Wednesday, July 8, 2020

LinkedIn வேலை வாய்ப்புக்கான சமூகவலைதளம்

Job and skill network/LinkedIn
வேலை வாய்ப்புக்கான சமூகவலைதளம்

‘லிங்க்ட்இன்’(LinkedIn) சமூக வலைதளம் வித்தியாசமானது. இணையத்தில் செயல்படுபவர்கள் லிங்க்ட்இன் வெப்சைட்டில் கணக்கு ஏற்படுத்திக்கொண்டு, தங்கள் புரொஃபைலை அப்டேட் செய்து வைத்துக் கொண்டால், ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க முடியும். தேவை யானதைத் தேவையான சமயத்தில் சுலபமாகப் பெற்றுக்கொள்ள உதவும் வசதி களைக்கொண்ட சமூக வலைதளம் இது.
 
வேலைகள், பணியாளர்கள், பல்வேறு தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கற்றல், கற்பித்தல் போன்ற சேவைகளுக்கான வாய்ப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பொதுவான தொழில் வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். உற்பத்தித் திறனும் வர்த்தக வாய்ப்புகளும் இணைந்து இந்த வாய்ப்புகளை அதிகரிக்கும்.

‘லிங்க்ட்இன்’ அடிப்படை இலக்கு வல்லுநர்களை இணைப்பதுதான். இதன் மூலம் திறமையுள்ளவர்கள் இணைந்து கொள்ள முடிகிறது. தங்கள் திறமையைப் பிறருக்கு அளித்து, வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள முடிகிறது. ஒருவருக்கொருவர் பரிந்துரையின் பேரில் வேலை வாய்ப்புகளைப் பெற முடிகிறது.

தங்கள் புரொஃபைலைப் பதிவுசெய்து செயல்படுபவர்கள், தங்களுக்குள் குழுக் களை அமைத்துக்கொண்டு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். பெரும்பாலும் வேலை தேடும் குழுக்களாகவே இவை செயல் படுகின்றன. ஆனாலும் கல்வி, ஆராய்ச்சிகள், பலவகைத் தேடல்கள் எனப் பல பயனுள்ள குழுக்களும் இயங்கிவருகின்றன.

இந்தச் சமூகவலைதளத்தில் இணைந்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் திறமையைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் திறனையும் திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் தொழில் வாய்ப்புகளை வளம் நிறைந்ததாக மாற்ற முடியும்.

லிங்க்ட்இன் பயன் என்ன?

1. வேலைக்குச் செல்ல முதலில் நாம் தயாரிப்பது நம் சுயவிவரக் குறிப்புகள்தான். பெயர், முகவரி, அலைபேசி எண்கள், திறமை, குறிக்கோள், எதிர்பார்க்கும் சம்பளம் போன்றவை இருக்கும்.

2. ஒரு தொழில் செய்யும்போது வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக இருந்தால் பத்திரிகைகளிலும் ஆன்லைனிலும் விளம்பரம் கொடுப்போம். அதில் நம் நிறுவனத்தின் தேவையைக் குறிப்பிடுவோம்.

3. வேலை தேடுபவர்கள், வேலை கொடுப்பவர்கள் இந்த இரண்டு பிரிவினரையும் இணைக்கும் பாலமாக லிங்க்ட்இன் விளங்குகிறது. இரு பிரிவினரும் தங்கள் தேவைகளைத் தெளிவாகத் தங்கள் புரொஃபைலில் வெளியிட்டால் இருசாராரும் பயனடைய முடியும்.

4. எழுத்தாளர்கள், ஓவியர்கள், சினிமா துறையைச் சார்ந்தவர்கள், சிறிய, பெரிய தொழில் செய்பவர்கள் என அனைத்துப் பிரிவினரும் தங்களைப் பற்றிய விவரங்களை லிங்க்ட்இன் வெப்சைட்டில் பதிவுசெய்துகொண்டால், அது நிறையத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

5. பிசினஸ் செய்பவர்களாக இருந்தால் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், வேலை தேடுபவர்களாக இருந்தால் வேலை வாய்ப்பைப் பெறுவதற்குமான சிறந்த களமாக இது விளங்குகிறது.

லிங்க்ட்இன் பயன்படுத்தும் முறை

www.linkedin.com என்ற வெப்சைட் முகவரியை டைப் செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, யூசர் நேம், பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும். முகப்புத் திரையில் நம் தொடர்பில் உள்ளவர்கள் பதிவுசெய்யும் தகவல்கள் வெளிவரும். நாம் ஏதேனும் பகிர நினைத்தால், Share and Update என்ற பட்டனை க்ளிக் செய்து தகவல்களை டைப் செய்துகொள்ளலாம்.

லிங்க்ட்இன் நபரைத் தேடி இணைக்கும் முறை

லிங்க்ட்இன் வெப்சைட்டின் முகப்புத் திரையில் உள்ள தேடு பொறியில் நமக்குத் தேவையான நபரின் பெயரை டைப் செய்ய வேண்டும். நபர்கள் பட்டியலிடப்படும். அவர்கள் புகைப்படத்துக்குக் கீழே அவர்களின் பணி விவரம் தெரியும். நமக்குத் தேவையான நபரின் பெயர் மீது மவுஸை வைத்து க்ளிக் செய்தால் அவரது புரொஃபைல் வரும். யாரை இணைத்துக்கொள்ள விருப்பமோ அவருக்கு Send invitation என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அழைப்பு விடுத்த நபர், நம் அழைப்பை ஏற்றுக்கொண்டால் அவர் நம் தொடர்பில் இணைந்துவிடுவார்.

https://in.linkedin.com/

நன்றி: தமிழ் இந்து

(இது ஒரு மீழ்பதிவு)

No comments:

Post a Comment