Wednesday, July 8, 2020

வணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்

வணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்

பொருளாதார தாராளமய போட்டி உலகில், ஒரு வணிகவியல் பட்டதாரிக்கு இருக்கும் ஒவ்வொரு கூடுதல் திறமையும் மதிப்பு வாய்ந்தது. உங்களின் தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ள, குறுகியகால படிப்புகளை மேற்கொள்வது மிகவும் உகந்தது.

பல தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள், பலவிதமான குறுகியகால மற்றும் பகுதிநேர படிப்புகளை, வழங்கி வருகின்றன. அத்தகையப் படிப்புகள், ஒரு வணிகவியல் பட்டதாரியின் கிரீடத்தில், மேலும் மேலும் அணிகலன்களை சேர்க்கும்.

இத்தகையப் படிப்புகளை, வணிகவியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போதே சேர்ந்து படிக்கலாம். ஏனெனில், நமக்கு ஏதுவான நேரம் மற்றும் இன்னபிற வசதிகளால், வணிகவியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போதே நம்மால் இத்தகைய படிப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது.

கணினி அடிப்படையிலான அக்கவுன்டிங், பைனான்ஸ், சில்லறை வர்த்தகம், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் மார்க்கெடிங், ஏற்றுமதி - இறக்குமதி, தொழில்முனைதல் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் போன்ற சான்றிதழ் படிப்புகள், இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் உள்ள கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

CA, ICWA, CS போன்ற படிப்புகளை மேற்கொள்ள நினைப்போருக்கு, மேற்கண்ட சான்றிதழ் படிப்புகள் ஏதுவானவை. இத்தகைய படிப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்ச தகுதியாக பள்ளி மேல்படிப்பை நிறைவு செய்திருந்தால் போதுமானது. இக்கட்டுரையில், மாணவர்கள் மேற்கொள்ளத்தக்க சில குறுகியகால மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ்

வணிகவியல் மாணவர்களுக்கு, அக்கவுன்டிங் என்பது ஒரு பிடித்தமான துறை. திறன் மேம்பாட்டிற்கான தேசிய கவுன்சில், இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில், வங்கியியல் மற்றும் பைனான்ஸ் துறையில் பல சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மேலும், ISBM கல்வி நிறுவனம், அட்வான்ஸ் பைனான்சியல் அக்கவுன்டிங், மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங்கில் அட்வான்ஸ் சான்றிதழ் படிப்புகள், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட், பைனான்சியல் பிளானிங், நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு, மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பலவிதமான படிப்புகளை, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, சென்னை, புனே, பெங்களூர், ஜெய்ப்பூர், நாக்பூர், சண்டிகர், அகமதாபாத், கொச்சின், லூதியானா, குவாலியர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களிலுள்ள தனது சென்டர்கள் மூலமாக வழங்குகிறது.

புனேவிலுள்ள பைனான்ஸ் மற்றும் காஸ்ட் அக்கவுன்டிங் கல்வி நிறுவனம், கம்ப்யூட்டர் அக்கவுன்டிங் பிரிவில் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. இது, அட்வான்ஸ்டு சாப்ட்வேர் தொடர்புடைய பாடங்களை உள்ளடக்கியது.

மும்பையின், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இன்ஸ்டிட்யூட் லிமிடெட், JBIMS கல்வி நிறுவனத்துடன் இணைந்து, கேபிடல் மார்க்கெட் தொடர்பான 10 வாரகால நீண்ட பகுதிநேர படிப்பை வழங்குகிறது. நார்சி மோன்ஜே மேலாண்மை கல்வி நிறுவனம், வங்கியியல் மற்றும் பைனான்ஸ் மேலாண்மையில், ஒரு ஆண்டு தொலைநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

கொல்கத்தாவின் NIELIT கல்வி நிறுவனம், 96 மணிநேரங்கள் காலஅளவைக் கொண்ட, பைனான்சியல் அக்கவுன்டிங் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பில், FACT, Tally, accord போன்ற அம்சங்கள் அடக்கம். வங்கியியல் மற்றும் பைனான்ஸ் பிரிவில், சர்வதேச வணிகத்திற்கான கல்வி நிறுவனம், சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.

சென்னையிலுள்ள செக்யூரிட்டீஸ் அன்ட் மார்க்கெட்ஸ் தேசிய கல்வி நிறுவனம், செக்யூரிட்டி சட்டம் தொடர்பான 6 மாத கால சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், இப்படிப்பை தேர்வு செய்யலாம்.

சர்வதேச வணிகம்

வெளிநாட்டு வணிக மேலாண்மை அல்லது ஏற்றுமதி மேலாண்மை என்பது, உள்நாடு மற்றும் வெளிநாடுகள் என்ற அளவில், பொருட்களின் ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் சேவைகளோடு தொடர்புடையது. எனவே, இந்தப் படிப்பு ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.

அகமதாபாத்தின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சர்வதேச கல்வி நிறுவனம், ஏற்றுமதி - இறக்குமதி மேலாண்மையில் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. இப்படிப்பில், இந்திய பொருளாதார கொள்கைகள் முதற்கொண்டு, சர்வதேச வணிகம் உள்ளிட்ட அம்சங்கள் வரை அடக்கம். மும்பையின், மேலாண்மை படிப்புகளுக்கான KC கல்லூரியும், ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

மார்க்கெட்டிங்

மார்க்கெட்டிங் என்பது ஒரு திறமை சார்ந்த பணி. இத்துறையில், ஒருவர் மேற்கொள்வதற்கென்றே பலவிதமான ஸ்பெஷலைசேஷன்கள் உள்ளன. பெங்களூரின் NIRM கல்வி நிறுவனம், சில்லறை வர்த்தக மேலாண்மை (Retail Management) துறையில், ஓராண்டு டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. 12ம் வகுப்பை முடித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

மார்க்கெட்டிங் துறையைப் பொறுத்தமட்டில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ஒரு வளர்ந்துவரும் துறையாக உள்ளது. தனது பல்வேறான பயிற்சி மையங்கள் மூலமாக, NIIT கல்வி நிறுவனம் டிஜிட்டல் மார்க்கெடிங் தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்பின் மூலமாக, மாணவர்கள், மொபைல் மார்க்கெட்டிங் மற்றும் சர்க் இன்ஜின் மார்க்கெட்டிங் போன்ற ஆன்லைன் மார்க்கெட்டிங் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.

தொழில் முனைதல் (Entrepreneurship)

தொழில்முனைவு படிப்புகள் என்பவை, ஒரு மாணவர் தனது புத்தாக்க வணிக எண்ணங்களை, நடைமுறையில் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடிய வகையிலான பயிற்சிகளை வழங்குகின்றன. எந்தப் பிரிவில் படித்த மாணவர்களாக இருந்தாலும், இப்படிப்பை மேற்கொள்ள முடியும்.

Welingkar கல்வி நிறுவனம், Entrepreneurship மேலாண்மை துறையில், 6 மாதகால டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. National Entrepreneurship Management, பல்வேறு நகரங்களில், மாணவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதுடன், பல்வேறு கல்லூரிகளில், வணிக திட்டமிடல் புரோகிராம்களையும் நடத்துகிறது.

ஈவென்ட் மேனேஜ்மென்ட்

மாநாடுகள், மீட்டிங், திருமணங்கள், கண்காட்சிகள் மற்றும் செமினார்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது ஈவென்ட் மேனேஜ்மென்ட்.

NIEM கல்வி நிறுவனம், 11 மாதகால பகுதிநேர டிப்ளமோ படிப்பை இத்துறையில் வழங்குகிறது. அதேபோன்று NMIMS கல்வி நிறுவனமும், இத்துறையில், பல்வேறு காலஅளவுகளைக் கொண்ட படிப்பை வழங்குகிறது. அகமதாபாத்தின் NAEMD கல்வி நிறுவனம், ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன் துறையில் ஓராண்டு டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

மற்றவை

மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு, பல்வேறான பணி வாய்ப்புகளை, சுற்றுலா மற்றும் போக்குவரத்து தொழில்துறை வழங்குகிறது. சென்னையிலுள்ள, லயோலா இன்ஸ்டிட்யூட் ஆப் வொகேஷனல் எஜுகேஷன், ஓராண்டு காலஅளவு கொண்ட பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பை வழங்குகிறது. காண்டலாவின் கோஹினூர் கல்லூரி, இத்துறையில், திறன் அடிப்படையிலான படிப்பை வழங்குகிறது.

ரியல் எஸ்டேட் துறை பெரியளவில் வளர்ந்துவரும் நிலையில், ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட் படித்த நபர்களின் தேவை அதிகரித்துள்ளது. தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் கவுன்சில், அத்துறையில் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.

ஆதாரம் : தினமணி கல்விமலர்

No comments:

Post a Comment