Wednesday, July 8, 2020

மனம் ஒரு நிலையில் இல்லாமல் வேறு எங்கோ எல்லாம்

படிக்கும் போது எனது மனம் ஒரு நிலையில் இல்லாமல் வேறு எங்கோ எல்லாம் சிந்தனை செல்கின்றது. இதனால் நேரம் வீணாகிறதே தவிர என்னால் ஒரு பக்கம் கூட படித்து முடிக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? (பதின்ம வயது)

➡️ வேறெங்லெல்லாமோ சிந்தனை செல்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் வயது பதின்ம வயது (teen age) என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். சிறுவன்/சிறுமி என்ற நிலையைக் கடக்கும்போது ஒரு குழப்பம் வரும். சரி எது, தப்பு எது, என்று உணர முடியாது. 

பாலுணர்வு தூண்டப்படும் வயது; அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாது. யாரிடமாவது கேட்டால் தப்பாக நினைப்பார்கள் என்ற பயம். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் அதிகம் தோன்றும் வயது இதுதான்.

உடல் வளர்ச்சியும், அவயவங்களில் மாற்றமும், எதிர்பாலினத்தின் மேல் ஈர்ப்பும் (infatuation) இயற்கையானவை. அதை இயற்கை என்று ஏற்றுக்கொண்டு அந்த உணர்வுகளை சில வருடங்கள் ஒத்தி வையுங்கள். அதைப் பற்றிப் பேசக்கூடாது, நினைக்கக்கூடாது என்று இல்லை. அது நம் முக்கியமான நோக்கத்தை (goal) பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு இருமுறை குளிர்ந்த நீரில் குளியுங்கள். எவை எவை கவனத்தை சிதறடிக்கின்றன என்று பார்த்து அவற்றை விலக்குங்கள்/தவிருங்கள். 

படிப்பது உங்கள் பெற்றோர் சொல்வதற்காக என்ற எண்ணத்தை ஒழித்து, படிப்பு உங்கள் எதிர்காலத்திற்காக முன்னேற்றத்திற்காக, சுகமான சௌகரியமான வாழ்க்கைக்காக என்ற எண்ணத்தை நினைவில் வையுங்கள்.

தெய்வ சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள். பூஜை அறையில் சில நிமிடங்கள் அமைதியாக தியானம்/ ஜந்து வேலை தொழுவுங்கள் செய்யுங்கள். மனதை ஒருமுகப் படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். 

ஒரு பாடம் படித்து முடிப்பதற்கு ஒரு கால அளவை நிணயம் செய்து கொண்டு அதற்குள் படித்து முடிக்க முயலுங்கள். வீட்டில் படிப்பதற்கு ஒரு டைம் டேபிள் போட்டு அதன் படி படியுங்கள்/வீட்டுப்பாடம் முடியுங்கள்.

படிக்க உட்காரும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

🔹 செல்பேசி. "அந்த ஃபோன வச்சா தான் உருப்படுவ" என்று நம் வீட்டில் சும்மா சொல்லவில்லை. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அதை சுவிட்ச் ஆப்/ சைலண்ட மோடில் போட்டு விட்டு தூரமாக உங்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு இடத்தில் வைக்கவும்.

🔹 தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில், தண்ணீர் எல்லாம் எடுத்து வைத்து கொள்ளவும்‌. இல்லையென்றால் தண்ணி குடிக்க போனேனா, ஃபோனுல லைட்டு எறிந்ததா, என்ன என்று பார்த்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் இரண்டு மணிநேரம் காலி என்று வருத்தப்பட வேண்டியிருக்கும்

🔹 மற்றபடி அமைதியான, வசதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டோ நடந்து கொண்டோ படிக்கலாம்.

கடைசியாக,

தூக்கம் தூக்கம் என்று ஒன்று ஆனந்தமாக வரும் படிக்கும் போது. அப்படி இருந்தால் அதோடு போராடுவதை விட ஒரு கப் காபி குடித்துவிட்டு இருபது நிமிடம் தூங்கினால் மீண்டும் எழும் போது புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்

ஏனென்றால் வழக்கமாக Adenosine என்ற ஒன்று மூளைக்குள் எவ்வளவு அதிகம் ஆகிறதோ அவ்வளவு தூக்கம் வரும். காபி குடித்துவிட்டு தூங்கினால் அந்த 20 நிமிட இடைவெளியில் இந்த Adenosineஇன் இடத்தை காபி பிடித்து விடும்‌. மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

சுருக்கமாக சொன்னால்
நாம் செய்ய வேண்டியது:

• ஃபோனை கண்ணுக்கு தெரியாத தூரத்தில் வைப்பது

• பேப்பர் பேனா என்னும் ஆயுதங்களை கொண்டு மனதை பிடித்து வைப்பது

• அடம்பிடித்தால் அலாரத்தை ஆயுதமாய் வைத்து விட்டு பிடிப்பது

• காபி என்னும் ஆயுதத்தை வைத்து தூக்கத்தை விரட்டுவது

பிறகென்ன ஆயுதங்களுடன் புறப்படுங்கள். 

வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment