Wednesday, July 8, 2020

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

வக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்

இந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். (ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன.

சென்னையில் அரசு சட்ட கல்லூரி தவிர BA BL - Honours என்கிற கோர்ஸும் உள்ளது. இது பாரிஸ் கார்னர் சட்ட கல்லூரி வளாகத்தில் இல்லை. சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ளது. இந்த படிப்பிற்கு மிக நல்ல மதிப்பு உள்ளது. இங்கு படித்தால் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது

தேர்வு முறை

அரசு சட்ட கல்லூரிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நுழைவு தேர்வு முறையில் மாணவர்கள் தேர்வானார்கள். இப்போது முழுக்க முழுக்க + 2 மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது . 

தமிழக சட்ட கல்லூரிகளை பொறுத்தவரை - அரசு கல்லூரிகள் எனில் + 2 வில் 80 முதல் 90 % வரை மொத்த மதிப்பெண் எடுத்தால் சீட் கிடைக்கும்.

மேலே சொன்ன சென்னை School of Excellence , தரமணி கல்லூரியில் 85 முதல் 90 % மதிப்பெண் என்றால் சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

அரசு கல்லூரி மற்றும் School of Excellence இரண்டிலுமே + 2 வில் எந்த பாட திட்டத்தில் படித்திருந்தாலும் - சேரலாம்.. காமர்ஸ் க்ரூப் தான் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; கணிதம்- இயற்பியல்- கணினி அறிவியல்- உயிரியல் போன்ற பிரிவில் படித்த மாணவர்கள் கூட சட்டம் படிக்கலாம் (நானே அப்படி + 2வில் கணிதம் மற்றும் உயிரியல் படித்த மாணவன் தான்)

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 10000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

School of Excellence , தரமணியில் ஆண்டுக்கு 60,000 முதல் 80,000 வரை செலவாகும்

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . BL - LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். (இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால், இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

வேலை வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

நாங்கள் படித்த காலத்திலேயே " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். இது ஓரளவுக்கு உண்மை தான். முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.

வக்கீலாக ப்ராக்டிஸ் செய்வது எனில் அதில்-

சிவில் Side  (கொடுக்கல் வாங்கல்- சொத்து சம்பந்தமான பிரச்சனைகள்)
கிரிமினல்  Side  (அனைத்து வித குற்றங்கள்- திருட்டு, கொலை, etc )
கம்பனி சட்டம் ( கம்பனிகள் மீது போடப்படும் வழக்குகள்)
இன்கம் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் போன்ற பிரிவு
குடும்ப நீதிமன்றம் (விவாகரத்து போன்றவை)

என எந்த பக்கம் நாம் ப்ராக்டிஸ் செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை உடனே செய்ய வேண்டும் என்றில்லை; படிக்க துவங்கிய பின் நமக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ - அதில் நுழையலாம்.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB Partners, Kochar and Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal Associates, King and Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது முழு நேர ஊழியராக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு சதவீத  (Percentage) அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer,  Legal Manager, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (IAS, IPS, etc ), பிற அரசு வேலை என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.

No comments:

Post a Comment