன்பாட்டைக் கொண்டு, தனியாக அமைக்கப்படும் அறைகளைப் படிக்கும் அறைகளாகவும், சாப்பிடும் இடமாகவும் பயன்படுத்தலாம். இசைப் பதிவுக் கூடங்களுக்கும் இத்தகைய தெர்மாப்ளீஸ் அதிகம் பயன்படும்.
டெக்கோஃபார்ம்
விதவிதமான கட்டுமானங்களுக்குக் கட்டுநர்களுக்கு உதவும் வகையில் டெக்கோஃபார்ம் லைனர்கள் தற்போது கிடைக்கின்றன. பொதுவாகப் பலகைகளின் மீது கான்கிரீட்டைக் கொண்டு வேண்டிய வடிவத்துக்கு உருவாக்கி, காய்ந்தவுடன் பலகைகளை எடுத்துவிட்டு, அதன்பின் சிமென்ட் கலவையை மேல்பூசி சமம் செய்து, பலவிதமான அலங்கார வேலைப்பாடுகளைச் செய்வார்கள்.
ஆனால் இந்த வேலைகளை கான்கிரீட் அமைக்கும்போதே செய்வதற்கு துணைபோவதுதான் டெக்கோ ஃபார்ம். பிரணவ் கட்டுமான நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த டெக்கோ ஃபார்ம் லைனர்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
விதவிதமான கட்டுமானங்களுக்குக் கட்டுநர்களுக்கு உதவும் வகையில் டெக்கோஃபார்ம் லைனர்கள் தற்போது கிடைக்கின்றன. பொதுவாகப் பலகைகளின் மீது கான்கிரீட்டைக் கொண்டு வேண்டிய வடிவத்துக்கு உருவாக்கி, காய்ந்தவுடன் பலகைகளை எடுத்துவிட்டு, அதன்பின் சிமென்ட் கலவையை மேல்பூசி சமம் செய்து, பலவிதமான அலங்கார வேலைப்பாடுகளைச் செய்வார்கள்.
ஆனால் இந்த வேலைகளை கான்கிரீட் அமைக்கும்போதே செய்வதற்கு துணைபோவதுதான் டெக்கோ ஃபார்ம். பிரணவ் கட்டுமான நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த டெக்கோ ஃபார்ம் லைனர்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
நமக்குத் தேவைப்படும் வடிவத்திலும், பரப்பிலும் தேவையான எண்ணிக்கையிலும் இந்த டெக்கோஃபார்ம் லைனர்களைப் பெறலாம் என்பது இதன் சிறப்பு. சிறிய கட்டுமானங்களைவிட பெரிய அளவில் கட்டப்படும் மாடி ரயில், மேம்பாலங்கள், வணிக வளாகங்களில் இதன் தேவை பல மடங்கு உள்ளது.

அறை அழகின் ரகசியங்கள்

ஓர் அறையை எப்படி வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். அதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. உங்கள் ரசனைதான் அறை அலங்காரத்துக்கான அளவுகோல். அந்த ரசனையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்ற அவசியமல்லை.
அதுவும் காலத்துக்கு ஏற்றமாதிரி மாறும் தன்மையுடையதுதான். ஆனால், உங்கள் அறையின் தோற்றத்தை முழுமையாக்குவதற்குச் சில அம்சங்கள் தேவைப்படுகின்றன. அந்த அம்சங்களில் சரியாகக் கவனம் செலுத்தினால், அறையின் அழகை முழுமையாக்கிவிடலாம்.
கலை ரசனை
கலை ரசனையை வெளிப்படுத்தும் பொருட்கள் இல்லாமல் உங்களால் ஓர் அறையை அழகாக்கிவிட முடியாது. உங்கள் அறையில் வெளிப்படும் கலைத்தன்மையில்தான் உங்களுடைய காட்சி அழகியியல் வெளிப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த, உங்கள் ரசனைக்கு ஒத்துப்போகும் கலைப்பொருட்களை வைத்து அறையை அலங்கரியுங்கள். இந்தக் கலைப் பொருட்கள் உங்கள் அறைக்குப் புத்துணர்ச்சியையும், தனித்தன்மையையும் கொடுக்கும்.
சரியான வெளிச்சம்
ஒரு நல்ல அறைக்கும், சிறந்த அறைக்குமான வித்தியாசத்தை விதவிதமான விளக்குகளின் வெளிச்சம்தான் ஏற்படுத்துகிறது. ஒரு சின்ன அறைக்குக்கூட மூன்று விதமான விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. இந்த அம்சத்தைப் பெரும்பாலும் நாம் மறந்துவிடுவோம். ஆனால், இந்த விளக்குகளின் வெளிச்சமும் அறை அலங்காரத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது.
திரைச்சீலைகள்
திரைச்சீலைகளை வீட்டின் தனிமையை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் பயன்படுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது திரைச்சீலைகளும் அறையின் அழகைத் தீர்மானிக்கின்றன. உங்கள் அறையின் மற்ற அம்சங்களோடு ஒத்துப்போகுமாறு திரைச்சீலைகளை வாங்க வேண்டும். கோடை காலம், குளிர் காலம் என இரண்டிற்கும் ஏற்ற மாதிரி இப்போது தனித்தனியாகத் திரைச்சீலைகள் கிடைக்கின்றன. உங்கள் அறைக்கு மென்மையான தோற்றத்தை அளிக்கக்கூடிய வலிமை திரைச்சீலைகளுக்கு இருக்கின்றன. சுருள், வளையங்கள் போன்ற பல வித்தியாசமான அமைப்பில் வரும் திரைச்சீலைகளை வாங்கலாம்.
புதுமையான அமைப்பு
அறையில் வெளிச்சம், மென்மை இருந்தால் மட்டும் போதாது. சில புதுமையான டெக்ஸ்சர்களைத் தரும் குஷன்களும், தரைவிரிப்புகளும், சுவர் அலங்காரங்களும், செடிகளும் தேவை. அப்போதுதான் அந்த அறைக்கு ஆழமான தோற்றம் கிடைக்கும்.
தனி ரசனை
அறை வீட்டின் அங்கமாக இருக்கவேண்டுமானால், உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் பொருட்கள் அங்கு நிச்சயமாக இருக்க வேண்டும். அது உங்களுடைய இனிமையான பயணத்தின் நினைவுகளை வெளிப்படுத்தும் பொருட்களாக இருக்கலாம். உங்கள் ரசனைகளை வெளிப்படுத்தும் பொருட்களாக இருக்கலாம். ஆனால், உங்கள் அறையில் உங்களுடைய சுவடுகள் ஏதாவது ஒரு விதத்தில் இருக்கவேண்டியது அவசியம்.
இந்த ஐந்து அம்சங்களையும் சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் அறையின் தோற்றம் முழுமையடைந்துவிடும்.

கட்டிடத்தின் நோய் நீக்கும் மருந்து

எல்லாக் கட்டிடத்திற்கும் ஓர் ஆயுள் உண்டு. வயது கூடக் கூட நமக்கு உடல் கோளாறுகள் வருவதுபோல் கட்டிடத்துக்கும் நோய் ஏற்படுவது இயல்புதான். நாம் மருந்து மாத்திரை எடுத்து நமது நோயைக் குணப்படுத்துவதுபோல் கட்டிடத்துக்கும் சில மருந்துகள் கொடுத்து அதை நோயிலிருந்து மீட்கலாம்.
கட்டிடத்தில் பழுதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் செயல் திறன் இழந்து அது சரிந்து விழும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் நம்மைக் கவனிப்பதுபோல் கட்டிடத்தையும் நன்றாகக் கவனித்துவர வேண்டும். பலவிதமான குறைபாடுகளால் கட்டிடம் பாதிக்கப்படும். மழை, வெயில், காற்று போன்ற இயற்கைக் காரணங்களாலும் பாதிக்கப்படும்.
வீட்டின் உள்ளே தண்ணீர்க் குழாய் கழிவுகளாலும் கட்டிடம் பாதிக்கப்படும். இம்மாதிரி பாதிப்பு ஏற்படும் அதைச் சரிசெய்யப் பலவிதமான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் எஃப்ஆர்பி. இது கம்பிகள், துணிகள், தகடுகள் எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. எஃப்ஆர்பி என்பது Fiber Reinforced Polymers.
இவற்றைக் கொண்டு செங்கல் கட்டிடங்களை வலுவூட்டலாம். இதில் பழுதடைந்த கட்டிடத்தில் எஃப்ஆர்பி கம்பிகளைச் செலுத்தி எபாக்ஸி (Epoxy) கொண்டு சமமாகப் பூச வேண்டும். மேலும் எஃப்ஆர்பி துணிகளைச் செங்கள் கட்டிடத்தின் மீது ஒட்டுவதாலும் வலு கிடைக்கும்.
துணியை வெளிப்புறம் உட்புறமும் சமமாக ஒட்ட வேண்டும். மேலும் கான்கிரீட் தூண்களை எஃப்ஆர்பி தகடுகளைக் கொண்டு நாற்புறமும் ஒட்டி வலுவூட்டலாம்.

அடுக்குமாடியில் வீடு வாங்குகிறீர்களா?

நகரமயமாக்கல் மனிதர்களை மிக எளிதாக நகரத்தை நோக்கி நகர்த்திவிடுகிறது. கிராமப் பகுதியில் கிடைக்கும் தூய காற்று, நல்ல தண்ணீர், பசுமையான சூழல் போன்ற வசதிகளைத் துறந்து நகரத்துக்கு வருகிறார்கள் அவர்கள். நகரத்திலும் கிராமத்தைப் போன்ற சூழல் அமையப் பெற வேண்டும் என்னும் ஏக்கத்துடன் நகரத்தில் அவர்கள் குடியேறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு ஈடேறுவது குதிரைக் கொம்பே. அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில் குடியேறுபவர்களது பெரும் பிரச்சினை சரியான வீடு அமைவதே. பிரயாசைப்பட்டுப் பணம் தேற்றி ஓர் அடுக்குமாடி வீடு வாங்கிக் குடியேறுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.
ஆனால் கிராமத்தில் கிடைக்காத வேறு வசதிகள் அவர்களைச் சமாதானப் படுத்தும் வகையில் அமைகின்றன. அந்த வசதிகள் முறையாக அமைந்துள்ளனவா என்பதை மட்டும் வீடு வாங்குவோர் ஒரு முறைக்கு இரு முறை சோதித்துக்கொள்ள வேண்டும்.
அருகில் பள்ளி
ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கு முன்னர் அது தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதில் நாம் ஓரளவு கவனத்துடன் இருப்போம். அதைப் போலவே அதன் அமைவிடம் குறித்தும் சிறிது அக்கறை செலுத்த வேண்டும். குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறாத பகுதியாக இருக்க வேண்டும். பொதுவான அமைதி நிலவ வேண்டும்.
இவற்றை அக்கறையோடு விசாரித்து வீடு வாங்காவிட்டால் பின்னர் அனுதினமும் அல்லல் ஏற்பட்டுவிடும். குழந்தைகளுக்குத் தேவையான நல்ல பள்ளி அருகில் உள்ளதா என்பதைக் கேட்டறிய வேண்டும். அருகில் பள்ளி உள்ளபோது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதும் அழைத்து வருவதும் பெரிய சிக்கலின்றி முடிந்துவிடும்.
வாகனத்தில் செல்லும் அளவுக்கு தூரமான இடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சிறு குழந்தைகள் கொண்டோர் தேர்வு செய்வது ஆரோக்கியமானதல்ல. தினமும் குழந்தைகள் பள்ளி சென்று வரும் வரை அநாவசியக் கவலைகளுடன் இருக்கும்படி ஆகிவிடும்.
தரமான வணிக வளாகங்கள்
அடுத்ததாக அன்றாட பயன்பாட்டுக்கு அவசியமான, தரமான உணவுப் பொருள்களும், உணவுகளும் கிடைக்கும்படியான வணிக வளாகங்கள் அருகில் உள்ளபடியான அடுக்குமாடிக் குடியிருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி அமையாத அடுக்குமாடி குடியிருப்பைத் தேர்வு செய்து விட்டால் தினந்தோறும் சிறு சிறு சிக்கல் ஏற்படும்.
அவசரத்துக்குத் தேவையான பொருளை வாங்க அரை கிலோ மீட்டர் செல்ல வேண்டியதிருந்தால் வீட்டின் அமைதி குலைந்துவிடும். எனவே இதுவிஷயத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைத்து விட்டால் சிரமம்தான் இல்லத்தைச் சூழும்.
ஓசையில்லாத பகுதி
அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளை ஒட்டிய இடங்களில் தொழிற்சாலையோ ஒலி ஏற்படுத்தும் இடங்களோ இல்லாமல் இருப்பது முக்கியம். இதில் அசிரத்தையாக இருந்துவிட்டால் வீட்டில் குடியேறிய பின்னர் தினமும் இந்தச் சத்தம் மூளையைக் குடைய ஆரம்பித்துவிடும்.
அதே போல் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அதை நிறுத்தி வைக்கப் போதுமான, வசதியான நிறுத்துமிடம் அவசியம். ஓரளவு விலை அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்பில் இதைப் போன்ற வசதிகளைப் பார்த்துப் பார்த்து செய்துவிடுகிறார்கள். ஆனால் புறநகர்ப் பகுதிகளில் ஊருக்குள்ளே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இதைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
இவற்றையெல்லாம் சோதித்தறிந்து வீடு வாங்கி குடியேறினாலும் சில விஷயங்களில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பவர்கள் அருகிலுள்ள வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்ற கவனத்துடன் இருப்பதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
எல்லா இடங்களையும் இப்படிச் சொல்லிவிட முடிவதில்லை. ஒருவருக்கொருவர் அனுசரனையுடன் நடந்துகொள்ளும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் மாநகரத்தில் உள்ளன. அப்படி எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களும் ஒற்றுமை பேணும் பட்சத்தில் அடுக்குமாடி என்பது உண்மையிலேயே சமரசம் உலவும் இடமாகவே மாறும்.
நகரத்து வாழ்க்கையில் ஒவ்வொருவர் வாழ்வும் மற்றொருவரின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தனித் தனியே பிரிந்து இருப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டால் நமது பல சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம். நமது அடுக்குமாடி வாழ்க்கையை ஓரளவு அமைதியாக அமைத்துக்கொள்ள நாம் சிறிது சமரசங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.

கோடையை வரவேற்க உங்கள் வீடு தயாரா?

கோடையைச் சமாளிக்க வீட்டுக்குக் குளிர்சாதன வசதியைச் செய்வதுதான் ஒரே வழி என்றில்லை. அப்படியே குளிர்சாதன வசதியைச் செய்வதாக இருந்தாலும் வீட்டின் படுக்கை அறையில் மட்டுமேதான் செய்யமுடியும். இதுதான் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்களுக்குச் சாத்தியமான ஒன்றாக இருக்கமுடியும். அதுவும் அடுத்த மாதம் மின் கட்டணம் வந்தால் வியர்த்துவிடும்!
பகலில் வீசும் அனல் காற்றைச் சமாளித்து வீட்டில் புழங்க வேண்டுமானால் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற வேண்டும். வீட்டைப் புதிதாகக் கட்டிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் வீட்டைக் கோடையைத் தாங்கும் வகையில் குளிர்ச்சியாக வடிவமைப்பதற்குச் சில வேலைகளைச் செய்தால் போதும்.
வெட்டி வேரு வாசம்
தென்னம் ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிடலாம். இவற்றால் வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும்.
தனி வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம். இதன் மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும்வரை நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைக்கலாம். மாலை வேளையில் மாடியின் தரையில் நன்றாகத் தண்ணீர்த் தெளித்துவிட்டு அமர்ந்துகொண்டால் அவ்வளவு ரம்யமாக இருக்கும்.
கூரை உயரக் குளிர்ச்சி
பொதுவாகவே கோயில்கள், தேவாலயங்களின் உள்ளே குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கூரை உயரமாக இருப்பதுதான். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் கூரையின் உயரத்தை 12 அடி இருக்கும் அளவில் அமைத்தால் வீட்டின் குளிர்ச்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும். எல்லாம் சரி, ஏற்கெனவே கட்டிய வீட்டுக்கு என்ன செய்வது என்று கேட்கலாம்.
மரத் தடுப்புகள்
இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் மொசைக் டைல்ஸ் அல்லது சலவைக் கற்களைப் பதித்துவிடுகிறார்கள். கோடைக் காலத்திற்கு ஏற்றவையாக இவை இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பெரும்பாலான மக்களின் விருப்பமாக அவை இருக்கின்றன. இதுபோன்ற வீடுகளில் சுவரையும் தரையையும் இணைக்கும் வகையில் மரத்தினாலான ஒரு தடுப்பைக் கொடுத்தால் வீட்டின் உள்ளே வெளியிலிருந்து கடத்தப்படும் வெப்பம் தடுக்கப்படும். பார்ப்பதற்கும் வீட்டிற்குள் ஏதோ உள் அலங்கார அமைப்பை பிரத்யேகமாகச் செய்தது போல் இருக்கும்.
வீட்டில் உள்ளே புழங்கும் சூடான காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன்களைக் கோடைக் காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஃபேன்களை முகப்பு அறையிலும் படுக்கை அறையிலும் சமையல் அறையிலும் பொருத்த வேண்டும். அதேநேரத்தில் வீட்டின் ஜன்னல்களின் வழியாகக் குளிர்ச்சியான காற்று வீட்டின் உள்ளே பரவும்.
வீட்டின் வெளிப்புறத்துக்குக் கோடைக் காலத்தில் அடர்த்தியான வண்ணத்தைவிட மெலிதான வண்ணங்களே சிறந்தவை. மெலிதான வண்ணங்கள் சூட்டையும் வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும்.
குளிர்ச்சியை வரவேற்கும் ஜன்னல்கள்
புதிதாக வீடு கட்டும் முயற்சியில் இருப்பவர்கள் 2 அடிக்கு மேலாக 4 அடிக்குள்ளாக மணல் போட்டு அஸ்திவாரம் அமைத்தால் வீட்டின் குளிர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும். வீட்டின் முகப்பு அறை, சமையல் அறை, படுக்கை அறை எல்லாவற்றிலும் குறைந்தது ஒரு ஜன்னலாக இருக்கும் வகையில் வீட்டைக் கட்ட வேண்டும். ஜன்னல்கள் அதிகம் இருக்கும் வீட்டில் குளிர்ச்சிக்குக் குறைவிருக்காது.

வீட்டை அழகாக்கும் ரகசியம்


பார்க்கும் அத்தனைபேரும் அதிசயிக்கும் விதத்தில் நம் வீடு மிளிர வேண்டும் எனும் ஆவல் உள்ளூர இருக்கும். விலை உயர்ந்த வீட்டு அலங்காரப் பொருள்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துவிட்டால் அந்தக் கனவு நனவாகி விடுமா என்ன.
எந்தப் பொருளை வாங்குகிறோம் என்பதை விடவும் அதை எப்படி அசத்தலாகப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் அழகின் ரகசியம் உள்ளது. அத்தகைய ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள் உலகப் புகழ் பெற்ற உட்புற வடிவமைப்பாளர்கள்.
“உங்கள் வீட்டின் மிகச் சிறிய அறை பெரிய அறை போலத் தோற்றமளிக்க, அந்த அறையின் ஒரு பகுதியை கருமையாக மாற்றுங்கள். நான் சொல்வதை நம்புங்கள். என் வீட்டில் ஒரு குட்டி அறை உள்ளது. அதில் மிகச் சிறிய சன்னல் ஒன்று இருந்தது. அந்தச் சன்னலுக்குச் சாக்லேட் பழுப்பு நிறத்தில் பெயிண்ட் அடித்தேன். உடனே அந்த அறை கவர்ச்சியாகக் காட்சியளிக்கத் தொடங்கியது” - சூசன் பிரேயர்
“அறையின் உட்கூரை தாழ்வாக இருக்கும் பட்சத்தில் அதே அறையை உயரமாகக் காட்ட ஒரு எளிய வழி உள்ளது. தரையைப் பிரதிபலிக்கும் விதத்தில் பளபளப்பான பெயிண்டை உட்கூரையில் பூச வேண்டும். பிறகு பாருங்கள், உங்கள் வீட்டுக் கூரை படு உயரத்தில் இருப்பது போலத் தோன்றும்.” பாரி டிக்சன்
“வரவேற்பறை சுவரில் வரிசையாகப் புகைப்படங்களோ அல்லது ஓவியங்களோ பொருத்துவதாக இருந்தால் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் இடையில் 2 முதல் 2 1/2 அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். அதே போலச் சுவரை ஒட்டி இருக்கும் சோஃபா மற்றும் நாற்காலியைக் காட்டிலும் குறைந்தது 9 அங்குலம் உயரத்தில் படங்களைச் சுவற்றில் மாட்ட வேண்டும்.” மில்லி டி கேப்ரோல்.
“என் வீட்டு சோஃபா 6 ½ அடி முதல் 7 அடி நீளம்தான் இருக்கும். அதை விடவும் சிறியதாக இருந்தால் சோபா பொம்மைப் போலக் காட்சியளிக்கும். அதைவிடவும் பெரிதாக இருக்குமாயின் விமான நிலையத்தில் உள்ள லவுஞ்ச் போலத் தோன்றும்.” ஆலெக்ஸ்
“ஒப்பனை செய்து முடிக்கும்போது உதட்டுச் சாயம் பூசுவதுக்கு ஒப்பானவை தொங்கும் திரைகள். அவற்றால் ஒரு அறையை முழுமைபெறச் செய்ய முடியும்.” - பீட்டர் டங்கம்
“விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளுக்குச் செலவழிப்பதைவிடவும் லேம்ப்ஷேட் (lampshade) எனப்படும் விளக்குத் திரைகளுக்குச் செலவு செய்யுங்கள். பழைய சேலைத் துணி முதல் வண்ணக் காகிதங்கள் வரை எதைக் கொண்டும் விளக்குத் திரைகள் செய்யலாம்” ஜெஃப்பரி பில்ஹியூபர்
“நீள் சதுர வடிவில் இருக்கும் அறைக்கு வட்டமான உணவு மேஜை பொருந்தாது. அதற்குத் தலைகீழாகவும் பயன்படுத்தாதீர்கள். உங்கள் அறையின் வடிவம் எதுவோ அதுதான் மேஜையின் வடிவமாகவும் இருக்க வேண்டும்” கெல்லர் டோனோவன்.
“உணவு மேஜைக்குரிய நாற்காலிகள் சாய்வாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாய்ந்து சவுகரியமாக உட்காரும் வசதி கொண்ட நாற்காலிகளில் சரியான உடல் தோரணையில் உட்காராமல் சரிந்து உட்கார்ந்து உண்போம். அது தவறு.” ராபர் கோர்டியர்
வீட்டின் கூரை முதல் உணவு மேஜைவரை தங்களின் அறிவையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கும் இந்த வடிவமைப்பாளர்களின் சிறுவிவரக்குறிப்புகளை பின்பற்றிப் பாருங்கள் உங்கள் வீட்டுக்கும் நிச்சயம் புதுப் பொலிவு கிடைக்கும்.
இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். வீட்டைப் பராமரிப்பது, தோட்டம் அமைப்பது ஆகியவை தொடர்பான உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு: சொந்த வீடு, தி இந்து
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.

வெளியே வெயில், உள்ளே குளுமை

நமது நாடு மித வெப்ப மண்டல நாடு. வருடத்தின் பெரும்பாலான நாட்களில் வெயில்தான் சுட்டெரிக்கும். மழைக்காலம் தவிர்த்த பிற காலங்களில் சூரிய ஒளி தங்கு தடையின்றிக் கிடைக்கும். பருவ மழைக்காலத்தில் மழை பெய்யத் தவறிவிட்டாலோ கேட்கவே வேண்டாம்.
கோடையின் வறட்சி பருவ மழைக் காலத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆகவே நமது நாட்டின் வெப்பநிலையை ஆலோசித்துப் பழங்காலத்தில் வீடுகளைப் பெரும்பாலும் இயற்கையான பொருள்களைக் கொண்டே கட்டினார்கள் நமது முன்னோர்கள்.
வீடுகளை உருவாக்க வீட்டருகிலேயே கிடைக்கும் மரம், கல், களிமண், சுண்ணாம்பு போன்றவற்றைக் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தினார்கள். அவை இயல்பான பசுமை வீடுகளாகவும் விளங்கின. பாலிதீன் இல்லாத நாள்களில் வீட்டின் கழிவுகளையும், குப்பைகளையும் கிடங்கொன்றில் சேமித்துவைத்து வயலுக்கு உரமாகப் பயன்படுத்திய காலம் அது.
மிகச் சாதாரணமாக நமது முன்னோர்கள் கைக்கொண்ட அந்தப் பசுமையான இல்லத்தை மீண்டும் கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படியான சூழல் இப்போது நிலவுகிறது.
வெப்பமயமான நமது சுற்றுச் சூழலுக்கு ஈடுகொடுக்கும்படியான வீடுகளைக் கட்டி அவற்றில்தான் தங்கள் வாழ்வை நடத்திவந்தார்கள் முன்னோர்கள். வீடுகளின் பல பகுதிகளை மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. கதவுகள், சன்னல்கள், வீட்டின் கூரைகள், வீட்டைப் பிரிக்க மரத்தடுப்புகள் எனப் பெரும்பாலான பயன்பாட்டுக்கு மரங்கள் உதவின. மரப் பலகைகள் வெப்பத்தைக் கடத்தாது, அதைத் தடுத்து நிறுத்திவிடும்.
எனவே அதிகமான வெயிலின் காரணமாக வெளியே வெப்பம் அதிகமாக இருந்தாலும்கூட வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் போதும் உள்பகுதி குளுகுளுவென்றிருக்கும். அதே போல் குளிர்காலத்தில் வீட்டின் வெளியே கடுமையான குளிர் நிலவும்போதும் வீட்டுக்குள் பெரிய அளவில் குளிர் தெரியாது. ஓரளவு கதகதப்பாகவே வீட்டின் தட்பவெப்பம் இருக்கும்.
இப்போது நமது இல்லத்தின் கட்டமைப்பு முற்றிலும் மாறிவிட்டது. நவீனக் கட்டுமானப் பொருட்களும் பெருகிவிட்டன. அதிகமான பணத்தைச் செலவு செய்து, காங்கிரீட்டையும், இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்தி நமக்கான வீடுகளை கட்டியெழுப்புகிறோம். மரங்களின் பயன்பாட்டை மிகவும் குறைத்துவிட்டோம். கட்டில், பீரோ போன்ற அனைத்து அறைக்கலன்களும் முழுக்க முழுக்க மரத்தாலேயே உருவாக்கப்பட்ட காலம் காலாவதியாகிவிட்டது.
அந்தக் கால வீடுகளின் கதவுகளையும் உத்திரங்களையும் கண்முன் கொண்டுவந்து பாருங்கள். எவ்வளவு ரம்மியமாக உள்ளது. நவீன வீடுகளின் உருவாக்கத்தில் சில வசதிகளைப் பெற்றுள்ளோம் என்றாலும் வெப்பத்திலிருந்து விடுதலை தர உதவும் மரத்தை மறந்துவிட்டோம்.
வெயிலில் தாங்கள் நின்று நிழலை மனிதர்களுக்குத் தரும் பயன் கருதாத மரங்களை இழைத்துப் போட்டாலும் விசுவாசம் காட்டும் பசுமையான அவற்றை விட்டு வெகு தூரம் விலகிவிட்டோம். ஆனால் மரங்களாலான அந்தக் கால வீடுகளைக் கடந்து செல்லும்போது ஏதோவோர் ஏக்கம் வந்துசெல்கிறது. அந்தப் பழங்கால உத்தியைப் பயன்படுத்தி சிலர் இப்போதும் வீடுகளை உருவாக்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
மரத்தைக் கட்டுமானப் பொருளாகக் கொண்டு வீடுகளை அமைப்பதைப் போல மரத்திலேயேகூட வீடு கட்டிக் குடியேறலாம். துணிச்சலும் இயற்கை மீது நேசமும், வித்தியாசமான விருப்பமும் இருந்தால் மரத்தின் மீது கட்டப்படும் வீட்டில் குடியிருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இப்போது கிடைக்கின்றன. இப்படியான மர வீடுகள் அனைத்துமே தனித்துவமானவை.
ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வகையில் வித்தியாசப்படுபவை. ஒன்று போல் ஒன்று இல்லாத மாதிரியான பிரத்தியேக வடிவமைப்பைக் கொண்டவை. ஆனால் மரத்தில் கட்டப்படும் இந்த வீடுகள் ஒவ்வொன்றின் அழகும் பசுமையான சூழலும் மட்டும் மாறாமல் அப்படியே ஒன்றுபோல் இருக்கும்.
முற்றிலும் மரப்பலகைகளைப் பயப்படுத்தி மரங்கள் சூழ்ந்த தோட்டங்களுக்கு மத்தியிலும் வீடுகளை அமைக்கலாம். மரங்களால் அமைக்கப்படும் இத்தகைய வீடுகளில் பாதங்கள் தரையைத் தொட வேண்டிய தேவையிருக்காது. என்ன பார்க்கிறீர்கள், முழுக்க முழுக்க மரங்களால் வீடு உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால் நீங்கள் கால் வைக்கும் இடம் எல்லாமே மரத்தால் ஆனவைதான். கால் மட்டுமல்ல உங்கள் கைபடும், கண் படும் அனைத்துப் பகுதிகளும் அதாவது சுவர்கள், கூரைகள் என அனைத்துமே ஏதாவது ஒரு மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகையே.
வீட்டின் கூரைமீது சுடு மண்ணாலான டைல்ஸ் பதிக்கலாம். தேவைக்காக அறைகளைப் பிரிக்க பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைக்கலாம். வீட்டின் மேற்கூரையில் புற்களை வேயலாம். இப்படி அனைத்துக் கட்டுமானப் பொருள்களும் இயற்கைப் பொருளாக இருக்கும்போது வீட்டின் குளுமைக்கு கேட்கவா வேண்டும்.
இயற்கைச் சீற்றத்தால் இந்த மர வீடுகள் ஒரு வேளை மரத்தில் இருந்து விழுந்துவிடாதா? ஒருவேளை அப்படி வீடு இடிந்துவிழுந்தாலும் அவை மண்ணோடு மண்ணாக மக்கிவிடும். மொத்தத்தில் குளுகுளு சூழலை விரும்புவர்களின் மனத்தில் சம்மணமிட்டு அமர்ந்துவிடும் இந்த மர வீடுகள்.

கிராமங்களில் மனைகள் வாங்கலாமா?

பெரு நகரங்களில் வீட்டு மனைகளின் விலை கோடியைத் தாண்டிவிட்டது. சிறுநகரங்களிலோ லட்சங்களில் விற்பனையாகிறது. எனவே விலை குறைவான மனைகள் கிடைக்கின்றனவா என்ற மக்களின் எதிர்ப்பார்ப்பும் எகிறி கொண்டேதான் இருக்கிறது.
அந்த எதிர்ப்பார்ப்பைக் கிராமப்பஞ்சாயத்து எல்லைக்குள் விற்பனை செய்யப்படும் வீட்டு மனைகளே பூர்த்தி செய்கின்றன. நடுத்தர மக்கள் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட எல்லையில் வீட்டு மனைகளை வாங்கி விடுகிறார்கள். இன்னும் சிலரோ முதலீட்டு கோணத்தில் கிராமப்புறங்களில் மனைகளை வாங்குவதும் உண்டு. எல்லாம் சரிதான், இப்படி வாங்கப்படும் மனைகள் அரசின் அனுமதி பெற்றதா என்பதைக் கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும் தெரியுமா?
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள்தான் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரங்களைப் பெற்றிருக்கின்றன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இப்படி ஒரு அதிகாரம் கிடையவே கிடையாது.
குறைந்த விலையில் மனைகளை வாங்கும் பலரும் இந்த விஷயத்தை சரிவர கவனிப்பதில்லை. பஞ்சாயத்து அப்ரூவல் என்று சொல்லி மனைகளை விற்பவர்களும் உண்டு. பின்னர் அங்கீகாரம் வாங்கிக் கொள்ளலாம் என்றும்கூடச் சொல்லுவார்கள்.
சென்னையில் முழுமையாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில பகுதிகள் சி.எம்.டி.ஏ. அங்கீகார வரம்பில் வருகிறது. ஏனைய பகுதிகள் அனைத்தும் டிடிசிபி அங்கீகார வரம்பில்தான் வருகிறது. இந்த இரு அமைப்புகளின் அங்கீகாரங்களைப் பெறாமல் விற்கப்படும் மனைகளை வாங்கினால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.
வாங்கிய மனை, மனையாகவே இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்த மனையில் வீடு கட்ட அனுமதிவேண்டி விண்ணப்பிக்கும் போதுதான் பிரச்சினைகள் தெரிய வரும். முறையான அங்கீகாரம் இல்லாத மனையில் கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்காது. அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட மனையில் வீடு கட்ட வங்கிகளும் வீட்டுக் கடன் அளிப்பதில்லை. பின்னாளில் பிரச்சினை வரலாம் என்ற கோணத்தில் வங்கிகள் கடன் வழங்காமல் பின்வாங்கிவிடும்.
பஞ்சாயத்து மனையில் அரசின் திட்டங்கள், கட்டுமானங்கள் ஏதேனும் வருகின்றனவா, சாலை விரிவாக்கம் செய்யப்படக்கூடிய பகுதியா என்பதெல்லாம் சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. அமைப்புகளுக்குத்தான் தெரியும். எனவேதான் இந்த அமைப்புகளின் அங்கீகாரத்துக்கு இவ்வளவு மதிப்பும் கொடுக்கப்படுகிறது.
பஞ்சாயத்து அப்ரூவல் என்று சொல்லி விற்கப்படும் மனை களை வாங்காமல் இருப்பது நல்லது. கிராமப்புறங்கள், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மனை வாங்கும்போது அங்கீகாரச் சான்றுகளை கவனமாக சரி பார்ப்பதே ஏமாறாமல் இருக்க ஒரே வழி.

திரைகள் செய்யும் ஜாலங்கள்

திரைச்சீலைகள் வீட்டுக்குள் மிதமான வெளிச்சத்தைக் கொண்டு வருபவை. மேலும் வீட்டுக்குள் தூசி புகாத வண்ணம் காப்பவை. ஆனால் இதை எல்லாவற்றையும் மீறி ஜன்னல் திரைகள் வீட்டுக்கு அழகு சேர்ப்பவையாகவும் இருக்கின்றன. ஜன்னல் இல்லாத வீடுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுபோல திரைச்சீலைகள் இல்லாத ஜன்னல்கள் வீட்டுக்கு அழகல்ல.
வீட்டை அழகுபடுத்த பலவிதமான நவீன முறைகள் வந்தாலும் ஜன்னல் திரைகள் பல காலம் தொட்டே அந்த இடத்தைப் பிடித்து வருபவை. இன்று நவீன காலத்துக்குத் தகுந்தாற்போல் பலவிதத்தில் திரைச்சீலைகள் கிடைக்கின்றன.
திரைச்சீலைகளை அமைத்துத் தர இப்போது நிறுவனங்கள் உள்ளன. வீட்டிற்குத் தகுந்தாற்போல் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் வந்து வீட்டைப் பார்த்து திரைச்சீலைகளை அமைத்துத் தருவார்கள். அவர்கள் எந்த வண்ணத்தில் வீட்டுத் திரைச்சீலை அமைக்கலாம் என்பதற்கு ஆலோசனைகளும் தருவார்கள்.
வீட்டுக்கு, ஜன்னல்களுக்குத் திரைகள் இடத் தீர்மானித்து விட்டால் உடனடியாகக் கிடைக்கின்ற திரைகளை வாங்கி மாட்டிவிடக் கூடாது. முதலில் என்ன நிறத்தில் திரைச் சீலைகள் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
அது எப்படித் தீர்மானிப்பது என்றால், உங்கள் அறைக்கு என்ன வண்ணத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறீர்களோ அந்த வண்ணத்திற்கு ஏற்றார்போல் திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக நீல வண்ணம் பூசியிருந்தீர்கள் என்றால் அதற்குத் தோதாக அடர் நீல வண்ணத்தில் திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம்.
சிலருக்கு நேரெதிர் வண்ணம் பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் அடர் மர வண்ணம் தேர்ந்தெடுக்கலாம். சுவரின் வண்ணம் மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் சோபா போன்ற அறைக்கலன்கள் அடிப்படையிலும் திரைச்சீலையின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அடர் நிறங்களைவிட மெல்லிய வெளிர் நிறங்களே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
திரைச்சீலைகள் தேர்வில் இப்போது பல விதமான வகைகள் வந்துவிட்டன. தேர்ந்தெடுக்கும் பொருள்களில் இருந்து இதைப் பலவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். துணியில், பிளாஸ்டிக் பொருளில், மர நார்களில், மூங்கில் கம்புகளில் எனப் பலவிதமான திரைச் சீலைகளைச் சந்தையில் பார்க்க முடிகிறது.
திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு கருப்பொருளை வைத்துக்கொள்வது நல்லது. படுக்கையறைக்கு ஒரு விதமான திரைச் சீலையைத் தேர்ந்தெடுத்தால் வரவேற்பறைக்கு வேறு விதமான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம். மரப் பொருளான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டுக்கு ஒரு கம்பீரத் தோற்றம் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் திரைச்சீலைகளில் இப்போது நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவை வீட்டுக்கு ஒரு கலையம்சத்தைத் தரும். இல்லையெனில் பூக்கள் படம் கொண்ட திரைச்சீலைகளை மாட்டும்போது ஒரு இதமான மனநிலையை அளிக்கக் கூடும். சிலருக்கு இதுவும் விருப்பமில்லை எனும்போது வெறுமனே ஒரே வண்ணத்தில் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதே சமயத்தில் ஒரே விதமான திரைச்சீலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. திரைச்சீலைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். ஒரு மாதம் பிளாஸ்டிக்கால் ஆன திரைச்சீலை என்றால் அடுத்த மாதம் துணியால் வேறு வண்ண திரைச்சீலையைப் பயன்படுத்தலாம்.
திரைச்சீலைகள் வீட்டைத் தூசிகளில் இருந்து காப்பவை. ஆதலால் வெளியிலிருந்து வரும் தூசிகள் திரைச்சீலையில் படிந்து இருக்கும். நாள் கணக்காக அதைச் சுத்தம் செய்யாமல் விடக் கூடாது. அதனால் வாரம் ஒரு முறையேனும் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்.