Wednesday, July 8, 2020

FAQ

படித்து முடித்தவுடனே வேலைக்கு செல்ல படிக்கும் போதே என்ன செய்ய வேண்டும்?

நல்ல கேள்வி. பாராட்டுகள்.

இதோ என் பதில் :

வன்திறனும் மென்திறனும் :

இன்றைய சூழலில், எந்த ஒரு நல்ல வேலைக்குப் போனாலும், நிறுவனத்தேர்வாளர்கள் வரும் இளைஞர்களிடம் தேவையான வன்திறன்களும் மென்திறன்களும் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து, அதில் திருப்தியடைந்தால்தான் வேலைக்குத் தேர்வு செய்கிறார்கள்.

வன்திறன்கள் என்றால் என்ன?

உங்களுடைய கல்வித்தகுதி, அதில் நீங்கள் பெற்றுள்ள சிறப்பு சாதனைகள், மற்றும் வேலை முன் அனுபவம் ஏதாவது இருந்தால் அதையும் இணைத்து உங்கள் வன்திறன்களாகக் கணக்கிடுகிறார்கள்.

எனவே படிக்கும் காலங்களில் உங்கள் படிப்பில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவதில் முழுக்கவனம் செலுத்துங்கள். திரைப்படங்கள், கைபேசி கலந்துரையாடல்கள், இணையதள கலந்துரையாடல்கள், கிரிக்கெட் மற்றும் கேளிக்கைகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் முன்னுரிமை அளித்துவிடாதீர்கள். பாடமே பிரதானம். காலத்தை வீணடித்துவிட்டுப் பின்னால் வருந்துவது அறிவுடைமை ஆகாது.

மென்திறன்கள் (soft skills) என்றால் என்ன? 

ஒருவரின் Personality- எனப்படும் ஆளுமையில் (குணாதிசயங்களின் தொகுப்பில்) என்னென்ன நேர்மறை அம்சங்கள் (Positive Aspects), உள்ளனவோ அவை அனைத்தும் மென்திறன்கள் என்று ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. ஒவ்வொரு பணிக்கும், ஒரு சில மென்திறன்கள் இன்றியமையாதனவாகவும், மற்றும் சில மென்திறன்கள் பொதுத் தேவைகளாகவும் கருதப் படுகின்றன. இன்றியமையாத மென்திறன்கள் உங்களிடம் இல்லையெனில், நீங்கள் நிராகரிக்கப் படுவது நிச்சயம். அதேசமயம் அத்தகைய இன்றியமையாத மென்திறன்கள் உங்களிடம் இருந்தாலும்கூட உங்கள் வெற்றிக்கு உத்திரவாதம் கிடையாது. ஏன் தெரியுமா ? இன்றியமையாத மென்திறன்களோடுகூட, யார் அதிகமான பொதுவான மென்திறன்கள் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் வெற்றி வாய்ப்பை உங்களிடமிருந்து தட்டிச் சென்று விடுவார்கள். 

அப்படியாயின் நீங்கள் படிக்கும் காலத்தில் முன்னேற்பாடாகச் செய்யவேண்டியது என்ன ?

கீழ்க்கண்ட மென்திறன்களில் எவ்வளவு அதிகம் முடியுமோ அவ்வளவு மென்திறன்களில் தேர்ச்சிபெற்று , உங்களை நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள். 

இதற்கு உங்கள் கல்லூரி வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளரின் உதவியை நாடுங்கள். அவர் நேரடியாக உதவ முடியாவிட்டால், என் போன்ற எத்தனையோ மென்திறன் பயிற்சியாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அவர்களை உங்கள் கல்வி நிலையங்களுக்கு வரவழைத்துப் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். 

வேலை வாய்ப்புக் களத்தில் இன்று மென்திறன்கள் எந்த அளவுக்குப் போற்றப்படுகின்றன என்பதை நான் கண்கூடாகப் பார்த்து வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற கிட்டத்தட்ட 5,000- மாணவர்களும் நல்ல வேலைகளில் அமர்ந்துள்ளார்கள் என்பதைக் கருத்தில் கொண்டுதான், மென்திறன்கள் பற்றி இவ்வளவு ஆர்வத்துடன் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்.

சரி, தொழில் நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் இன்று அதிகமாக எதிர்பார்க்கும் மென்திறன்கள் எவை என்று பார்ப்போமா?

1. வீரியமான தொடர்பாடல் திறன் ( Effective Communication Skills)

2. சக மனிதர்களிடையே சுமுகமாக உறவாடும் திறன் ( Interpersonal Skills)

3. விரைவாகக் கற்கும் கலை ( Art of Learning)

4. ஆய்ந்து முடிவெடுக்கும் திறன் ( Analytical Skills)

5. நேர்மறைச் சிந்தனை (Positive Thinking), இன்னும் பல.

கோரா ஆங்கிலப் பதிப்பில், மென்திறன்கள் (Soft Skills) பிரிவில் நான்தான் முதன்மை எழுத்தாளனாக இருந்து வருகிறேன். அதில் கேள்விகளுக்கான என் பதில்களையும் பார்த்துப் பயனடையவும் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களின் வெற்றிக்கு என் நல்வாழ்த்துகள் !

Ameer Ali, Perungudi, via Quora

No comments:

Post a Comment